வசனக்
கவிதை
- ஞாயிறு
மகாகவியின் வசனக் கவிதைகள் மிகவும் ரசனையானவை. ஞாயிறு என்ற தலைப்பில் உள்ள இந்தக் கவிதை , சூரியனை நோக்கி வினா தொடுக்கும் . எல்லா வினாக்களுக்கும் ஒரே பதில் ஆம் என்பது தான் . ஆனால் கேட்கப்படும் கேள்விகள் சுவையானவை ,
இருளுக்கும் உனக்கும் உள்ள உறவென்ன ? என்பதை சொல் என ஞாயிறிடம் கேட்கும் அன்பான விசாரிப்பு இது.
கவிதை ரசனையை யாரும் சொல்லுவதால் உணர முடியாது. திரும்ப திரும்ப படித்தால் நீங்களே உணர்வீர்கள்
ஞாயிறே இருளை
என்ன செய்துவிட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா?
விழுங்கி விட்டாயா?
கட்டி முத்தமிட்டு
நின் கதிர்களாகிய கைகளால்
மறைத்து விட்டாயா?
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம் நின்னைக்
காணாத மயக்கத்தால்
இருண்டிருந்ததா?
நின்னைக் கண்டவுடன்
நின்னொளி தானுங்கொண்டு
நின்னைக் கலந்துவிட்டதா?
நீங்கள் இருவரும்
ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா?
முன்னும் பின்னுமாக
வந்து உலகத்தைக் காக்கும்படி
உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?
உங்களுக்கு மரண மில்லையா?
நீங்கள் அமுதமா?
உங்களைப் புகழ்கின்றேன்,ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்
- மகாகவி பாரதியார்
No comments:
Post a Comment