மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, December 21, 2021

கிரிக்கெட் என்றொரு நேரந்தின்னி

 

17.02.20008 அன்று ஜனசக்தி நாளிதழில் வந்த எனது கட்டுரை இது . கிரிக்கெட் மீதான மோகமும் , நேர வீணடிப்பும் இன்றுவரை குறைந்த பாடில்லை . அது எப்போதும் போலவே இருக்கிறது .ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் மேட்ச் என்றிருந்த கிரிக்கெட் இன்று பல வடிவங்களை பெற்றுள்ளது . இந்தியன் பிரிமியர் லீக் (Indian Premier League) என்ற IPL T20 ஆட்டங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் ரசிகர்களை கவர்ந்திழுக்க கொண்டுவரப்பட்டவையே . எனவே அன்றும் இன்றும் இக்கட்டுரை பொருத்தமானதாகவே உள்ளது

கிரிக்கெட் என்றொரு நேரந்தின்னி





கிரிக்கெட் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிட்டனில் தோன்றியது. பிரிட்டிஷ் பேரரசின் நுகத்தடியின் கீழிருந்த சில காலனியாதிக்க நாடுகளில்தான் அது பரவியுள்ளது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம் நாட்டில் விட்டுச் சென்ற மிச்ச சொச்சத்தின் எச்சங்களில் ஒன்றுதான் கிரிக்கெட். நாம் அவர்களிடம் அடிமையாக இருந்ததின் மிகப்பெரிய அடையாளம் ஆங்கிலமும், கிரிக்கெட்டும்தான். ஆங்கில மோகம் படித்த இந்தியரை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் கிரிக்கெட் மோகம் படித்த, படிக்காத இந்தியர்கள் அனைவரையும் பிடித்திருக்கிறது. கிரிக்கெட் சீசனில் இப்பித்தம் தலைக்கேறி கிறுக்காக
அலையவிடுகிறது.

கேபிள் டிவியின் வரவிற்கு முன்னால் வானொலியில் மட்டும் கிரிக்கெட் வர்ணனை ஒலி பரப்பப்பட்டது. அப்போது அதைக்கேட்பவரின் நேரம் பெரிய அளவிற்கு வீண் போகவில்லை. கேபிள் டிவி மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கப்பட்ட பின்னர்தான் பிரச்சனை ஆரம்பித்தது. நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பு சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் கிரிக்கெட் போதையை ஊட்டுகிறது. கேமிராக்களின் புதிய புதிய தொழில்நுட்பங்கள், ஒளி பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பரிமாணங்கள் போன்றவை கிரிக்கெட்டை நேரில் பார்ப்பதை விட நேரடி ஒளிபரப்பில், அதிக கிக்கை தருகின்றன. கிரிக்கெட் மைதானத்தில் பல கேமராக்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆட்டத்தைப் படம் பிடித்து உடனுக்குடன் எடிட் செய்து ஒளிபரப்பு செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன. கண்கள் கிரிக்கெட் காட்சியிலிருந்து விலகிடாவண்ணம் எல்லாவித மாயஜால சித்து வேலைகளையும் செய்கின்றனர். கிரிக்கெட் போட்டியை வழங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பொரேட் கம்பெனிகளின் சுண்டி இழுக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் சராசரி கிரிக்கெட் ரசிகனை தொலைக்காட்சி முன் கட்டிப் போடுகின்றன.


இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் உண்டாகும் மகிழ்ச்சியை பீர் பாட்டில் உடைத்து மதுபானக் கடையில் கொண்டாடுகின்றனர். தோற்றுப் போனால் மனமுடைந்து போகின்றனர். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும்போது இந்திய அணிக்கு அதீக ஆதரவு தெரிவித்துப் பேசுவது பாகிஸ்தான் அணியை ஆவேசமாக எதிர்த்துப் பேசுவது, இதன் மூலம் தனது தேசப்பற்றை வெளியுலகிற்கு பறைசாற்றிவிட்டதாய் புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர். கடைசி நிமிடபரபரப்பு ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுவிட்டால் படபடப்பாகி இதயத்துடிப்பை நிறுத்தி விட்டு மரணமடைந்தவர்களைப் பற்றிய செய்திகளையும் பத்திரிக்கைகளில் காண்கிறோம். இவையெல்லாம் கிரிக்கெட்டின் நேரடி ஒளிபரப்பால் உண்டான அவலங்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படும் போது முழு நாளையும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னே தொலைப்பவர்கள் நம் நாட்டில் அதிகம். கிரிக்கெட் என்றொரு நேரம் தின்னியின் கோரப்பசியால் நம் காலமும் நேரமும் வீணாகின்றன; கரைந்து காணாமல் போகின்றன. ஒரு தினப்போட்டி நாட்களில் படிப்பை மறந்து கிரிக்கெட் பார்க்கும் பள்ளி, கல்லூரி, மாணவர்களின் படிப்பு பாழாகிறது; அவர்களது பொன்னான நேரம் விரயமாகிறது . உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெறும் சுகதுக்க காரியங்களுக்கு ஒருநாள் விடுப்பு எடுக்க பலமுறை யோசிக்கும் ஊழியர்கள், ஒரு தினக் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாராளமாக விடுப்பு எடுக்கும் விசித்திரத்தை கிரிக்கெட் அரங்கேற்றுகிறது. கிரிக்கெட்டால் லட்சக்கணக்கான மனித உழைப்பு நாட்கள் வீணாகின்றன.இது கவலைக்குரிய விஷயம்.




கிரிக்கெட்டிற்கு மட்டுமே அரசும், ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பு மூலம் மக்களை தொலைக்காட்சிப்பெட்டி முன்னே முடக்கிப்போட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் வாரி அள்ளுவது டிவி சேனல்களும், கார்ப்பரேட் கம்பெனிகளும், கிரிக்கெட் வீரர்களும்தான். (இதற்கு அரசியல்வாதிகள், ஆட்சியர்கள் ஆசீர்வாதம் உண்டு) இப்போதாவது கிரிக்கெட்டின் மோகவலையில் சிக்கி நேரத்தையும் காலத்தையும் தொலைக்கும் கோடிக்கணக் கானவர் மீட்கப்பட வேண்டும். கால்பந்து, ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்க செய்ய வேண்டும். இது அவசர அவசியப் பணியாகும்.

பள்ளிகளில் மாணவர்களை வெறும் மார்க் எடுக்கும் எந்திரங்களாய்க் கருதும் போக்கினை ஒழித்துக்கட்ட வேண்டும். பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களுக்கு விளையாட்டுகளில் அதிக ஆர்வத்தை உண்டாக்கி அவர்களை விளையாட்டு வீரர்களாய் உருவாக்குவதற்கான மாற்றுத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் முன்வைத்து அமல்படுத்த வேண்டும். இப்போதிருந்தே இதை ஆரம்பித்தால்தான் இன்னும் சில ஆண்டுகளிலாவது ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பை இந்தியா பெறும். இதற்கான பிரச்சாரத்தை விளையாட்டு குறித்த சிந்தனையுள்ளவர்களும் அறிவு ஜீவிகளும் மேற்கொள்ள வேண்டும்.

பி.சேர்முகப்பாண்டியன், மதுரை.

Saturday, December 11, 2021

மகாகவி பாரதியின்139 வது பிறந்த நாள் - வையத் தலைமை கொள்

 


  வையத் தலைமை கொள்


பாரதியின் பிறந்த நாள் 11.12.1882.  இன்று (11.12.2021) பாரதிக்கு 139 வது பிறந்த நாள்.

மகாகவி பாரதியின்  புதிய ஆத்திசூடி தந்த அற்புதமான வரி தான் "வையத் தலைமை கொள்" இது.முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை ஈர்க்கும் வரி. சிந்தக்க வைக்கும் வரி. 

அவ்வையின் ஆத்திசூடியை ஆரம்ப வகுப்புகளில் படித்திருப்போம்..  அதில் தையல் சொல் கேளேல் என்கிறார். அதாவது பெண்களின் சொற்களைக் கேட்டு அதன்படி நடக்காதே என்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் தோன்றாத காலம் அது . பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம். எனவே அது அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு. 

ஆனால் மகாகவி பாரதி நவீனக் கவிஞர்; புதுமைக் கவிஞர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம் என்று வாழ்வோம் இந்த நாட்டிலே என்று உரத்தகுரலில் ஒலித்தவன் . எனவே தனது புதிய ஆத்திசூடியில் தையலை உயர்வு செய் என்கிறான். காலத்துக்கு  ஒவ்வாத கருத்துக்களை புறந்தள்ளியவன் பாரதி. "வேதம்" மாற்றவே முடியாதது, மாற்றினால் அதன் புனிதம் கெட்டுவிடும்  என்று மற்றவர்கள் எண்ணிக்கொண்டு  இருந்த போது  வேதம் புதுமைசெய் என்று சொன்னவன் அல்லவா அவன். கோபம் கூடாது என்றும்;  அது தன்னழிவை உண்டாக்கும் என்று காலம்காலமாய்  சொல்லிவரும் தமிழ்  சமூகத்தை நோக்கி ரௌத்திரம் பழகு என்று சொன்னவன் பாரதி. 

எனவே தற்கால சூழலுக்கு ஏற்ப  புதிய ஆத்திசூடியில் பாரதி எழுதிய வரியே" வையத் தலைமை கொள். வையம் என்றால் உலகம் என்று பெருள் .இவ்வுலகை தலைமை ஏற்று நடத்து என்கிறான் பாரதி. உலகம் என்பது  எல்லைக் கோடுகளால் தேசங்கள் என்ற பெயரில்  பலவாக பிரிந்து கிடக்கிறது.  பல்வேறு ஆட்சிமுறைகளை கடைப்பிடிக்கக்கூடிய நாடுகளின் தொகுப்பாக உள்ள இவ்வுலகிற்கு  ஒற்றைத் தலைமை சாத்தியமா என்று கேள்வி வருகிறது.

இப்படி ஒரு கேள்வி எழும் தெரியாமலா வையத் தலைமை கொள்' என்கிறான்?  பாரதி மிகவும் நுட்பமான கவிஞன். பலமொழிகள் அறிந்தவன். பன்முகத்தன்மை கொண்ட மகாகவி. எனவே நேரடியான அர்த்தத்தோடு மட்டுமின்றி  புதுமையான கோணத்தில்  பல்வேறு அர்த்தங்கள் தருகிற மாதிரி என்று சொல்கிறான். 

ஒருவர் எங்கிருந்தாலும் குறைந்தபட்சம்   அவரை சுற்றி உள்ளவர்களின்  நலம் பேணி அவர்களை மிகச் சரியான திசையில்  வழிநடத்திச் செல்ல வேண்டும் .அதுதான் உண்மையான தலைமைப் பண்பு. 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த உலகம் உண்டு. அதை அவர்களே உருவாக்கி கொள்கின்றனர். அதில்  வாழ்கின்றனர்  .அந்த உலகிற்கு அவர்களே  தலைமை ஏற்றும் நடத்த விரும்புகின்றனர். பணிசெய்யும்  இடமே ஒருவருக்கு உலகாக இருக்கும். அந்த இடத்தில் எல்லோரையும் வழிநடத்தும் தலைவனாக அங்கு அவர் இருக்கவேண்டும்.

 இதுபோலவே ஒருவர் தான் செய்துவரும்  தொழிலில், பணியாற்றும் இடத்தில்,விரும்பி செயலாற்றும் அரங்கில், அரசியல் தளத்தில்;  வாழுகின்ற ஊரில்,பகுதியில்  எல்லோரையும் வழிநடத்தும் தலைவனாக விளங்க வேண்டும் என்பதையே பாரதி சொல்கிறான். 

தலைமை ஏற்று நடத்த முதலில் தேவையானவை எவை தெரியுமா? பிறருக்கு உதவும் நல்ல மனம். எல்லோரையும் சமமாக நடத்துதல்;  தனது நலத்தை விட பிறரது நலனில் அக்கறை காட்டுதல் போன்றவையே . தனது விநாயகர் நான்கு மணிமாலை என்ற பக்தி பாடலில்  ஒரு தலைவனின் கடமை குறித்து பட்டியலிடுகிறான் மகாகவி பாரதி.

கடமையாவன; தன்னைக் கட்டுதல் 

பிறர்துயர் தீர்த்தல்; பிறர் நலம் வேண்டுதல்.

மேலும் ஒருதலைவன் தப்படி இருக்க வேண்டும்  என்பதை

 யாருக்கும் எளியனாய், 

யாருக்கும் வலியனாய், 

யாருக்கும் அன்பனாய் 

யாருக்கும் இனியனாய்

இருக்க வேண்டும் என்கிறான்.

 ஒருதலைவன் எளியவனாக இருக்கவேண்டும், தன்னை சார்ந்தவர்களுக்கு ஒரு கொடுமை நடக்கும் போது தட்டிக் கேட்கும் வீரனாகவும் எல்லோரிடமும் ஒரேமாதிரியான   அன்பு கொண்டவனாகவும்  இன்சொல் பேசுகிறவனாகவும் இருக்க வேண்டும் என்பதையே தனது பாடலில் குறிப்பிடுகிறார் .

மகாகவியின் புதிய ஆத்திசூடியை படித்து அதன்படி நடந்தால் தலைமை கொள்ளும் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். எங்கு இருந்தாலும் தனக்கென  ஒருதனித்துவம் மிக்க ஒரு இடத்தை உண்டாக்கி  தலைநிமிர்ந்து வாழலாம்.

 எண்ணங்களே வாழ்க்கை, நல்ல எண்ணங்கள் உயர்வு தரும்.. தீய எண்ணங்கள் தாழ்வை உண்டாக்கும். இதையே புதிய ஆத்திசூடியில் எண்ணுவது உயர்வு என்கிறான் பாரதி.

தன்னைச் சார்ந்த பிறருக்கு கொடுமை ஒன்று நடக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா  இராதே; நிமிர்ந்து நின்று தோளுயர்த்தி போராடு எதிர்த்து கேள் என்பதை 

"குன்றென நிமிர்ந்து நில்"

 "கொடுமையை எதிர்த்து நில்" 

என்கிறான் பாரதி

அதுபோலவே  புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும் . புத்தகவாசிப்பு உள்ளவர்கள்;  எதிலும் ஆழ்ந்த ஞானம் பெற்றவர்களே ஏற்புடைய தலைமை பண்பு கொண்ட தலைவராக ஆகமுடியும் என்பதை

"நுனியளவு செல்"

 "நூலினைப் பகுத்துணர்"

என்கிறான் மகாகவி பாரதி.

வையத்தலைமை கொள் என்று மட்டும் செல்லாமல் அதனை அடைய நல்லதொரு வழிகாட்டியாகவும் பாதி இருக்கிறான். எனவே பாரதியின் கவிதைகளைப் படிப்போம்;தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வோம்

பாரதியின்  புதிய ஆதிசூடியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவோம். தலைமைப் பண்புகள் கொண்டவர்கள் நிறைந்த தமிழ் சமூகத்தை உருவாக்க நம்மாலான பணி இது.


வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த அனைத்தும் அறிந்து 

வளர் மொழி வாழியவே!..


வாழிய நற்றமிழ்; 

வாழிய நற்றமிழர்;

வாழிய பாரதி