மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, August 27, 2019

பத்து தலை ராவணனை ஒத்த தலை ராமன் வென்றான்! - பரிணாமன் கவிதைகள்

சுதந்திர மாடன்

பத்து தலை ராவணனை
ஒத்த தலை ராமன் வென்றான்!
மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா- அந்த
வித்தைகளைக் கத்துக்காம
சத்தியத்தை ஒத்துக்காம
கத்தினால் போனதெல்லாம் கிடைக்குமாடா ?

புலி பசித்து கிடந்தாலும்
புல்லைத் திங்க மாட்டாது
போட்டதைத் திங்கிறியே சுடலைமாடா! உன்
பெண்டு பிள்ளை வாழ்க்கையிலே
கண்ட சுகம் ஏதுமில்லை
தண்டத்துக்கு உழைக்கிறியே ஞாயமாடா ?
அடுத்த நாள் சோத்துக்கில்லே
அடகு வைக்க பண்டமில்லா
யாருமேல கோவிக்கிறா சுடலைமாடா - உனைக்
கெடுத்ததோ சாமியில்லே
பாடுபடும் பூமியிலே
கேடுகெட்ட சுரண்டல் முறை தெரியுமாடா ?
மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது என்பதாலே
யானை கட்டிப் போரடித்த திந்தநாடுடா - அந்தப்
பாடி வரும் காவேரி
பாயும் நிலமத்தனையும்
பாவிப் பண்ணையார்களிடம் தந்ததாருடா?

ஓட்டுக் கேட்டு கையெழுத்து
கோட்டையிலே படையெடுத்து
மூட்டை மூட்டையாக அடிச்சான் சுடலைமாடா - சொந்த
நாட்டைக்கூட விலைபேசி
ரகசியமாவித்திருவான்
லஞ்சத்துக்கு பொறந்ததிந்த ஆட்சியமைப்புடா!
நீ பொறந்த கரிசல் மண்ணில்
தான் பொறந்தேன் மாகவிஞன்!
பாரதியின் கனவு உனக்குத் தெரியுமாடா ? - அவன்
வேறு பல நாட்டுக்கெல்லாம்
வெளிச்சமாப் போன பின்னும்
நீ உணர முடியாமல் போனதென்னடா?

பரிணாமன் கவிதைகள்

No comments:

Post a Comment