மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, December 21, 2021

கிரிக்கெட் என்றொரு நேரந்தின்னி

 

17.02.20008 அன்று ஜனசக்தி நாளிதழில் வந்த எனது கட்டுரை இது . கிரிக்கெட் மீதான மோகமும் , நேர வீணடிப்பும் இன்றுவரை குறைந்த பாடில்லை . அது எப்போதும் போலவே இருக்கிறது .ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் மேட்ச் என்றிருந்த கிரிக்கெட் இன்று பல வடிவங்களை பெற்றுள்ளது . இந்தியன் பிரிமியர் லீக் (Indian Premier League) என்ற IPL T20 ஆட்டங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் ரசிகர்களை கவர்ந்திழுக்க கொண்டுவரப்பட்டவையே . எனவே அன்றும் இன்றும் இக்கட்டுரை பொருத்தமானதாகவே உள்ளது

கிரிக்கெட் என்றொரு நேரந்தின்னி





கிரிக்கெட் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிட்டனில் தோன்றியது. பிரிட்டிஷ் பேரரசின் நுகத்தடியின் கீழிருந்த சில காலனியாதிக்க நாடுகளில்தான் அது பரவியுள்ளது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம் நாட்டில் விட்டுச் சென்ற மிச்ச சொச்சத்தின் எச்சங்களில் ஒன்றுதான் கிரிக்கெட். நாம் அவர்களிடம் அடிமையாக இருந்ததின் மிகப்பெரிய அடையாளம் ஆங்கிலமும், கிரிக்கெட்டும்தான். ஆங்கில மோகம் படித்த இந்தியரை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் கிரிக்கெட் மோகம் படித்த, படிக்காத இந்தியர்கள் அனைவரையும் பிடித்திருக்கிறது. கிரிக்கெட் சீசனில் இப்பித்தம் தலைக்கேறி கிறுக்காக
அலையவிடுகிறது.

கேபிள் டிவியின் வரவிற்கு முன்னால் வானொலியில் மட்டும் கிரிக்கெட் வர்ணனை ஒலி பரப்பப்பட்டது. அப்போது அதைக்கேட்பவரின் நேரம் பெரிய அளவிற்கு வீண் போகவில்லை. கேபிள் டிவி மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கப்பட்ட பின்னர்தான் பிரச்சனை ஆரம்பித்தது. நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பு சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் கிரிக்கெட் போதையை ஊட்டுகிறது. கேமிராக்களின் புதிய புதிய தொழில்நுட்பங்கள், ஒளி பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பரிமாணங்கள் போன்றவை கிரிக்கெட்டை நேரில் பார்ப்பதை விட நேரடி ஒளிபரப்பில், அதிக கிக்கை தருகின்றன. கிரிக்கெட் மைதானத்தில் பல கேமராக்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆட்டத்தைப் படம் பிடித்து உடனுக்குடன் எடிட் செய்து ஒளிபரப்பு செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன. கண்கள் கிரிக்கெட் காட்சியிலிருந்து விலகிடாவண்ணம் எல்லாவித மாயஜால சித்து வேலைகளையும் செய்கின்றனர். கிரிக்கெட் போட்டியை வழங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பொரேட் கம்பெனிகளின் சுண்டி இழுக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் சராசரி கிரிக்கெட் ரசிகனை தொலைக்காட்சி முன் கட்டிப் போடுகின்றன.


இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் உண்டாகும் மகிழ்ச்சியை பீர் பாட்டில் உடைத்து மதுபானக் கடையில் கொண்டாடுகின்றனர். தோற்றுப் போனால் மனமுடைந்து போகின்றனர். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும்போது இந்திய அணிக்கு அதீக ஆதரவு தெரிவித்துப் பேசுவது பாகிஸ்தான் அணியை ஆவேசமாக எதிர்த்துப் பேசுவது, இதன் மூலம் தனது தேசப்பற்றை வெளியுலகிற்கு பறைசாற்றிவிட்டதாய் புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர். கடைசி நிமிடபரபரப்பு ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுவிட்டால் படபடப்பாகி இதயத்துடிப்பை நிறுத்தி விட்டு மரணமடைந்தவர்களைப் பற்றிய செய்திகளையும் பத்திரிக்கைகளில் காண்கிறோம். இவையெல்லாம் கிரிக்கெட்டின் நேரடி ஒளிபரப்பால் உண்டான அவலங்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படும் போது முழு நாளையும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னே தொலைப்பவர்கள் நம் நாட்டில் அதிகம். கிரிக்கெட் என்றொரு நேரம் தின்னியின் கோரப்பசியால் நம் காலமும் நேரமும் வீணாகின்றன; கரைந்து காணாமல் போகின்றன. ஒரு தினப்போட்டி நாட்களில் படிப்பை மறந்து கிரிக்கெட் பார்க்கும் பள்ளி, கல்லூரி, மாணவர்களின் படிப்பு பாழாகிறது; அவர்களது பொன்னான நேரம் விரயமாகிறது . உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெறும் சுகதுக்க காரியங்களுக்கு ஒருநாள் விடுப்பு எடுக்க பலமுறை யோசிக்கும் ஊழியர்கள், ஒரு தினக் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாராளமாக விடுப்பு எடுக்கும் விசித்திரத்தை கிரிக்கெட் அரங்கேற்றுகிறது. கிரிக்கெட்டால் லட்சக்கணக்கான மனித உழைப்பு நாட்கள் வீணாகின்றன.இது கவலைக்குரிய விஷயம்.




கிரிக்கெட்டிற்கு மட்டுமே அரசும், ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பு மூலம் மக்களை தொலைக்காட்சிப்பெட்டி முன்னே முடக்கிப்போட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் வாரி அள்ளுவது டிவி சேனல்களும், கார்ப்பரேட் கம்பெனிகளும், கிரிக்கெட் வீரர்களும்தான். (இதற்கு அரசியல்வாதிகள், ஆட்சியர்கள் ஆசீர்வாதம் உண்டு) இப்போதாவது கிரிக்கெட்டின் மோகவலையில் சிக்கி நேரத்தையும் காலத்தையும் தொலைக்கும் கோடிக்கணக் கானவர் மீட்கப்பட வேண்டும். கால்பந்து, ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்க செய்ய வேண்டும். இது அவசர அவசியப் பணியாகும்.

பள்ளிகளில் மாணவர்களை வெறும் மார்க் எடுக்கும் எந்திரங்களாய்க் கருதும் போக்கினை ஒழித்துக்கட்ட வேண்டும். பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களுக்கு விளையாட்டுகளில் அதிக ஆர்வத்தை உண்டாக்கி அவர்களை விளையாட்டு வீரர்களாய் உருவாக்குவதற்கான மாற்றுத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் முன்வைத்து அமல்படுத்த வேண்டும். இப்போதிருந்தே இதை ஆரம்பித்தால்தான் இன்னும் சில ஆண்டுகளிலாவது ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பை இந்தியா பெறும். இதற்கான பிரச்சாரத்தை விளையாட்டு குறித்த சிந்தனையுள்ளவர்களும் அறிவு ஜீவிகளும் மேற்கொள்ள வேண்டும்.

பி.சேர்முகப்பாண்டியன், மதுரை.

1 comment:

  1. Sir
    அனைத்து விளையாட்டுகளுக்கும்
    முக்கியத்துவம் கொடுக்க தங்கள் சொல்லியவிதம் அருமை🙏

    ReplyDelete