ஈராக் நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்தான் இறை தூதர் இப்ராஹீம் . அவருக்கு பல ஆண்டுகளாய் குழந்தை இல்லை . இறையருளால் அவரது இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் அழகான ஆண் மகவு பிறந்தது . இஸ்மாயில் என்று பெயரிட்டு அக்குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்துவந்தனர். பால்ய பருவத்தை கடக்க தயாராகும் இஸ்மாயிலுக்கு அறநெறியூட்டி வளர்த்தனர் . அக்குழந்தையின் வழித்தோன்றல்களே இன்றைய அராபியர்கள் எனச் சொல்லப்படுகிறது
.
அப்போது ஒரு நாள் இரவு இப்ராஹிமுக்கு வந்த கனவில் மகன் இஸ்மாயிலை பலிகொடுக்க வேண்டும் எனக் கடவுள் கட்டளையிட்டார் .நீண்டகாலம் தவமிருந்து பெற்ற பிள்ளையை எப்படி பலி தருவேன் என அவர் கலங்கவில்லை . இறைவனின் சித்தம் எதுவோ அதன்படியே நடப்பேன் என உறுதி பூண்டார் . மகன் இஸ்மாயிலை அழைத்து ஒப்புதல் கேட்டார் ., இறையாணையை நிறைவேற்ற எனக்கு தயக்கமில்லை . உங்கள் விருப்பமே எனது விருப்பம் என மகன் இஸ்மாயில் தெரிவித்தான்.
இறைவனுக்கு காணிக்கையாக இஸ்மாயிலை பலி தர இப்ராஹிம் பெருமகனார் வாளை ஓங்கினார் . அப்போது இறைவன் அனுப்பிய வானவர் ஜிப்ரயீல் இப்ராஹீம் ஓங்கிய வாளை தடுத்தார் . வானிலிருந்து கீழே ஒரு ஆடு இறங்கியது . இஸ்மாயிலுக்கு பதிலாக இறைவன் தருவித்து தந்த ஆட்டை பலியிடச் சொன்னார் அந்த வானவர் . இறைவனின் சோதனை மகிழ்ச்சியிலே முடிந்தது.
இறைவன் ஆணையிட்டால் தனது செல்லப் பிள்ளையைக் கூட தயங்காத இப்ராஹீம் பெருமகனாரின் தியாகத்தை நினைவுகூரவே உலகெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் இந்த நாளை தியாகத்தின் அடையாள தினமாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினத்தில் ஆடு மாடு ஒட்டகம் போன்றவை பலியிடப்படுகின்றன . அவற்றின் இறைச்சி மூன்றாக பங்கிடப்படுகின்றன . ஒரு பங்கு அண்டை வீட்டார்களுக்கும் , பிறிதொரு பங்கு ஏழை எளியவர்களுக்கும், மூன்றாவது பங்கை தங்களது சொந்த குடும்ப தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்கின்றனர் . அந்த தினத்தில் திறந்த பொது வெளியில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்படுகின்றன
.
தியாகத் திருநாள், ஈகைப் பெருநாள் என பைந்தமிழில் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய கலண்டரின்படி துல்ஹஜ் மாதத்தின் 10 ம் நன்னாளில் கொண்டாடப்படுகிறது .இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது
பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் ....பி.சேர்முக பாண்டியன் , மதுரை
No comments:
Post a Comment