மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, October 17, 2025

*பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்- அரசின் சதியால் விளைந்த தண்டனை- AIGDSU வின் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.எஸ்.மகாதேவையா பணிநீக்கத்தை முறியடிப்போம்.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்- அரசின் சதியால் விளைந்த தண்டனை- AIGDSU வின் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.எஸ்.மகாதேவையா பணிநீக்கத்தை முறியடிப்போம்.

 அன்பிற்கினிய தோழர்களே!

வணக்கம்.
 
  *தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான ஒன்றிய அரசு*
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததில் இருந்தே தொழிலாளர் நலன்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலையும் தொழிற்சங்கங்களை முடக்குவதையும் தலையாய கடமையாக கொண்டு இன்றைய ஒன்றிய அரசு செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக்கியதிலும் போராடிப் பெற்ற சலுகைகளைப் பறிப்பதிலும் தொழிலாளர்களுக்குச் சாதகமான நீதி மன்றத் தீர்ப்புகளை நீர்த்துப் போகச் செய்வதிலும் முனைப்புடன் செயல்படுகிறது.வருடக் கணக்கில் போராடிய விவசாயிகளின் நூற்றுக் கணக்கான இறப்பிற்குப் பின்னே பேச்சு வார்த்தை நடத்தியும் கோரிக்கைகளில் இன்னும் கூட முழுமையான தீர்வு இல்லை என்பது கொடிதினும் கொடியது.

*தபால் தந்தி ஊழியர் சங்கங்களின் தனிச் சிறப்பு*
  இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன்பாகவும் விடுதலை அடைந்த பின்னரும் நீண்ட நெடிய வேலை நிறுத்தங்கள் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அடக்கு முறைகளை நொறுக்கியும் சிறைகளை நிரப்பியும் இரத்தம் சிந்தியும் இன்னுயிர் நீத்தும் தியாகங்களால் வடிவமைக்கப் பட்டது தான் தபால் தந்தி ஊழியர் சங்கங்கள்.அதனால் தான் இந்தியத் தொழிற்சங்களுக்கு முன்னோடிச் சங்கமாகவும், இந்திய தொழிற் சங்கங்களுக்கு போர் முழக்கம் போன்று கோஷங்களையும் முழக்கங்களையும் கொடுத்த பெருமை தபால் தந்தி ஊழியர் சங்கங்களின் தனிச் சிறப்பாக் உள்ளது.. சிறை பிடித்தலும் பணி நீக்கம் செய்தலும் சங்கங்களின் அங்கீகாரம் முடக்கலும் தபால் தந்தி ஊழியர் சங்கங்கள் சந்தித்திராத ஒன்றல்ல.

*அரசின் கண்ணெல்லாம் தொடர்ந்து போராடும் சங்கம் AIGDSU மீது தான்*
   துவக்க காலம் தொட்டு ஊழியர் நலன் காக்க தொடர்ந்து பலவித போராட்டங்களை நாடு முழுவதும் வலுவாக நடத்தியும் காலவரையற்ற வேலை நிறுந்தங்களை வெற்றிகரமாக நடத்தியும் கோரிக்கைகள் மீது தொடர்ந்து தீர்வு காணும் ஒரே மத்திய சங்கமான AIGDSU மீது இப்போது தொடுக்கப்பட்ட தாக்குதல் எதிர்பார்த்த ஒன்று தான்.
 
*முன்பு NFPE சம்மேளனம், AIPEU-Class III அங்கீகாரம் ரத்து- இன்று AIGDSU பொதுச் செயலர் பணிநீக்கம்*
 அஞ்சல் துறையில் ஊழியர்களின் பிரச்சினைகளை வென்றெடுக்க ஊழியர்களைப் பாதிக்கும் அரசின் தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வென்று வந்த மாபெரும் இயக்கமான NFPE சம்மேளனம் மற்றும் AIPEU-Class III சங்கம் ஆகிய இரண்டும் விவசாயிகள் போராட்டத்துக்கு  நிதி கொடுத்தன, மத்திய தொழிற் சங்கமான் சி.ஐ.டி.யு க்கு நிதி வழங்கின  , சி.பி.எம் கட்சி அலுவலகத்திடம் இருந்து வாங்கிய புத்தகங்களுக்கு தந்த பணத்தை கட்சிக்கு  நிதி அளித்தன என்று  பொய்யான குற்றச்சாட்டுக்களை புனைந்து   அவற்றின்  அங்கீகாரத்தை  மத்திய  அரசு ரத்து செய்தது..  லட்சக் கணக்கான ஊழியர்களின் நலனைக் காத்து வந்த மாபெரும் இயக்கத்தை முடக்கியதன் ஒரே நோக்கம் அது அரசின், அஞ்சல் துறையின் ஊழியர் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடுவது தான். எது நடந்தாலும், அஞ்சல் துறைக்கு மூடு விழா நடத்தினாலும் கூடக் கண்டுகொள்ளாத சங்கமே அதற்குத் தேவை போலும். 

*டிசம்பர் 12, 2023 ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற GDS ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்:*
  முக்கியமான சில கோரிக்கைகளை மையப்படுத்தி AIGDSU பொதுச் செயலர் தோழர் எஸ்.எஸ். மகாதேவையா 2023 டிசம்பர் 12 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்ததிற்க்கான அறைகூவலை விடுத்தார். 12.12.2023 அன்று வேலை நிறுத்தம் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அதில் பங்கேற்போர் எண்ணிக்கை கூடிக்கொண்ட வந்தது. அதிர்ந்தது அரசும் அஞ்சல் நிர்வாகமும். 15 டிசம்பர் அன்று மாலையில் அரசு தனது அதிகாரத் திமிரில் வேலை நிறுத்தம் செய்து வருகின்ற GDS ஊழியர்கள் 16 ஆம் தேதிக்குள்பணிக்கு திரும்ப வேண்டும் என எச்சரித்தது. 30000 பேருக்கு மேல் டெர்மினேசன் நோட்டிஸ் தரப்பட்டது. முறைப்படி வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு போராடிவருகின்ற ஊழியர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பான அடாவடி நடவடிக்கையை எடுக்கத் தயங்கிய அதிகாரிகள் மிரட்டப்பட்டனர். அஞ்சல் துறையின் மூத்த அதிகாரி ஒருவரே விருப்ப ஒய்வு பெற்றுச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார் அன்றேஅரசின் சதி அம்பலமானது. சதித் திட்டம் தீட்டிவரும் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை புரிந்து கொண்ட AIGDSU & NUGDS உள்ளக்கிய PJCA 15.12.2023 அன்று இரவில் அவசரமாக கூடி ஊழியர்களை பாதுகாக்க வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியது.

*GDS வேலை நிறுத்தமும், அரசின் மேல் மட்டச் சதியும்*
அங்கீகாரம் பெற்ற GDS சங்கத்தின் தேசியத் தலைவர்கள் இருவர் தங்களது தொழிற்சங்கப் பணிக்காக சம்பளமில்லா விடுப்பில் 180 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளலாம் என்ற விதியின் அடிப்படையில் தொடர்ந்து LWA எடுத்து டில்லியில் தொழிற்சங்கப் பணியாற்றி வருகின்ற தோழர் எஸ்.எஸ்.மகாதேவையா வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்காக 11.12.2023 அன்று டூட்டியில் சேருகிறார் . 12.12.2023 லிருந்து நடைபெறுகின்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார். அஞ்சல் துறை உயர் அதிகாரிகளுடன் வேலை நிறுத்தக் கோரிக்கைகள் மீதான பேச்சு வார்த்தை நடத்த மீண்டும் உடனடியாக டில்லி சென்றுவிடுகிறார் தினசரி நடக்கும் கூட்டங்கள் மூலம் சமூக ஊடகங்கள் மூலம் பயமின்றி வேலை நிறுத்தத்தை தொடருமாறு GDS ஊழியர்களை உற்சாகப்படுத்துகிறார். முறைப்படி நோட்டிஸ் கொடுத்து நாடு முழுதும் நடந்த வேலை நிறுத்தத்தில் தேசத்தின் ஒரு மூலையில் கூட எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.

*இது ஜனநாயக நாடா இல்லையா? இம் என்றால் வனவாசம் ஏனென்றால் சிறைவாசமா?* 
இம் என்றால் வனவாசம் ஏனென்றால் சிறைவாசம் என்ற கொடுங்கோலன் ஜார் மன்னன் வழியில் அதிகாரத்தை கையில் எடுத்தது அரசு . மேல்மட்டத்தில் நடந்த சதி ஆலோசனைகளின் படி தோழர் எஸ்.எஸ்.மகாதேவையா GDSMD ஆகப் பணியாற்றிய அஞ்சலகத்தின் SPM க்கு ஆணைகள் பறந்தன. LWA Application தரவில்லை 16.12.2023 அன்று டூட்டி ஜாயின் பண்ணவில்லை என்று புகார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

 
*அற்பமான குற்றச்சாட்டுக்கள் நான்கு:*
அந்தக் கடிதங்கள் அடிப்படையில் 19.12.2023 அன்றே ASP பெங்களூர் ஈஸ்ட் III பொதுச் செயலருக்கு குற்றச்சாட்டுப் பட்டியல் அனுப்புகிறார். 

(i) 10.12.2023 தேதி வரை சில நாட்களுக்கு LWA Application தரவில்லை, 
(ii) 16.12.2023 அன்று டூட்டி ஜாயின் பண்ணவில்லை,
 (iii) காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய ஊழியர்களைத் தூண்டியது, 
(iv) 16.12.2023 முதல் 19.12.2023 வரை LWA Application தரவில்லை.
 என்பவையே குற்றச் சாட்டுகள்.
 
*பொய்யில் விளைந்த குற்றச்சாட்டுகள்:*
தொழிற்சங்கப் பணிக்காக 180 நாட்களுக்கு மேல் சம்பளமில்லா விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதியின் அடிப்படையில் தொடர்ந்து LWA எடுத்துக் கொள்ள பொதுச் செயலருக்கு உரிமை இருந்தபோதும் ஒவ்வொரு முறையும் LWA எடுக்கும் போது முன்கூட்டியே ஈமெயிலில் விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு ஸ்பீட் போஸ்டில் அனுப்புவதை எப்போதும் வாடிக்கையாக கொண்டவர் தோழர் எஸ்.எஸ் மகாதேவையா. அந்த LWA Applications உரிய தேதிக்கு முன் தபாலில் வரவில்லையாம். எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டுகள் பாருங்கள். டில்லியில் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பவர் 16.12.2023 அன்றே ஜாயின் பண்ணியிருக்க வேண்டுமாம். சோசியல் மீடியாக்கள் யூடியூப், டெலிக்கிராம் போன்றவற்றில் பொதுச்செயலாளர் பேசும் போது சட்ட விதிகளுக்கு உட்பட்டே அவரது பேச்சுக்கள் இருந்தன. வன்முறையை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந்தால் மட்டும் தானே குற்றச்சாட்டு வைக்க முடியும் என்ற சட்டத்தை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் மிகவும் அபத்தமாக சட்டத்திற்கு புறம்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

*சான்றுகள் அரசாணைகள் மூலம் முறியடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்:.*
இலாகா அமைத்த விசாரணை அதிகாரி முன்பு இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை எதுவும் இல்லை; வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டவை என சான்றுகள் மூலமும் உரிய அரசாணைகள் மூலமும் முறியடிக்கப்பட்டன. இருந்தபோதும் மேல்மட்ட அழுத்தம் காரணமாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி அறிக்கை தந்துள்ளார். அதன் அடிப்படையில் ASP பெங்களூர் ஈஸ்ட்- III துணைக் கோட்ட அதிகாரி சம்பளத்தை ஸ்டேஜ் குறைத்து தண்டனை வழங்கினார் .

*பணிநீக்கம்  தான் மேல் மட்ட சதியின் இலக்கு:*
 மேல் மட்ட சதியின் இலக்கு சம்பளக் குறைப்பு அல்லவே. எனவே SSP பெங்களூர் ஈஸ்ட் டிவிசன் ஆளும் அதிகார வர்க்கத்தை திருப்திப்படுத்த சம்பளக் குறைப்பு தண்டனையை உயர்த்தி தோழர் எஸ்.எஸ்.மகாதேவையா அவர்களுக்கு பணிநீக்க  ஆணை வழங்கியுள்ளார். விதி மீறல்கள் கொண்ட இந்த பணிநீக்க தண்டனையை முறியடிக்க அமைப்பு ரீதியான தொடர் போராட்டங்கள் அவசியம் என்பதை கணக்கில் கொண்டு கடந்த  10.10.2025 அன்று கூடிய ஏ.ஐ.ஜி.டி.எஸ்.யு வின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டது. அதன்படி அஞ்சல் கோட்டங்களில்  தல மட்ட ஆர்ப்பாட்டங்கள்; மாநிலத் தலைநகர்களில் மாநிலம் தழுவிய தர்ணா, டில்லியில் தர்ணாப் போராட்டம் , வேலை நிறுத்தம் எனப் பல்வேறு கட்ட போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

 *தனிச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் சந்தித்த சவால்கள் சாதனைகள் ஏராளம் ஏராளம்*
தனிச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட நாள் தொட்டே சவால்களைச் சந்தித்து வளர்ந்த இயக்கம் தான் AIGDSU.  முதன் முதலாய்ச் சந்தித்த சவால் கொல்கத்தா சம்மேளனக் கவுன்சிலில். பதிய தொழிற்சங்க அங்கீகார விதிகளை ஏற்று அமைக்கப்பட்ட GDS சங்கத்தை அதே புதிய தொழிற்சங்க அங்கீகார விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட சம்மேளனத்தில் உறுப்புச் சங்கம் ஆக்கினால் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் கிடையாது எனும் அரசின் கொடுவாளுக்கு இரையாகி தனித்தே இயங்கியது. தனித்து இயங்கினாலும் போராட்டங்கள் மூலம் ஊழியர்களுக்கு பல சலுகைகளை பெற்றுத் தந்தது AIGDSU. GDS ஊழியர்கள் தபால்காரர், MTS, PA தேர்வுகள் எழுதும் போது அவர்கள் அந்தந்த கோட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கே எழுத முடியும் என்பதை மாற்றி surplus qualified லிஸ்ட் மூலம் வேறு கோட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் செல்லலாம் என்ற ஆணையை பெற்றுத் தந்ததன் விளைவாக  கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக ஆயிரக் கணக்கான GDS ஊழியர்கள் எழுத்தர்களாக தபால்காரகளாக MTS ஊழியர்களாக பதவி உயர்வு பெற்று வருகின்றனர். இது தோழர் எஸ்.எஸ் மகாதேவையாவின் வரலாற்று சாதனை. தனது மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையே உரமாக  வைத்தக் கொண்டு வளர்ந்தது தான் AIGDSU சங்கம்.அதனால் தான் சோதனைகள் அனைத்தையும் தாண்டி இலாகா ஊழியருக்கு இணையாக ஏராளமான சலுகைகளைப் பெற்றுத் தந்து சாதனை புரிந்துள்ளது.

*ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் பணிநீக்க ஆணை  முறியடிக்கப் படவேண்டும்
 ஈராண்டுகளுக்கு முன்னர் பொய்யான அற்பக் காரணங்களை காட்டி ஊழியர்களின் அரணாக விடிவெள்ளியாக விளங்கி வந்த NFPE பேரியக்கமும் , அதன் பிரதான சங்கமான AIPEU-Class-III சங்கமும் இந்த அரசால் முடக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியருக்கான எட்டாவது ஊதியக் குழு அதனைத் தொடர்ந்து GDS கமிட்டி அமையப் பெறல் வேண்டும் என்ற கோரிக்கை கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஆதாரக் கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்ல அஞ்சலகங்களிளிருந்து பட்டுவாடாவைப் பிரித்து  சுயாதீன தபால் பட்டுவாடா மையங்கள் உருவாக்குதல்  உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் அஞ்சல் துறையை தனியார் மயம் நோக்கி அரசு நகர்த்திக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் அரசின் ஊழியர் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் தொழிற்சங்க சக்திகளின் போராட்டம் என்ற ஆயுதத்தை முனை முறியச் செய்யும் அரசின் அதிகாரிகளின் கூட்டுச் சதியின் காரணமாக தோழர் எஸ். எஸ்.மகாதேவையா இப்போது பணிநீக்கம்  செய்யப் பட்டுள்ளார். ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் இதை முறியடிக்க சபதம் ஏற்குமாறு அஞ்சல் ஊழியர்களை வேண்டுகிறோம். 

*அஞ்சல் ஊழியர்களின் பேராதரவால்  அஞ்சல் இயக்கங்கள் மேலெழும்; துயரங்கள் தீர்க்கும்*
இப்போது இந்திய முழுவதும் உள்ள  அஞ்சல் ஊழியர்கள் படும் துயரங்கள் சொல்லிமாளாது. ஊழியர்களுக்கு   கற்பனைக்கு எட்டாத வணிக இலக்குகளை நிர்ணயம் செய்வதும்  இலக்கை எட்டாதவர்களை இம்சைப் படுத்துவதும் தண்டிப்பதும் தொடர்கதையாக உள்ளது. பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்புகள் முடக்கப் பட்டுள்ளன; அச்சுறுத்தப் படுகின்றன. அஞ்சல் ஊழியர்களின் பேராதரவால் முடக்கப்பட்ட அஞ்சல் இயக்கங்கள் மேலெழும்; மேலாதிக்கம் பெறும். அதற்கான காலம் விரைவில் வரும். அப்போது  தான்  அஞ்சல் ஊழியர்களின்  துயரங்கள்  தீரும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற மகாகவி பாரதியின் வரிகளே ஊழியர்களின் தாரக மந்திரம் .ஒற்றுமையே வலிமை தரும்; மேன்மை தரும். அஞ்சல் ஊழியர்கள் தங்களது  ஒன்றுபட்ட போராட்டத்தால்   தோழர் எஸ். எஸ்.மகாதேவையா மீதான   பணிநீக்க உத்தரவை வாபஸ் பெறச் செய்ய வேண்டும்.; அரசின் சதிச் செயலை முறியடிக்கவேண்டும்

நிறைந்த தோழமை அன்புடன்

கே.செல்வராஜ், கே.ராமசந்திரன் பி.ஆதிமூலம்,  S.இராஜேந்திரன், , P.சேர்முக பாண்டியன் , முன்னாள் கோட்டச் செயலர்கள் NEPE – அஞ்சல் மூன்று , சிவகங்கை கோட்டம்

No comments:

Post a Comment