மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, October 21, 2025

NFPTE இயக்க தலைவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் விழா



தபால் தந்தி துறை (P&T - Post and Telegraphs) என்ற பெயரில் தபாலும் தந்தியும் ஒரே குடையின் கீழ் இயங்கி வந்தன. அப்போது தொலைபேசிப் பிரிவு தந்தியுடன் இணைந்து இருந்தது. தொலைபேசிப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக 1.1.1985ல் தபால் தந்தி துறை தபால்துறை என்றும் தொலைபேசித் துறை என்றும் இரண்டு துறைகளாக பிரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக P&T அரங்கில் மிகப்பெரிய தொழிற்சங்கமாக விளங்கிய NFPTE (National Federation of Postal and Telegraph Employees) என்ற அமைப்பு  NFPE (National Federation of Postal Employees) என்றும் NFTE (National Federation of Telecom Employees) என்றும் பிரிப்பதற்கான தீர்மானம் கல்கத்தாவில் நடந்த NFPTE யின் 18 வது பெடரல் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது. NFPE யின் மாபொதுச்செயலராக தோழர் K.L.மோஸாவும், NFTE யின் மாபொதுச்செயலராக தோழர் OP.குப்தாவும் தேர்வு செய்யப்பட்டனர்.. கடந்த ஈராண்டுகளில் நமது தாய் இயக்கமாக இருந்த NFPTE யின் மிகப்பெரிய ஆளுமைகளாய் இருந்த தலைவர்கள் O.P.குப்தா, D.ஞானையா, KG.போஸ் ஆகியோரின் நூறாவது பிறந்தநாள் அஞ்சல் தொலைபேசி தொழிற்சங்கங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

 

தோழர் O.P.குப்தா:


Comrade Om Prakash Gupta alias O.P.Gupta 


 

தோழர் ஓம் பிரகாஷ் குப்தா 8.4.1921-ல் பிறந்தவர். 60 ஆண்டுகளுக்கு மேல் தபால் தந்தி ஊழியர்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்ட தொழிற்சங்க நாயகன். ஊழியர்களின் கோரிக்கைகளை மட்டும் முன் வைப்பது மட்டுமே எனது வேலை என்றிராமல் அவற்றை தீர்ப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும், திட்டங்களையும் அரசுக்கு முன்வைப்பார். அவரது அறிவாற்றலால் திறமையால் தபால் தந்தி ஊழியர்கள் பெற்றவை ஏராளம். தொழிற்சங்க ஜனநாயகத்தை எப்போதும் உயர்த்திப் பிடித்த தலைவர். தொழில்நுட்பம் தொலைபேசித்துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றால் ஏற்படவுள்ள பிரச்சனைகளை முன் கூட்டியே கணித்து கோரிக்கைகளை முன்வைத்திடுவார்; வென்றெடுப்பார்.

 

தொலைபேசித்துறையில் வளர்ச்சி துவங்கிய காலத்தில் பணியாற்றிய லட்சக்கணக்கான மஸ்தூர் ஊழியர்களை நிரந்தரமாக்கியது. அவரால் மட்டும் சாத்தியமானது. தொலைபேசித்துறை BSNL என்ற கார்ப்பரேஷனாக 15.09.2000ல் மாறியபோது அவர் அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலமாக BSNL ஊழியருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதிய முறை விரிவுபடுத்தப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

 

ஈடி ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி பாட்னாவில் 1978ல் நடந்த கருத்தரங்கில் பேசிய  O.P.குப்தா ஈடி ஊழியர்களை நிரந்தரமாக்கக் கீழ்க்கண்ட யோசனைகளை முன்வைத்தார்.

 

1. ஈடி நியமனத்தை முழுமையாக நிறுத்த வேண்டும். 2. பணிநிறைவு, பதவி உயர்வு, இறப்பு மூலம் ஏற்படும் ஈடிப்பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை பிற ஈடிப்பதவிகளோடு இணைத்து 8 மணிநேர வேலையுள்ளவையாக மாற்ற வேண்டும். அதன் மூலம் படிப்படியாக ஈடி ஊழியர்களை நிரந்தரமாக்கலாம். ஆனால்  இந்த யோசனைக்காக தோழர் O.P குப்தா ஈடிகளின் எதிரி, துரோகி என தூற்றப்பட்டார்.

 

ஜஸ்டிஸ் தல்வார் தலைமையில்  அமைக்கப்பட்ட ஈடி ஊழியர்களுக்கான சம்பளக் கமிட்டியின் பரிந்துரைகளை அமலாக்க வேண்டும் என 1998ல் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. தோழர் OP. குப்தா 1978ல் சொன்ன ஆலோசனைகளையே ஜஸ்டிஸ் தல்வார் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். அப்போது திரு வாஜ்பேயி தலைமையிலான ஆட்சி இருந்தது. அதில் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்கள் தொலைதொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அரசு நீதிபதியின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தது. தொழிற்சங்கத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்த 70,80 களில் OP.குப்தாவின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டு கோரிக்கைகளாக அரசிடம் முன்வைத்து போராடினால் ஈடி சிஸ்டம் இப்போது இல்லாமலே போயிருக்கலாம் .. தோழர் OP.குப்தாவின் தீர்க்க தரிசனத்தை இதன் மூலம் நாம் நன்கு உணரலாம். தோழர் O.P குப்தா , 6.1.2013-ல் மறைந்தாலும் அவர் குறித்த நினைவுகள் தபால் தொலைபேசி ஊழியர்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கும்.

 

தோழர் D. ஞானையா:



Comrade D.Gnaniah


 

தோழர் D. ஞானையா மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுவிக்கோட்டை என்ற ஊரில் 7.1.1921 அன்று பிறந்தார். 1941ல் கரூரில் அஞ்சலக எழுத்தராக பணியைத் துவக்கினார்..இராணுவ அஞ்சல் சேவையில் சில காலம் பணியாற்றிய பின் திருச்சிக்கு திரும்பினார். அங்குதான் அவர் தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். உதவிக்கோட்டச் செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE  யின் செயலராக 1963லும், NFPTE யின் மாபொதுச்செயலராக 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய 19.9.1958 ஒருநாள்வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தினார் அதற்காக ஜெயில், சஸ்பென்ஷன், டிஸ்மிஸ் என தண்டனைகளைப் பெற்றவர். அதன் மூலம் மத்திய அரசு உழியர்கள் சங்கங்களுக்கிடையே NFPTE அமைப்புக்கு எனத் தனிப்பெருமை சேர்த்தார். JCM (Joint)| |Consultative Machinery) கூட்டு ஆலோசனைக்குழு 1966ம்ஆண்டு அமைக்கப்பட்டது. அரசுடன் பலகட்ட பேச்சுவர்த்தை

 

                                                                                       1                                                                          PTO

 

நடத்தி அதை அர்த்தமுள்ள அமைப்பாக மாற்றினார். NFPTEயின் மாபொதுச் செயலராக இருந்தபோது பல

நாடுகளிலுள்ள தொழிற்சங்க அமைப்புகளின் அழைப்பின் பேரில் அங்கு சென்று சர்வதேச அரங்குகளில் உரையாற்றி இந்திய அஞ்சல் ஊழியருக்கு பெருமை சேர்த்தார்.

 

அஞ்சல்துறை தந்த அரிய முத்து அவர்  அபாரமான நினைவாற்றல் கொண்டவர் ஒப்பற்ற அறிவு ஜீவி; மார்க்சிய அறிஞர். இந்திய வரலாறு, சீன எல்லைப் பிரச்சனை பாகிஸ்தான் பிரிவினை, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் என எல்லா விஷயங்களிலும் பரந்துபட்ட ஞானம் உள்ளவர். வாசிப்பதும் எழுதுவதும் அவரோடு ஒட்டிப் பிறந்தவை.. தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களும், நூற்றுக்கணக்கான சிறுபிரசுரங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

 

 

NFPTE இயக்கத்தின் வைர விழா மாநாட்டை நமது சிவகங்கை  கோட்டச்சங்கம் அஞ்சல், நான்கு, GDS சங்கங்களோடு சேர்ந்து 2014ல் சிவகங்கையில் நடத்தியபோது தனது 93 வது வயதிலும் மிக ஆர்வமாக ஒரு இளைஞரைப் போல் கலந்து கொண்டு உரையாற்றி நமது கோட்டத்துக்கு பெருமை சேர்த்தார். தனது 97-வது வயதில் 8.7.2017 அன்று கோயம்புத்தூரில் காலமானார். அவரது நினைவுகளைப் போற்றுவோம் அவரைக் கற்போம்; அவர் காட்டிய போராட்டப் பாதையில் பீடு நடை போடுவோம்.

 

தோழர் K.G.போஸ்:


Comrade Krishna Gopal Bose alias K.G Bose


KG போஸ் என அன்பாக அழைக்கப்படும் கிருஷ்ண கோபால் போஸ் 7.7.1921 அன்று இப்போது வங்காளதேசத்திலுள்ள ஹேலுத்தலா என்ற ஊரில் பிறந்தார். 1941ல் கல்கத்தாவிலுள்ள DET (Divisional Engineer, Telegraphs) அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். பின்னாளில் NFFTE இயக்கத்தின் மாபொதுச் செயலராக ஆனவரும் தாதாகோஷ் என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டவருமான B.N. Ghosh (பூபேந்திர நாத் கோஷ்) 1946ல் வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று வங்கத்தில் நடத்தினார். அப்போது இளைஞராக இருந்த KG.போஸ் அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தார். அங்குள்ள தபால் தந்தி ஊழியர்கள் கொண்டாடும் தலைவராக உருவானார். அப்போது அவருக்கு வயது 25 தான். 1946 வேலை நிறுத்தப் போராட்டம் இந்திய தபால் தந்தி தொழிற்சங்க அரங்கில் அதிர்வலையை உண்டாக்கியது. போராட்டத்துக்கு எதிராக, அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். UPTW (Union of Postal and Telegraph Workers) என்ற ஒருங்கிணைந்த தொழிற்சங்க அமைப்பு உருவாகக் காரணியாக அப்போராட்டம் இருந்தது. UPTWவுக்கு தோழர் OP.குப்தா பொதுச்செயலரானார். தோழர் KG.போஸ் இந்தியா முழுவதிலும் UPTW யைக் கட்டும் பணியில் முன்னணிப் பாத்திரம் வகித்தார்.

 

UPTW 1949-ல் வேலைநிறுத்த அறைகூவல் விட்டது. சுதந்திரம் கிடைத்து ஓராண்டு கூட ஆகவில்லை. நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு இப்போராட்டத்தை நடக்கவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்கக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தாதாகோஷ், OP.குப்தா போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். வங்கத்தில் K.G.போஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசின் கொடூரங்கள் நீண்டன. அரசால் வேலை நிறுத்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. ஆனால் K.G.போஸ் மீதான பழிவாங்கும் நடவடிக்கை பல்லாண்டு நீடித்தது. அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்படவேயில்லை. அதன்பின்னர் விசாரணை என்ற பெயரில் நடந்த கேலிக்கூத்து அடிப்படையில்    1961-ம் ஆண்டு பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட அவர் தனது முமுநேரத்தையும் NFPTE. இயக்கத்திற்காகவே அர்ப்பணித்தார். மேலும் மேற்குவங்க சட்டசபைக்கு MLA.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு  மக்களுக்கான பணியையும் சிறப்பாக செய்தார். உடல்நலக்குறைவு காரணமாக மேற்சிகிச்சைக்காக லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போதே 11.12.1974 அன்று அவர் உயிர் பிரிந்தது. ஆனால் அவருடைய பெயர் தபால் தந்தி இயக்க வரலாற்றில் நிலைத்த இடம் பெற்றுள்ளது.

 

தியாகத் தலைவர்களை நினைவு கூர்வோம்:

 

தபால் தந்தி துறையில் அப்போதைய பிரிட்டிஷ்/ இந்திய  அதிகாரிகளின் கொடுங்கோன்மைக்கு அஞ்சாமல் தொழிற்சங்கத்தை வலுவுள்ள அமைப்பாக உருவாக்கப பாடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்களை நினைவு கூர்வோம்; அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் படித்தறிவோம், அவர்கள் காட்டிய வழியில் இயக்கத்தை மென்மேலும் பலமுள்ளதாக்குவோம் ; அதன் மூலமே நம்முன்னுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்

 

(19.06.2022 அன்று சிவகங்கையில் நடைபெற்ற அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின்             (P3- NFPE) 28வது கோட்ட மாநாட்டு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டு 07.08.2022  அன்று நடைபெற்ற திருநெல்வேலி கோட்ட AIPRPA நான்காவது மாநாட்டில் விநியோகம் செய்யப்பட்டது . அனுமதித்த சிவகங்கை P3 கோட்டச் செயலர் தோழர் கே.மதிவாணன் அவர்களுக்கு நன்றி)

... பி.சேர்முக பாண்டியன் மதுரை


No comments:

Post a Comment