மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, July 08, 2022

இன்று 08.07.2022 தோழர் டி ஞானையாவின் ஐந்தாவது நினைவு தினம் - ஞான தந்தையுன் வழி நடப்போம்

தோழர் டி ஞானையா அவர்கள் மறைந்து இன்றோடு ஐந்தாண்டுகள் முடிவுற்றது .தோழர் டி.ஞானையாவின் மறைந்த போது ( 08.07.2017 அன்று) அவரைப் பற்றி நான் எழுதிய எழுதிய சிறுகுறிப்பு கீழே தரப்பட்டுள்ளது 


செஞ்சுடர் அணைந்தது

NFPTE இயக்கத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர் டி ஞானையா இன்று ( 08.07.2017 )அதிகாலை 04.30 மணி அளவில் மறைந்தார் . அவருக்கு வயது 97. தமிழகத்தின் தலை சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்களுள் ஒருவராய் திகழ்ந்தார் . அவருக்கு ஒரே மகள் .கணவருடன் கொச்சியில் இருக்கிறார். அவரது பேத்திகள் இருவரும் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருந்து வருகின்றனர். .அவரது மனைவி 1993ல் மரணமடைந்தார்.

  அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து. 

 தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார் . .1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் . திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக் ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும் & 1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார் 

  ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர் 

 தமிழக அஞ்சல் துறை தமிழ் மண்ணுக்கு தந்த அறிவுஜீவிகளில் ஒருவர் இவர் . மார்க்சிய பேரறிஞர் ..சீன எல்லைப் பிரச்சனை ;பாகிஸ்தான் பிரிவினை ; சாதி ,மதம் , சமூக நீதி, மதவாத எதிர்ப்பு அரசியல் என பரந்து பட்ட எல்லையில்லா ஞானம் உள்ளவர். நல்லதோர் சமூக சிந்தனையாளர். அவருடன் உரையாடினால் அவரது உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் . இடதுசாரிக் கட்சி தலைவர்களும் அபிமானிகளும் , மார்க்சிய சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும் பல் வேறு விசயங்கள் குறித்து விவாதிக்க எப்போதும் அவரைப் பார்க்க வந்த வண்ணம் இருப்பார்கள். . இடதுசாரி ஒற்றுமை பற்றி அதிக ஆர்வம் காட்டி வந்தார் .அவரது அபாரமான நினைவாற்றல் ஓர் அதிசயம் . பிரிட்டன், பிரான்ஸ் ,சோவியத் யூனியன் ஜெர்மனி, டென்மார்க்,ஹங்கேரி, பல்கேரியா அமெரிக்கா என பல நாடுகள் பயணித்தவர்.

  19.09.1968 மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நாயகன் .


NFPTE தபால் தந்தி தொழிற்சங்கத்தின் மா பொதுச் செயலராக பல ஆண்டு காலம் டில்லியில் இருந்தவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து 19.09.1968 ல் நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தியதற்காக ஜெயில் சஸ்பென்சன் டிஸ்மிசல் என தண்டனை பெற்றவர். இதன் மூலம் NFPTE அமைப்புக்கு பெருமை சேர்த்தார், டில்லியில் இருந்தபோது 1975 ம் ஆண்டின் அவசர சட்டத்தின் கொடுமைகளை அனுபவித்தவர், தொழிற்சங்க பணிக்காக மூன்று முறை கைது , ஒரு முறை டிஸ்மிஸ் எமர்ஜென்சியின் போது Premature Retirement என பல தண்டனைகளுக்கு ஆளானாலும் ஒவ்வொரு முறையும் அவற்றை வென்று பணிநிறைவு செய்து ஒய்வு பெற்றார் . 

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவாராக இயக்கப் பணி

பணி நிறைவுக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணி செய்தார் . தமிழகத்தில் அவர் கால் படாத இடமில்லை , தொழிற்சங்க வகுப்பு எடுப்பதிலும் இயக்கங்களை வலுப் படுத்துவதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் பயன் படுத்தினார் . படிப்பும் எழுத்துமே என் பணி என வாளா இருந்து விடாமல் இயக்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார் . தன் வாழ்கையை முழுமையாக வாழ்ந்து முடித்தார் .தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .

  அவரது நூல்களில் சில
 இஸ்லாமும் இந்தியாவும் , • விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் , • மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம், • இந்திய சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும், • பாகிஸ்தான் பிரிந்தது ஏன்?, • சர்வதேச பயங்கரவாதமும் இந்து பயங்கரவாதமும் • அமெரிக்க ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துகளும் • சாதிமுறையை தகர்க்க முடியுமா • இந்துத்துவா பாசிசம் • வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள் • காய்தே ஆஸாம் முகமது அலி ஜின்னா – உண்மை சித்திரம் • நானும் ஓடினேன் • Glimpses of a Unique Union ( The Trade Union Movement of P&T Workers of India) • Islam and India • Terrorism sources and solutions • Obamas of America and Dalits of India இவை தவிர அவரசியல் விழிப்புணர்வூட்டும் சிறு பிரசுரங்கள் நிறைய எழுதியுள்ளார் .உலக கம்யூனிச வரலாறு குறித்து அவர் தற்போது எழுதி வந்த புத்தகம் முற்றுப் பெறவில்லை . ஒழுக்கம்,அன்பு,நேர்மையின் உருவாக கடைசி வரை வாழ்ந்தார். இறுதி மூச்சு நிற்கும் வரை மார்க்சிய நெறிமுறை களிலிருந்து சிறிதும் பிசகாமல் வாழ்ந்தார். அவரது மறைவு மத வாத சாதிவாத சக்திகளுக்கு எதிராக போராடிவரும் சமூக அக்கறை கொண்ட இயக்கங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் பேரிழப்பாகும் , அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை யாக்குகிறேன் 

. .... முகநூல் பதிவில் ப.சேர்முக பாண்டியன் முன்னாள் கோட்டச் செயலர் பி3 NFPE சிவகங்கை

No comments:

Post a Comment