மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, December 11, 2022

மகாகவி பாரதியின் பார்வையில் மதங்கள்

                          மகாகவி பாரதியின் பார்வையில் மதங்கள்

மகாகவி பாரதி மத ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தவன். மத பேதங்களை அடியோடு வெறுப்பவன் . எல்லா மதங்களையும் சமமாக பாவிக்கும் சர்வ சமய சமரசக் கொள்கையை நேசிப்பவன் . எல்லா தெய்வங்கள் மீதும்  கவிதைகள் செய்து களிப்புற்றவன் . ஆனாலும் அவனுடைய கவிதைகளிலும் கட்டுரை தொகுப்புகளிலும் மதம் குறித்த பார்வையில் தெளிவிருந்தது .

 

 “உலகம் முழுதுக்கும் தெய்வம் ஒன்றே . அதுவே எல்லா மதங்களுக்கும் பொதுவான இறைவனாக வியாபித்திருக்கிறது  . அதுவே  பரம்பொருள் ஆகும். எனவே மத ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் . பெண்ணடிமைத்தனம் மண்மூடிப் போகவேண்டும்” என்ற  மகாகவியின் மதங்கள் குறித்த பார்வை  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்   அதன் அரசியல் கரமான பிஜேபி கட்சியின் மதவாத கொள்கைக்கு நேர் எதிரானது  . ஆனால் அந்த அமைப்புகள்  மகாகவியை ஹிந்துக் கவிஞன் என்று  கொண்டாடுகின்றன .அவனது பிறந்த நாளை பிராந்திய மொழிகளுக்கான உற்சவ நாளாக உயர்  கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்போவதாக   சொல்கின்றன. இது மிகப் பெரிய நகை முரண்.   

 

ஆர்.எஸ்.எஸ்க்கும் , பிஜேபிக்கும் சுட்டிக்காட்டும் அளவில் சுதந்திர  போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களோ , ஆளுமை மிக்க பிரபலமான அரசியல் தலைவர்களோ , கவிஞர்களோ இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை . அதற்கான பஞ்சத்தை ஈடுகட்ட மக்கள் மத்தியில் பிரபலமான அரசியல் தலைவர்களையும், சமூக போராளிகளையும், கவிஞர்களையும் தம்மவர்களாக காட்டிக்கொள்ள சகலவித பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . அவர்களை தங்களவர்களாக காட்ட  பொய்க் கதைகளையும் புனைசுருட்டுக்களையும் அவிழ்த்து விடுகின்றனர் .

 

சர்தார் வல்லபபாய் பட்டேலை தங்களது தலைவராக காட்ட அவருக்கு குஜராத் நர்மதை நதிக்கரையில்  600 அடி உயரத்தில்  3000 கொடி ரூபாய் செலவில் வெங்கலச்சிலை எழுப்பியுள்ளனர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவுக்கு பதிலாக சர்தார் வல்லபபாய் பட்டேல் வந்திருந்தால்  நாடு எப்பவோ வளர்ச்சி பெற்ற நாடாக ஆகியிருக்கும் என புருடா விடுகின்றனர் . நேருவுக்கு நேர் எதிராக அவரை நிறுத்துகின்றனர் .பட்டேல் முதல் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் ஆர்.எஸ்.எஸ் மதவாத பிளவுவாத ஆபத்தான அமைப்பு என்பதை காரணம் காட்டி அதை அவர் தடை செய்தார் என்பதை  வசதியாக மறைத்து அவரை தங்களது ஆளாக காட்டிவது மிகவும்கேலிக்கூத்தானது .

 

சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸின் பிற்போக்கு கொள்கைகளை அம்பலப்படுத்தி அதன் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டியவர் . இந்துமதத்தின் சாதிய  கட்டமைப்பினை வெறுத்து ஒதுக்கிய அவர் மனம் வெறுத்துப்போய்  புத்த மதத்தை தழுவியவர் . சமீப காலமாக அம்பேத்கர் ஒரு  இந்து தான் என்று பொய்யை பரப்புகின்றனர் . தமிழகத்தில் அவரது சிலைகளுக்கு காவி ஆடை அணிவிப்பதையும், குங்குமப் போட்டு வைப்பதையும் முன்னெடுத்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா போன்ற பிரபலங்களை வைத்து மோடி ஆட்சியில் அமலாக்கப்படும் திட்டங்களை கண்டால் அம்பேத்காரே பெருமை அடைவார் என்று சொல்ல வைக்கின்றனர் .

 

எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் என்று சொன்னது மட்டுமின்றி எந்த ஒரு இடத்திலும் மதச் சாயலுக்கு இடமளிக்காமல் திருக்குறளை எழுதியவர்  திருவள்ளுவர்  . ஆனால் அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்று சொல்லி தமிழகத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகள் அவரது சிலைகளுக்கு   காவி ஆடை அணிவிப்பதும், நெற்றியில் திருநீறு பூசுவதும் என அபத்தத்தை வேண்டுமென்றே செய்து வருகின்றனர்.

 

சர்தார் வல்லபபாய் பட்டேலை , அம்பேத்கரை , திருவள்ளுவரை தம்மவர்களாக காட்டிக் கொள்ள முயலும் சங் பரிவாரின் மதவெறி போக்கிரிகள் தோல்வி அடைந்து வருவது போல மகாகவி பாரதியை அவர்களது கவிஞராக காட்டிக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும் . உண்மையை  ஒளிரச் செய்யும்  பாரதியின் கவிதைகள் , கட்டுரைகள் முன்னே இவர்களது பொய்களும் , போலித்தனங்களும் எரிந்து சாம்பலாக பொசுங்கிப் போய்விடும்.

 

மதம் குறித்து பாரதியின் பார்வையும் கருத்தும் என்ன என்பதை  அவனது எழுத்துக்கள் மூலமே நாம் பார்ப்போம் .

 

“ஜாதி மதங்களைப் பாரோம்- உயர் 

ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் 

வேதியராயினும் ஒன்றே- அன்றி 

 வேறு குலத்தினராயினும் ஒன்றே”

 

என்கிறான் பாரதி.

 

ஜாதி மதங்களைப் பார்க்காமல் , பிராமணர்களையும், இதர சாதியினரையும் இரே தட்டில் வைத்து பார்க்கிறான் மகாகவி. சாதி மத பேதங்களை தீமூட்டி வளர்ப்பதன் மூலம் தனது ஓட்டு வங்கியை விரிவுபடுத்த முடியும்  என்ற முனைப்பில் செயல்படுகின்ற , ஜாதிய   மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் ஆர்.எஸ்.எஸ, மற்றும் பரிவார  அமைப்புகள்   ஜாதி மத பேதங்களை வெறுத்தொதுக்கும் பாரதியை கொண்டாடாடுவதும் விழா எடுப்பதும்  சாத்தான்கள் மகான்கள்  போல் வேடமணிந்து அறம் பேசுவதற்கு ஒப்பானதாகும்.

 

“என் தாய் கண்ணன் . அவள்  நான் வேடிக்கை பார்த்து நகைத்திட எதையெல்லாம்   உருவாக்கி இருக்கிறாள் என உங்களுக்கு  தெரியுமா”?  என்ற கேள்வியை நம்மிடம் கேட்டுவிட்டு அதற்கான   பதிலை “கண்ணன் –என் தாய்” என்ற கீழ்க்கண்ட கவிதையில் பாரதி சொல்கிறான்.

 

“நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும்-மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்ந்நடையும்-இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்”

 

 நான் வேடிக்கை பார்த்து சிரிக்க என் தாய் கண்ணன்   உண்டாக்கியவையே “புனையப்பட்ட போலி வேதங்கள், மதத்தின் பேரால் நடக்கும் படுகொலைகள், மன்னர்களின் அபத்தமான செயல்கள் , மூத்தவர்களின் போலியான பழக்க வழக்கங்கள் , அறிவற்ற இளைஞர்களின் கவலைகள்”போன்றவை என்கிறான் பாரதி .

 

மேலும் “வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு” என்ற தலைப்பிலான தனது கவிதையில் சொல்வதைப் பாருங்கள்

 

“கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்”  


   கணவர் இறந்ததும் மனைவியை எரித்து சதி போன்ற இன்ன பிற இந்து மதத்தில் உள்ள பிற்போக்கு செயல்களில் ஈடுபடுபவர்களை கொடுமதப்பாவிகள் என்கிறான் . அவர்கள் மீது பாரதி காட்டும் வெறுப்பை இப்பாடலின் மூலம் உணரலாம்.

 

மகாகவி ஹிந்து மதத்திலுள்ள தெய்வங்களை மட்டும் பாடியவன் அல்ல.கிறித்துவ மதத்தின் தேவ தூதர் ஏசுவையும் ,இஸ்லாம் மதம் காட்டும் இறைவன் அல்லாவையும் பாடிக்களித்தவன்.சிலுவையில் அடிக்கப்பட்டு மாண்ட ஏசுபிரான் மூன்றாவது நாளில்உயிர் பெற்று எழுந்ததை “யேசு கிறிஸ்து” என்ற கவிதையில் இப்படி சொல்கிறான் பாரதி.

 

“ஈசன் வந்துசி லுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;

தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே


நாசமின்றி  நமை நித்தங் காப்பார்;
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்”  

 

  என் தேசத்து மக்களே!, இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த மூன்றாம் நாளில் உயிர் பெற்று வந்ததன் உட்கருத்து எது எனத் தெரியுமா? நமது ஆணவத்தை ஒழித்துவிட்டால் தெய்வம் நமக்குள்ளே புகுந்து எவ்வித தீங்கும் இன்றி நம்மை காக்கும் என்பதே என்கிறான் பாரதி .

 

 அல்லாவைப் பற்றி சொல்லும் போது சொல்லாலும் மனதாலும் தொடவொணா ஜோதி என்கிறான் அவன் .மேலும்  அல்லாவையும் , யெகோவாவையும்( தேவனையும்)  அவர்களது  நாமத்தை போற்றுபவர்களின் திருவடிகளையும் பேணவேண்டும் என்று தனது சுயசரிதையில் சர்வ மத சமரசம் என்ற தலைப்பிலான கவிதை வரிகளில் அவன் சொல்கிறான்.  

 

“பேருயர்ந்த யேஹேவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்”

 

பாரதி தனது  முரசு பாடலில் மதத்தின் பெயரால் சண்டைகள் வேண்டாம் என்பதை கீழ்க்கண்டவாறு வலியுறுத்துகிறான்   

 

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

 

உலகில் தெய்வம் ஒன்றே.அது எல்லாப் பொருள்களிலும்  வியாப்பித்திருக்கிறது. அதையே நாம் அனைவரும் வணங்குகிறோம் எனவே  .மதச் சண்டைகள் வேண்டாம் என்கிறான் பாரதி

புதிய ஆத்திசூடியில் கடவுள் வாழ்த்து என்ற மரபை பயன்படுத்தும் பாரதி அதை “பரம் பொருள் வாழ்த்து” என புதுமை செய்து எழுதிய கவிதை அற்புதமானது

 

“சைவத்தின் சிவன் ,வைணவத்தின் திருமால் ,இஸ்லாத்தின் அல்லா ,கிறிஸ்தவத்தின் தேவன்  எல்லோரும் ஒன்றே . அவர்கள் அனைவரும் இறைவனைக் குறிக்கும் பரம் பொருளின் பல ரூபங்கள் .ஒளி வீசும் அறிவே அப்பரம் பொருளின் இயல்பு . எனவே மத வேற்றுமை பார்ப்பது அர்த்தமற்றது . மதங்கள் வெவ்வேறாயினும் பரம்பொருளாகிய இறைவன் ஒன்றே. அந்த இறைவனை ஒவ்வொருவரும் அவரவர் மதப்படி வணங்குகிறார்கள் .எனவே மத சச்சரவு அனாவசியமானது” என மத ஒற்றுமை பேணுவதன் அவசியத்தை தனது புதிய ஆத்தி சூடியை  படிக்க துவங்கும் முன்பே வலியுறுத்துகிறான் ..புதிய ஆத்திசூடியின் முதலில்  வரும் பரம் பொருள் வாழ்த்தை படித்தால் பாரதியின் மதம் குறித்த பார்வையை நாம் காணமுடிகிறது.  

 

ஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்

 

சுப்பராம  தீட்சிதர் பாரதியின் ஊரான எட்டையாபுரத்தை சேர்ந்தவர் . கர்னாடக இசையில் வல்லுநர்.கர்னாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் இசைப்பணி குறித்து சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினி என்ற நூலை எழுதியவர். அவரை மறைவையொட்டி எழுதிய கவிதையில்

 

“மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்கலாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்”

 

என்கிறான். அரசர்களையும், பொய்யான அறிவினையுடைய மதப் பெரியவர்களையும் வணங்காத நான் , உங்களை கண்டதும் தலை சாய்த்து மரியாதை செலுத்தினேன் என்று  சொல்லும் இந்த கவிதையின் மூலம் மதங்கள் குறித்த பாரதியின் உள்ள வெளிப்பாடு தெளிவாக தெரிகிறது.

 

 பழைய பொய்ச்சிலைகளை  வணங்குவதை ஒழித்து எங்கும் வியாப்பித்திருக்கும் பிரமத்தை தொழவேண்டும் என்று முமது நபிகள் ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார்”  என்று  “காமதேனு- முகமது நபி” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறான் பாரதி. எல்லா மதத்தின் தெய்வங்களையும் பிரம்மம் என்ற பரம்பொருளாக பார்க்க பழகியவன்  மாகாகவி என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கிறது .

 

மதம் குறித்த பாரதியின் பார்வை தெளிவானது . உலகில் உள்ளது ஒரே தெய்வம். அது எல்லா மதங்களிலும் பல்வேறு பேர்களில் வியாபித்திருக்கிறது .எனவே  சர்வ மத சமரசம் உலகில் நிலவ வேண்டும். மத சச்சரவுகள் , மத மோதல்கள் , போன்றவை அர்த்தமற்றவை. என்ற கருத்துக்களை  தனது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பல்வேறு வடிவில் வலியுறுத்தி வருகிறான் .

 

மதங்கள் குறித்து பிற்போக்கான பார்வையை உடைய  வலதுசாரி அமைப்புகள்  பாரதியை வெறுக்கவே செய்வார்கள்   ஆனால் அவர்கள் பாரதியை போற்றுவதும் அவனை   தங்களது கவிஞனாக அடையாளம் காட்ட நடத்தும் கூத்துகளும்  உலக மகா நடிப்பு. என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . மதம் குறித்த பாரதியின் சிந்தனைகளை இளைஞர்களிடம் எடுத்து செல்வதும், சங்பரிவார் அமைப்புகளின்  உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவதும், தமிழ் சமூகம் அவர்களை புறந்தள்ள வைக்க செய்வதும்  நம்முன்னுள்ள  கடமையாகும்.

 

மாதர்- தமிழ்நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையில் “உலகிலுள்ள மத பேதங்களை எல்லாம்  வேருடன் களைந்து சர்வ சமய சமரச கொள்கையை நிலை நாட்ட வேண்டுமென்றால் அதற்கு தமிழ்நாடே சரியான களம்” என்று தீர்க்கமாக தமிழ் மக்களை கணித்தவன்  பாரதி. அவனின்  வழி நடப்போம் . தமிழர்களிடையே   மத வெறியை தூண்டும் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறிவோம்.

 

பி.சேர்முக பாண்டியன் ,மதுரை 


Tuesday, October 25, 2022

QUOTES ON LOVE

Love is the elixir that makes human life go on forever.  Life thrives with its magical wand.

Some of the quotes I like most when I read are given as under 

Thursday, July 14, 2022

கண்ணம்மா என் காதலி _ வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு



கண்ணம்மா-என் காதலி

பாயு மொளி நீ யெனக்கு,
பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு,
தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை,
வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! 
சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,
மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு,
புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறும்  நின்றன் 
கண்ணிண் ஒளிவீசுதடீ

மாணுடைய பேரரசே! 
வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு 
வண்ண மயில் நானுனக்கு;

பானமடி நீ யெனக்கு,
பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி,
நங்கை நின் றன் சோதிமுகம்,

ஊனமறு நல்லழகே!
ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,
மேவு கடல் நானுனக்கு;

பண்ணு சுதி நீ யெனக்கு,
பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் 
எண்ணமில்லை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! 
கட்டியமுதே! கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,
விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்கு,
பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! 
நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே!கனியே!
அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,
காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு,
வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே 
பொங்கி வருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! 
நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,
நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு,
சேமநிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே!
எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லைநிகர் புன்னகையாய்!
மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,
தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு,
வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் 
சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவமாய்ச் சமைந்தாய்!
உள்ளமுதமே! கண்ணம்மா!

கண்ணம்மா என் குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா


பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்  தின்னத்தகாது என்று  
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!                   

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!

தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு 
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்     
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!                                      

துன்ப ம் இனியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!
நல்லது தீயது  நாம் அறியோம் அன்னை
நல்லது  நாட்டுக! தீமையை  ஓட்டுக! 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!

Wednesday, July 13, 2022

கண்ணம்மா என் காதலி 1/6


மகாகவி பாரதி கண்ணனை காதலியாகக் கருதி எழுதிய ஆறு பாடல்களில் முதல் பாடல் இது.

சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
நட்சத்திரங்களடீ!

சோலை மலர் ஒளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
நெஞ்சில் அலைகளடீ!
கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ!
வாலைக் குமரியடீ, – கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், – கண்ணம்மா!
சாத்திரம்  ஏதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, – கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ? – இதுபார்,
கன்னத்து முத்த மொன்று


Saturday, July 09, 2022

தியாகத் திருநாள் ,ஈகைத் திருநாள் பக்ரீத் பெருநாள் வரலாறும் வாழ்த்தும்

பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் 

 ஈராக் நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்தான் இறை தூதர் இப்ராஹீம் . அவருக்கு பல ஆண்டுகளாய் குழந்தை இல்லை . இறையருளால் அவரது இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் அழகான ஆண் மகவு பிறந்தது . இஸ்மாயில் என்று பெயரிட்டு அக்குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்துவந்தனர். பால்ய பருவத்தை கடக்க தயாராகும் இஸ்மாயிலுக்கு அறநெறியூட்டி வளர்த்தனர் . அக்குழந்தையின் வழித்தோன்றல்களே இன்றைய அராபியர்கள் எனச் சொல்லப்படுகிறது . 

 அப்போது ஒரு நாள் இரவு இப்ராஹிமுக்கு வந்த கனவில் மகன் இஸ்மாயிலை பலிகொடுக்க வேண்டும் எனக் கடவுள் கட்டளையிட்டார் .நீண்டகாலம் தவமிருந்து பெற்ற பிள்ளையை எப்படி பலி தருவேன் என அவர் கலங்கவில்லை . இறைவனின் சித்தம் எதுவோ அதன்படியே நடப்பேன் என உறுதி பூண்டார் . மகன் இஸ்மாயிலை அழைத்து ஒப்புதல் கேட்டார் ., இறையாணையை நிறைவேற்ற எனக்கு தயக்கமில்லை . உங்கள் விருப்பமே எனது விருப்பம் என மகன் இஸ்மாயில் தெரிவித்தான். இறைவனுக்கு காணிக்கையாக இஸ்மாயிலை பலி தர இப்ராஹிம் பெருமகனார் வாளை ஓங்கினார் . அப்போது இறைவன் அனுப்பிய வானவர் ஜிப்ரயீல் இப்ராஹீம் ஓங்கிய வாளை தடுத்தார் . வானிலிருந்து கீழே ஒரு ஆடு இறங்கியது . இஸ்மாயிலுக்கு பதிலாக இறைவன் தருவித்து தந்த ஆட்டை பலியிடச் சொன்னார் அந்த வானவர் . இறைவனின் சோதனை மகிழ்ச்சியிலே முடிந்தது.

 இறைவன் ஆணையிட்டால் தனது செல்லப் பிள்ளையைக் கூட தயங்காத இப்ராஹீம் பெருமகனாரின் தியாகத்தை நினைவுகூரவே உலகெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் இந்த நாளை தியாகத்தின் அடையாள தினமாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினத்தில் ஆடு மாடு ஒட்டகம் போன்றவை பலியிடப்படுகின்றன . அவற்றின் இறைச்சி மூன்றாக பங்கிடப்படுகின்றன . ஒரு பங்கு அண்டை வீட்டார்களுக்கும் , பிறிதொரு பங்கு ஏழை எளியவர்களுக்கும், மூன்றாவது பங்கை தங்களது சொந்த குடும்ப தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்கின்றனர் . அந்த தினத்தில் திறந்த பொது வெளியில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்படுகின்றன . 


 தியாகத் திருநாள், ஈகைப் பெருநாள் என பைந்தமிழில் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய கலண்டரின்படி துல்ஹஜ் மாதத்தின் 10 ம் நன்னாளில் கொண்டாடப்படுகிறது .இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது 
பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் ....பி.சேர்முக பாண்டியன் , மதுரை

Friday, July 08, 2022

இன்று 08.07.2022 தோழர் டி ஞானையாவின் ஐந்தாவது நினைவு தினம் - ஞான தந்தையுன் வழி நடப்போம்

தோழர் டி ஞானையா அவர்கள் மறைந்து இன்றோடு ஐந்தாண்டுகள் முடிவுற்றது .தோழர் டி.ஞானையாவின் மறைந்த போது ( 08.07.2017 அன்று) அவரைப் பற்றி நான் எழுதிய எழுதிய சிறுகுறிப்பு கீழே தரப்பட்டுள்ளது 


செஞ்சுடர் அணைந்தது

NFPTE இயக்கத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர் டி ஞானையா இன்று ( 08.07.2017 )அதிகாலை 04.30 மணி அளவில் மறைந்தார் . அவருக்கு வயது 97. தமிழகத்தின் தலை சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்களுள் ஒருவராய் திகழ்ந்தார் . அவருக்கு ஒரே மகள் .கணவருடன் கொச்சியில் இருக்கிறார். அவரது பேத்திகள் இருவரும் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருந்து வருகின்றனர். .அவரது மனைவி 1993ல் மரணமடைந்தார்.

  அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து. 

 தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார் . .1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் . திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக் ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும் & 1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார் 

  ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர் 

 தமிழக அஞ்சல் துறை தமிழ் மண்ணுக்கு தந்த அறிவுஜீவிகளில் ஒருவர் இவர் . மார்க்சிய பேரறிஞர் ..சீன எல்லைப் பிரச்சனை ;பாகிஸ்தான் பிரிவினை ; சாதி ,மதம் , சமூக நீதி, மதவாத எதிர்ப்பு அரசியல் என பரந்து பட்ட எல்லையில்லா ஞானம் உள்ளவர். நல்லதோர் சமூக சிந்தனையாளர். அவருடன் உரையாடினால் அவரது உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் . இடதுசாரிக் கட்சி தலைவர்களும் அபிமானிகளும் , மார்க்சிய சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும் பல் வேறு விசயங்கள் குறித்து விவாதிக்க எப்போதும் அவரைப் பார்க்க வந்த வண்ணம் இருப்பார்கள். . இடதுசாரி ஒற்றுமை பற்றி அதிக ஆர்வம் காட்டி வந்தார் .அவரது அபாரமான நினைவாற்றல் ஓர் அதிசயம் . பிரிட்டன், பிரான்ஸ் ,சோவியத் யூனியன் ஜெர்மனி, டென்மார்க்,ஹங்கேரி, பல்கேரியா அமெரிக்கா என பல நாடுகள் பயணித்தவர்.

  19.09.1968 மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நாயகன் .


NFPTE தபால் தந்தி தொழிற்சங்கத்தின் மா பொதுச் செயலராக பல ஆண்டு காலம் டில்லியில் இருந்தவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து 19.09.1968 ல் நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தியதற்காக ஜெயில் சஸ்பென்சன் டிஸ்மிசல் என தண்டனை பெற்றவர். இதன் மூலம் NFPTE அமைப்புக்கு பெருமை சேர்த்தார், டில்லியில் இருந்தபோது 1975 ம் ஆண்டின் அவசர சட்டத்தின் கொடுமைகளை அனுபவித்தவர், தொழிற்சங்க பணிக்காக மூன்று முறை கைது , ஒரு முறை டிஸ்மிஸ் எமர்ஜென்சியின் போது Premature Retirement என பல தண்டனைகளுக்கு ஆளானாலும் ஒவ்வொரு முறையும் அவற்றை வென்று பணிநிறைவு செய்து ஒய்வு பெற்றார் . 

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவாராக இயக்கப் பணி

பணி நிறைவுக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணி செய்தார் . தமிழகத்தில் அவர் கால் படாத இடமில்லை , தொழிற்சங்க வகுப்பு எடுப்பதிலும் இயக்கங்களை வலுப் படுத்துவதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் பயன் படுத்தினார் . படிப்பும் எழுத்துமே என் பணி என வாளா இருந்து விடாமல் இயக்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார் . தன் வாழ்கையை முழுமையாக வாழ்ந்து முடித்தார் .தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .

  அவரது நூல்களில் சில
 இஸ்லாமும் இந்தியாவும் , • விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் , • மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம், • இந்திய சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும், • பாகிஸ்தான் பிரிந்தது ஏன்?, • சர்வதேச பயங்கரவாதமும் இந்து பயங்கரவாதமும் • அமெரிக்க ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துகளும் • சாதிமுறையை தகர்க்க முடியுமா • இந்துத்துவா பாசிசம் • வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள் • காய்தே ஆஸாம் முகமது அலி ஜின்னா – உண்மை சித்திரம் • நானும் ஓடினேன் • Glimpses of a Unique Union ( The Trade Union Movement of P&T Workers of India) • Islam and India • Terrorism sources and solutions • Obamas of America and Dalits of India இவை தவிர அவரசியல் விழிப்புணர்வூட்டும் சிறு பிரசுரங்கள் நிறைய எழுதியுள்ளார் .உலக கம்யூனிச வரலாறு குறித்து அவர் தற்போது எழுதி வந்த புத்தகம் முற்றுப் பெறவில்லை . ஒழுக்கம்,அன்பு,நேர்மையின் உருவாக கடைசி வரை வாழ்ந்தார். இறுதி மூச்சு நிற்கும் வரை மார்க்சிய நெறிமுறை களிலிருந்து சிறிதும் பிசகாமல் வாழ்ந்தார். அவரது மறைவு மத வாத சாதிவாத சக்திகளுக்கு எதிராக போராடிவரும் சமூக அக்கறை கொண்ட இயக்கங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் பேரிழப்பாகும் , அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை யாக்குகிறேன் 

. .... முகநூல் பதிவில் ப.சேர்முக பாண்டியன் முன்னாள் கோட்டச் செயலர் பி3 NFPE சிவகங்கை