மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, February 16, 2025

சின்னஞ்சிறு கிளியே-கண்ணம்மா! -மகாகவி பாரதியார் பாடல் படங்களாக - Mahakavi Bharathiyar song Chinnanchiru Kiliye Kannamma in image files

சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா!       மகாகவி பாரதியார் பாடல் 

குழந்தைகளோடு  விளையாடுவது , பேசுவது  எல்லோருக்கும் எப்போதும் பிடித்தமான ஒன்று. வாழ்வின்  இன்பமான  தருணங்கள் யாதென கேட்டால் *குழந்தைகளோடு விளையாடும் நேரமே°  எனத்  தயக்கமின்றி யாரும்  சொல்வர். நான் இன்னும் கொஞ்சம்  அழுத்தமாக சொல்வேன்.

 

 சிறு குழந்தைகளின்   ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கி ரசிக்கும் போது  இறகு போல மனது ஆகிவிடும் . நம் குழந்தையாகவோ அல்லது நம் பேரக் குழந்தையாகவோ இருந்தால் மனசு இறக்கை  கட்டிப்  பறக்கும் .அவர்களது ஒவ்வொரு  அசைவும், செயலும், மழலைப் பேச்சும்  கோபத்தை  தணிக்கும் , துயரத்தை  ஓட்டும்,  மகிழ்ச்சியை  பிரவாகமாய் பொங்கி ஓடச் செய்யும்.  வார்த்தையில் அடங்காத அவ்உணர்வுகளை உணர மட்டுமே முடியும். சொல்லில் வடிப்பது யாருக்கும் கடினமே.  ஆனால் மகாகவி பாரதி கண்ணம்மா என் குழந்தை என்ற தலைப்பிலான சின்னஞ்சிறிய கிளியே கண்ணம்மா என்ற  பாடலில் கவித்துவம் மிக்க தனது  வரிகள் மூலம் அவ்வுணர்வுகளை சொல்லில் வரைந்த ஓவியங்களாகத் தீட்டித் தந்துள்ளான்.

 

பாரதியின் சின்னஞ்சிறு கிளியே பாடலை படித்து அது தரும் சித்திரத்தை மனிதில் வரைந்து கொண்டபின்னர்   உங்கள் குழந்தைகளின் உலகத்தை உற்று நோக்கினால் நீங்கள் அடையும் பரவசம் ஒரு புது அனுபவத்தை அள்ளித்தரும், இனி பாடலை படிப்போம் .அதன் கவிதை இன்பத்தை துய்ப்போம்  

கண்ணன் பாட்டு - கண்ணம்மா என் குழந்தை 

சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என் முன்னே
ஆடி வருந் தேனே!

சின்னஞ் சிறு கிளியே-1


















ஓடி வருகையிலே-கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால்-கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!




சின்னஞ் சிறு கிளியே -2

















கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ,-கண்ணம்மா!
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!



சின்னஞ் சிறு கிளியே-3















உன்கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்ந்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.



சின்னஞ் சிறு கிளியே 4
















இன்பக் கதைக ளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே-உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?



சின்னஞ் சிறு கிளியே 5


3 comments:

  1. மகாகவி பாரதியின் கவித்துவ வரிகளுக்கு அணிகலன்கள் பூட்டி, மனதை கொள்ளை கொள்ளும் வருணைகளோ பாண்டியனது அனுபவ உணர்வுகளோ.. அழகே அழகு..

    ReplyDelete