மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, February 21, 2023

உலகத் தாய் மொழி தினமும் (21.02.2023 ) தமிழர் தம் கடமையும்

 

உலகத் தாய் மொழி தினமும் (21.02.2023 ) 

தமிழர் தம் கடமையும்



சர்வதேச தாய் மொழி நாளின்  வரலாறு            

  1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரமடைந்தன . அப்போது பாகிஸ்தான் நாடு  மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ( இன்றைய பங்களாதேஷ்) என இரண்டு பகுதிகாளாக இருந்தது . உருதுமொழியே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அன்றைய ஒன்றுபட்ட பாகிஸ்தான் அரசு அறிவித்த போது   வங்காள  மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பான்மை கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அதைக் கடுமையாக எதிர்த்து போராடினர் . போராட்டம் கிழக்கு பாகிஸ்தான் முழுதும் பரவியது .21.02.1952 அன்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பிரமாண்டப் பேரணியை கலைக்க காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது .அதில்  அப்துல் சலாம் , அப்துல் பர்கத் ,ரபீக் உதின் அஹமது, அப்துல் ஜபார், ஷபியூர் ரஹ்மான்  என்ற ஐந்து மாணவர்கள்   மரணமடைந்தனர் . தங்களது தாய் மொழியின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த இந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய் மொழி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ(UNESCO)  அமைப்பு  விடுத்த அறைகூவல் படி உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 தேதியன்று  சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

 என் மொழி தமிழ்! நான் தமிழன்!!

 நம் மொழி தமிழ் மொழி .தமிழர் என்பது நம் அடையாளம். தமிழ் உலகின் மூத்த மொழி. இலக்கிய இன்பத்தை வாரி வாரி வழங்கும் வள்ளல் மொழி .உயிருக்கு நேரான மொழி இது .”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் பாரதி.

 வாழிய செந்தமிழ் ;வாழிய நற்றமிழர் ;வாழிய பாரத மணித்திருநாடு என்று பாரதி வரிசை படுத்தி அடுக்குவதன் அர்த்தமே தேசியம் என்பது  நாம்  கடைசியாக வைத்துக்கொள்ள வேண்டிய அடையாளம். எனவே என் மொழி தமிழ் , நான் தமிழன். அதன்பின்னரே மற்றேல்லாம்  என்ற கோட்பாட்டை   ஒவ்வொரு தமிழரும் உயிர் மூச்சென கொள்ள வேண்டும் .

  திருதராஷ்டிர ஆலிங்கனம் என்றால் என்ன ? 

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு .குருசேத்திரப் போர் முடிவுக்கு வந்தது . கௌரவர்கள் கொல்லப்பட்டனர் . வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஆட்சிபீடம் அமரப் போகிறார்கள் . கௌரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் பார்வையற்றவர் . அப்போது  அங்கு அமர்ந்து  இருக்கிறார். தனக்கு பிரியமான மகன் துரியோதனனைக்  கொன்ற பீமன் மீது அவருக்குள்ளே  கடுங்கோபம்; வெறுப்பு. திருதராஷ்டிரன் ஒரு வரம் பெற்றவர் . அவர் யாரை வெறுப்புடன் ஆரக்கட்டி தழுவிக் கொள்கிறாரோ அவர் அப்பளமாக நொறுங்கிப் போவார்..அதற்கு  திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று பெயர்.

 இதை நன்கு அறிந்தவன்  கிருஷ்ணன். பாண்டவர்களில் ஒவ்வொருவராக திருதராஷ்டிரனிடம் அறிமுகம் செய்து ஆசி பெறவைத்த கிருஷ்ணன் , பீமனின் முறை வந்த போது , பீமன் போல் செய்யப்பட்ட ஒரு சிலையை திருதராஷ்டிரன்  முன் தள்ளிவிட்டதாகவும் , அவர் பீமன் என நினைத்து அச்சிலையை கட்டித் தழுவியதாகவும் அதன் மூலம் பீமன் கிருஷ்ணனால் காப்பற்றப்பட்டான் என்றும் மகாபாரதம் சொல்கிறது .

உலக மகா நடிப்பை  புரிந்துகொள்வோம் 

 மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு ஒரேநாடு ;ஒரே மொழி; ஒரே பண்பாடு என்ற கொள்கையை முன்னிறுத்தி வருவது யாவரும் அறிந்த ஒன்று .  அது இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாகக்   கொண்டுவர விரும்பும் ஹிந்தி மொழித் திணிப்பை கடுமையாக  எதிர்க்கும் தமிழர்கள் மீதும் தமிழ் மீதும்  உள்ளுக்குள்ளே வெறுப்பு இருந்தாலும் , தமிழ் மீது அதிகக் காதல் கொண்டது போல் நடிக்கிறது . காசியில் தமிழ் சங்கமம் நடத்துகிறது . பிரதமர் உலகில் மூத்த மொழி தமிழ் மொழி என்கிறார்; தமிழர்களை கவருவதாக நினைத்து தமிழில் பேசியும்  திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் சொல்லியும்  தமிழ்க்கொலை செய்கிறார். 

இவர்கள் நடிப்பில் ஏமாறாமல் உஷாராக இருப்போம் :

இவை போன்று  தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் காட்டும் கரிசனமும்  “திருதராஷ்டிர ஆலிங்கனத்துக்கான” முன்னோட்டமே என்பதை தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  இவர்களது நடிப்பில் மயங்கி ஏமாந்து விடாமல் உஷாராக இருப்போம் என ஒவ்வொரு தமிழரும் இந்த உலகத் தாய் மொழி தினத்தன்று சபதமேற்ப்போம். என் மொழி! என் பண்பாடு!! என உரக்க சொல்வோம். அதை எந்நாளும் காக்க இந்நாளில் உறுதி ஏற்ப்போம்  

 ...பி.சேர்முக பாண்டியன்