மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, May 01, 2018

மகாகவி பாரதியின் வரிகளில் மேதின அறைகூவல்


                    மேதினம் -  01.05.2018    
தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பின் பெருமையை மகத்துவத்தை போற்றிய மகாகவி பாரதியின் வரிகளில் மேதின அறைகூவல்

தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை உயர்த்தி போற்றியவன் மகாகவி பாரதி .பிரம்மனின் தொழில் படைப்பு என்றால்  அப்படைப்பு தொழிலை இப் பூவுலகில் செய்பவர்கள் தொழிலாளிகளே எனச் சொல்லி அவற்றைப் பட்டியலிடுகிறான் அவன்  . 

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் பல வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே"

 இப்படி படைப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் உங்களுக்கு எல்லாப் புகழும் சேரட்டும் என்பதை 


"பெரும் புகழ் நுமக்கே இசைக்கிறேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே !" 
என தொழிலாளர்களை நோக்கி பாடல் இசைக்கிறான்..

                     விவசாயம் செய்து எங்களுக்கு உணவு , காய்கறி தருகிறீர்கள். எண்ணெய், பால், நெய் என எல்லாம் தருகிறீர்கள் . மரங்கள் அறுத்து எங்களுக்கு வீடு கட்டி தருகிறீர்கள் . நெசவு நூற்று ஆடை தருகிறீர்கள். எனவே நீங்கள் இந்த பூமியில் எங்களை காப்பவர்கள் என பாரதி சொல்வதை அவனது கவிதை வரிகளில் படியுங்கள்.

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கறி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லாடை செய்திடுவீரே
.
"விண்ணின் இன்றெமை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே "

அது மட்டுமா “.தொழிலாளர்களே! நீங்கள் தான் நாட்டில் அறத்தை நிலை நாட்டுபவர்கள்  , மக்கள் விரும்பும்  இன்பத்தை தருபவர்கள்”.  எனவே சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் "எங்களது கண்ணுக்கு முன்னால் தெரியும் தெய்வங்கள் நீங்கள் தான் " .என பாரதி குதூகலிக்கிறான் .

Bharathi on Workers

நாட்டில் அறம் கூட்டி வைப்பீரே .
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே

தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

இந்த பாரத தேசம் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என பாரதி சொல்வதைப் படியுங்கள் .

பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென குவிப்போம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

 அது மட்டுமா . " உலகத் தொழில்கள் அனைத்தும் உவந்து செய்வோம்" என இந்தியத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார் .

இரஷியாவில் மாமேதை லெனின் தலைமையில் புரட்சி நடந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வந்ததை வரவேற்று பாடிய மகாகவி பாரதி

"குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார் ".

என்று ஆனந்த கூத்தாடுகிறான். .பாரதி தனி   ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் அல்லவா . எனவே .கொடுமை கண்டு கொதிநிலை அடைந்த  அவன் .வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான்.எனவேதான் "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்து பாடுகிறான். ."உலகத்துக்கு ஓர் புதுமை" என அப்புரட்சியைப்  பறை சாற்றுகிறான். .உலகம் முழுதும் அப்புரட்சி பரவ  ஏங்கி தவிக்கிகிறான். தொழிலாளர் தலைமையிலான ஆட்சியில் தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறான்

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி நம்மை அடிமையாக்கியது வரலாற்று உண்மை.

மக்களுக்கான அரசு அல்ல இது கார்ப்போரட் களுக்கான அரசு :
ஆனால்  இப்போது வெளிநாட்டு ,உள்நாட்டு கார்ப்போரட் களுக்கு எல்லா சலுகைகளையும் அள்ளி வழங்கி வெண்சாமரம் வீசி வரவேற்கிறது மத்திய அரசு. உள்ளூர் தொழிலாளர்கள், விவசாயிகள் , நெசவாளிகள், அடித்தட்டு சிறு வியாபாரிகள் வேலை இழப்பது பற்றியோ அரசு கவலை படவில்லை . பெரு முதலாளிகள் ( CORPORATES) நலனை மட்டுமே பாதுகாக்கும் அரசாக இருக்கிறது இப்போதைய மத்திய அரசு .

ஏழை எளிய மக்களின் நலன் குறித்த அக்கறை அதற்கு ஏதுமில்லை .
மக்களை மத ரீதியாக மோதவிட்டு தனது வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் , பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை இந்த ஆட்சியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அஞ்சல் தொழிலாளிக்கு சி.எஸ்.ஐ  ரோல் அவுட் மூலம் மேலும் நெருக்கடி:
அஞ்சல் துறையில் ஏற்கெனவே ஊழியர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர் .. சி.எஸ்.ஐ  ரோல் அவுட் மூலம் நெருக்கடி இன்னும் அதிகரித்துள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டக்குரல் அரசின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாக உள்ளது . கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஊதியக் குழு அறிக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கப் படுகிறது. அரசுக்கு ஊழியர் மீதான அக்கறை ஏதுமில்லை


தொழிலாளி வர்க்கமே அறத்தை மீட்டெடுக்கும் வல்லமை பெற்றவர்கள்:
அதற்கு காரணம் அறத்தை மீட்டெடுக்கும் வல்லமை பெற்ற இந்திய தொழிலாளர்கள் ஜாதி, மத ,அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பதும் , அவர்களிடையே வர்க்க உணர்வு குறைந்து இருப்பதுவுமேயாகும் . எனவே மக்களை பிளவு படுத்தும் மதவாத கொள்கைகள், தொழிலாளர் விரோத கொள்கைகள் ," சிலர் வாழ, பலரை வாடவைக்கும்" மத்திய அரசின் பொருளாதரக் கொள்கைகள், போன்ற மோடி அரசின் கொள்கைகளை  எதிர்த்துப் போராட வர்க்க ஒற்றுமை நமக்கு மிக அவசியம்.

"ஒற்றுமை வழி ஒன்றே வழியென்பது ஓர்ந்திட்டோம் நன்கு - தேர்ந்திட்டோம் . மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக் கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம்" என்ற பாரதியின் வரிகளை இந்த மே தினத்தின் போர் பரணியாகப் பாடி போராட்டப் பாதையில் பயணிப்போம் . வெற்றி நமதே.



No comments:

Post a Comment