மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Saturday, September 11, 2021

என்னுள் நுழைந்த பாரதி -மாற்றமும் ஏற்றமும் தந்தவன்

                                        என்னுள் நுழைந்த பாரதியின் வயது 39

மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் (11.09.2021)

இன்று (11.09.2021) மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் . பாரதி மறைவு நாள் செப்டெம்பர் 12,1921 என விக்கிப்பீடியா மட்டுமின்றி பல புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தாலும்  , பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ.ரா என்று அழைக்கப்பட்ட வ.ராமசாமி  பாரதியாரின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில் பாரதி செப்டெம்பர் 11,1921ல் மறைந்ததாகவே எழுதுகிறார். எனவே 11.09.1921 ஐ மகாகவி மறைந்த நாளாக எடுத்துக்கொள்வதே சரி.

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் 11.12.1882.  எனவே  1982 ல் பாரதியின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்போது எம் .ஜி ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது .பாரதியின் கவிதை நூல்கள் மலிவு விலையில் பிரசுரம் செய்யப்பட்டு தமிழகம் எங்கும் கிடைத்துவந்தன.  அந்த நேரம்  கடலாடி என்ற ஊரில் பணியாற்றி வந்தேன். ஆங்கில தினசரிகள்,  நாவல்கள் படிப்பதை  மட்டுமே பொழுது போக்காய் வைத்திருந்தேன். தெரியாத வார்த்தைகளே ஆங்கிலத்தில் இல்லை என்கிற போட்டி எனக்கும்  நண்பர் ஒருவருக்கிடையே இருக்கும். அதற்காகவே படித்த நான் வேறொன்றும் அறியாதவனாகவே இருந்தேன் என்பதே உண்மை.

 என் நண்பன் ஹரிதாஸ் பாரதி நூற்றாண்டு பிறந்த  தினத்தன்று (11.12.1982)  பாரதியின் கவிதை தொகுப்பை எனக்கு அன்பளிப்பாய் தந்து *பாரதியை படி; அது உனக்குள் ஒரு வெளிச்சத்தை பரப்பும்*  என்று சொன்னான். அவன் சொன்னதன் அர்த்தம் அப்போது பிடிபடவில்லை. பாரதியின் கவிதைகளை படிக்க படிக்க  அவனது  வரிகளில் உள்ள ஈர்ப்பை என்னால் விரைவில் உணர முடிந்தது. என்னுள் அவன் நுழைந்து கொண்டான். என்னுள் ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தை என்னால் உணர முடிந்தது. எனக்கு பாரதியை அறிமுகப்படுத்திய நண்பன் ஹரிதாஸ் வங்கி ஒன்றில்  அதிகாரியாக பணியாற்றியபோது சாலை விபத்தில் மரணமடைந்தது என் சோகமே. பாரதியை படிக்கும் போதும் அவனைப்பற்றி சிந்திக்கும் போதும்  ஹரிதாஸ் பற்றிய நினைவு வரும் எனக்கு.


பாரதியே எனக்கு   தமிழ் மீது  ஒரு வித ரசனையை பற்றை பிடிப்பைத் தந்தான். புத்தகங்களை  வாசிக்கும் நேசிக்கும் நண்பர்கள் மூலம் சிறந்த தமிழ் நூல்களை கண்டடைந்து வாசிக்க ஆரம்பித்தது பாரதியை படித்த பின்னால் தான்.

 மதுரையை சொந்த ஊராக கொண்ட வங்கி ஊழியர்கள் விடுமுறையில்  மதுரைக்கு  சென்று  வாடகை நூலகம் மூலம் வாங்கி வந்து எனக்கு தந்த ஆங்கில , தமிழ் நாவல்கள் குப்பையே என்பதை அப்போது தான் உணர முடிந்தது.


அன்று என்னுள் நுழைந்த பாரதிக்கு இன்றைய வயது 39. பாரதி இந்த பூமியில் வாழ்ந்த காலமும்  39 ஆண்டுகளே. பாரதி மறைந்து இன்றோடு நூறாண்டுகள் முடிந்தாலும்   என்னைப்போன்ற இலட்சோப லட்சம் தமிழர்களின் உள்ளங்களில் அவன் தனது  கவிதைகள் மூலம் சிம்மாசனம் போட்டு  அமர்ந்திருக்கிறான். தரணி உள்ளவரை தமிழ் இருக்கும் . தமிழ் இருக்கும் வரை தமிழர்கள் உள்ளங்களில் பாரதி  தனது கவிதைகள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

தமிழ்த்தாய் தந்த அருந்தவ புதல்வன் பாரதி. அவன் மரணமில்லா மாமனிதன் .என்னுள் மாற்றமும் சிந்தனையில் ஏற்றமும் தந்த  பாரதியின் புகழ் ஓங்குக.
 

"அன்பினைக் கைக்கொள்ளடா
இதை அவனிக்கிங்கு ஓதிடடா
துன்பம் இனி இல்லை
உன் துயரங்கள் ஒழிந்ததடா"
...மகாகவி பாரதி 

மானுட அறத்தில் சிறந்தது பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே. பாரதி காட்டும் வழியில்  அன்பினைக் கைக்கொள்வோம். நம்மை பீடிக்கும் துன்ப துயரங்களை விரட்டுவோம். 


பி.சேர்முக பாண்டியன்
@மதுரை