மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, November 03, 2021

“ஜெய் பீம்” தமிழ் சினிமா உலகில் வாராது வந்த மாமணி - சினிமா விமர்சனம்

 

*“ஜெய் பீம்” தமிழ் சினிமா உலகில் வாராது வந்த மாமணி*

ஜோதிகா & சூர்யா தயாரிப்பில்  அமேசான் பிரைம் OTT  யில் வெளியான ஜெய் பீம்வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை நேற்று பார்த்தேன்.  

பழங்குடி மக்களான இருளர் சமூகத்தை சார்த்த  இளைஞர்கள் மூவர் ஒரு பணக்காரர் வீட்டில் நகை திருடியதாகக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர் .  விசாரணை என்ற பெயரில்    அவர்களை  லாக்கப்பில் அடைத்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு  கடுமையாக     சித்திரவதை  செய்து வந்த  போலீஸ் அவர்கள்  மூவரும் லாக்கப்பிலிருந்து ஒரு நாள் இரவில்  தப்பி விட்டதாக சொல்கிறது.. அதில் ஒருவன் ராசாக்கண்ணு . அவன மனைவி செங்கேணி  .தவறு ஏதும் செய்யாத தனது அப்பாவிக் கணவனைத்   தேடி அலைகிறாள் .  லாக்கப்பிலிருந்து தப்பி ஓடியதற்காக எல்லா சாட்சியங்களும் ஆவணங்களும்   கனகச்சிதமாக  போலீசால் ஜோடிக்கப்பட்டிருந்ததால்  எந்த ஒரு வழக்கறிஞரும் இந்த கேசில் தலையிட வழக்காட முன்வரவில்லை . செங்கேணி  அறிவொளி இயக்கம்  மூலம் தங்களுக்கு பாடம் எடுத்த  ஒரு தோழியரின் வழிகாட்டலில்   கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களின் உதவியால்   சென்னையில்  உள்ள வக்கீல் சந்துருவை சந்திக்கின்றனர் . கேசின் உண்மை தன்மையை உணர்ந்து கொண்ட சந்துரு காணாமல் போன இளைஞர்களை கண்டுபிடிக்க    செங்கேணி மூலம் சென்னை உயர் நீதி மன்றத்தில்  ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன்  ( ஆள் கொணர்வு மனு ) கொடுக்கிறார் . ராசாக்கண்ணுவும் அவர்களது நண்பர்களும் என்ன ஆனார்கள் என்பதை அழுத்தமான  திரைமொழியில்  சொல்கிறது இப்படம் .

சென்னை உயர்நீதி மன்றத்தில்  1990 களில்  நடைபெற்ற  கேசின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது.  பொதுவாக உண்மை சம்பவத்தின் மீது நடந்த கோர்ட் கேஸை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள்  . வெகுஜனங்களை கவராத  ஆவணப்படங்கள்  போலவே இருக்கும் . ஆனால் இந்தப்படம் முதலிலிருந்து கடைசி வரை விறுவிறுப்பு குறையாத த்ரில்லர் படம் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . இதை ஒரு லீகல் த்ரில்லர் ( Legal Thriller ) என்று கூடச்  சொல்லலாம்.

 

தண்டனை முடித்து  ஜெயிலில் இருந்து வெளிவரும்  கைதிகளை ஜாதி ரீதியாகப் பிரித்து தாழ்த்தப்பட்டவர்கள் ,பழங்குடியினர் மீது மட்டும்  பொய்க்  கேஸ் போடுகிற    காவல்துறையின்   ஜாதிய பாகுபாட்டை   காட்சிப்படுத்துவதன் மூலம் படம் துவங்கிறது .இயற்கையோடு  இசைந்து  நேர்மையாக வாழும் இருளர் சமூகம்   பொது சமூகத்தால் தீண்டத்தகாதவர்களாக , திருடர்களாகவே  பார்க்கப்படுகிறது. அரசும் அரசு இயந்திரங்களும் காவல்துறையும் அவர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை . தற்காத்துக்கொள்ள இயலாத,  நாதியற்ற, ஒடுக்கப்பட்ட இருளர் சமூகத்தில்  இருந்து  வந்த ஒரு பெண்  தனது கணவனை  கண்டுப்பிடிக்க  வேண்டி நீதியின் நெடுங்கதவுகளை  தட்டித் திறக்கவைக்கிறாள் . அதற்கு துணையாக வக்கீல் சந்துரு இருக்கிறார்.

பள்ளி விழாவில் கலந்து கொண்ட சந்துரு  குழந்தைகள் எல்லா தேசியத் தலைவர்கள் வேடம் பூண்டு வருவதை கண்டு அம்பேத்கார் மட்டும் இல்லையே என்கிறார் . பொது சமூகத்தை நோக்கி வீசும் கேள்வி  இது .   சமூக நீதி பற்றி சிந்திக்க தூண்டும் இம்மாதிரியான வசனங்கள் அங்காங்கே வருகின்றன.

இந்த படத்தில்  திரைக்கதைதான்   நாயகன் நாயகன் எல்லாமே . செங்கேணியாக நடித்த   லிஜோமோல் ஜோஸ்   பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் . படம் முழுக்க வந்து செல்கிறார்  அவருக்கு  இந்த ஆண்டின் சிறந்த நடிகை தரப்படவில்லை என்றால் விருதுக்கான அர்த்தத்தை அது இழந்துவிடும் . மணிகண்டன் என்ற நடிகர் ராசாக்கண்ணாக  நடித்திருக்கிறார் . இருளர் இனத்து இளைஞனின் இயல்பான அன்பை மகிழ்ச்சியை, போலிசால் படும்  துயரத்தை, வலியை கண்முன்னே நிறுத்துகிறார் . சந்துருவாக வரும் சூரியா  அப்பாத்திரத்திற்கு  முழுதாக பொருந்தியிருக்கிறார் . போலிஸ் அதிகாரி நம்பெருமாள்சாமியாக வரும் பிரகாஷ்ராஜ்  உள்ளிட்ட அனைவரும் தங்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் .போலீஸாக நடித்திருப்பவர்கள் கனவிலும் வந்து நம்மை மிரட்டுகிறார்கள் .  

இப்படி ஒரு புதிய  கதைக்களத்தை தேர்வு செய்து  அதை உயிர்த்துடிப்பான திரைக்காவியமாக மாற்றிய பெருமை இயக்குனர் டி.ஜே ஞானவேலுவையே  சாரும் . அவருக்கு  பாராட்டுக்கள் .வெகுஜன ஊடகமான தமிழ் சினிமாவில் எந்த ஒரு கமர்சியல் தன்மை ( காதல் , சண்டை குத்துப்பாட்டு போன்ற ஆட்டம் பாட்டம் என்ற மசாலாத்தன்மை )   இல்லாமல் , வலிய திணிக்கப்பட்டகாமெடி ஏதுமில்லாமல் ஒரு படத்தை வெற்றிகரமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல். முதல் படத்தின் மூலம்  தமிழ் திரை உலகில்  ஒரு முன்னணி இயக்குனராக ஆகியிருக்கிறார் . அவரின் அடுத்த படம் குறித்த ரசிகர்களின்  எதிர்பார்ப்பு அவருக்கு பாரமாகவே இருக்கும் .. அதிலிருந்து மீண்டு இன்னும் சிறந்த பல தமிழ் படங்களை தரவேண்டும் என அவரை வாழ்த்துவோம். இதை துணிச்சலோடு தயாரித்த தம்பதியர் நடிகர்கள் ஜோதிகா- சூரியா பாராட்டுக்குரியவர்கள்

சீன் ரோல்டன் இசையில் எல்லாப் பாடல்களும் அருமை. குறிப்பாக ராஜு முருகன் எழுதிய “தலை கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்”  பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ரகம் . படத்தோடு சேர்ந்து பயணிக்க கதிரின் ஒளிப்பதிவும் துணை செய்கிறது, ஒவ்வொரு காட்சியையும்  மேருகேற்றுகிறது. 

“ஜெய் பீம்” தமிழ் சினிமா உலகத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்திய படம், மொத்தத்தில் கொண்டாடப்பட வேண்டிய தமிழ் சினிமா இது .