மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, May 30, 2021

சிவகங்கை மாவட்ட தொழிற்சங்கவாதி ஊரக வளர்ச்சித் துறை தோழர் A கணேசன் மறைவு- கண்ணீர் அஞ்சலி

*
தோழர் A கணேசன் உதவி இயக்குனர்( ஊரக வளர்ச்சி) விருதுநகர் மாவட்டம் அவர்கள் இன்று 30.05.2021 ஞாயிறன்று   மரணமடைந்த செய்தி பேரிடியாக தாக்கியது. 

*அரசுப்பணியை  மக்கள் பணியாக நேசித்தவர்*

மானாமதுரை BDO அலுவலகத்தில் தனது அரசுப்பணியை துவங்கிய தோழர் ஏ.கணேசன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். *"அரசுப்பணி  மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு"* என்ற உயர்ந்த இலட்சியத்தை கொண்ட அவர் சிவகங்கை மாவட்டத்தை தனது  சொந்த மாவட்டமாக கருதி அதன் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  


*மக்கள் பணியில் காட்டிய நெருக்கம் ஆபத்தாகி போனதே*

நான் 1990 களில் மானாமதுரை முல்லை நகரில் குடியிருந்த போது என் வீட்டருகே  உள்ள  பட்டறை தெருவில் அவர்  சில ஆண்டுகள்  குடியிருந்தார். அதன் பிறகு சிவகங்கை, காரைக்குடி போன்ற இடங்களில் குடும்பத்துடன் குடியிருந்தார். பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில்  கல்லல் உள்ளிட்ட பல பகுதிகளில் பணி செய்தார்.  பணி செய்தார் என்பதை விட மக்களுக்கு அரசு தரும் சலுகைகளை பெற்றுத்தரும் பெரும் சேவையை மேற்க்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின் பதவி உயர்வு காரணமாகவே சிவகங்கை மாவட்டத்திலிருந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார்.  சில மாதங்களுக்கு முன்னரே விருதுநகர் மாவட்டத்தின்  ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனராக பொறுப்பு ஏற்று பணியை தொடர்ந்தார். மக்கள் பணியில் காட்டிய நெருக்கம் காரணமாக கொரோனா தொற்று நோயால் பீடிக்கப்பட்ட  அவர் காலனின் பிடியில் சிக்கிக்கொண்டார்.

*சிறந்த தொழிற்சங்கவாதி*

வெறும் அலுவலக பணியோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், *ஊரக வளர்ச்சி துறை பணியாளர் சங்கத்தில் சிறப்பாக சேவை செய்தார். அதன்  சிவகங்கை மாவட்டத் தலைவராக சிறப்பாக செயல்பட்டார்.  துறைவாரி சங்கம் மட்டுமின்றி பொதுச் சங்கமான தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும் சீரிய முறையில் பணி செய்தார்*. 

*பழகுவதற்கு இனியவர், அன்புமிக்கவர்*

  சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மாநில பொதுத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு உருவானபோது அதில் மிகவும் ஆர்வமும் தீவிரமும் காட்டி செயல்பட்டார்.  கடந்த வாரம்  ( 23.05.2021)அன்று மரணமடைந்த தோழர் கே.பழனிவேலு அதன் தலைவராகவும் , அப்போது MLA ஆக இருந்த தோழர் எஸ்.குணசேகரன் கௌரவ தலைவராகவும் இருந்தனர்.
அதன் பொதுச்செயலராக இருந்து செயல்பட்ட எனக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த தோழர் அவர். 
பழகுவதற்கு மிகவும் இனியவர். யாரிடமும் எளிதில் பழகும் சுபாவம் கொண்டவர்.  எப்போதும்  சாபரி உடையில் அழகான  தொப்பி அணிந்திருப்பது அவரது தனித்த அடையாளம்.


*அன்பு காட்டுவதில் உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்*


அஞ்சல் துறை தொழிற்சங்கத் தோழர்  கே.செல்வராஜ்   தனது பணியை பெங்களூரில் நிறைவு செய்துவிட்டு காரைக்குடி திரும்பியதும்  தனது வளர்ச்சிக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு புதுமையான விழாவை அக்டோபர் 6  2019 ல் நடத்தினார்.  முந்தைய நாள் இரவே காரைக்குடி சென்று தங்கிவிட்டோம். அன்று இரவு அங்கு வந்த தோழர் கணேசன் எங்கள் மீது காட்டிய கரிசனமும் உபசரிப்பும் மறக்க முடியாது. இரவு 11 மணி வரை எங்களோடு தங்கி பேசிவிட்டு சென்ற அவர் மீண்டும்  காலையில் ஆறுமணிக்கே மீண்டும் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து எங்களுக்கு தேவையான அனைத்தையும்  கொண்டு வந்து  உபசரித்த விதம் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

*நட்பை குடும்ப உறவாக கொண்டாடியவர்*


அன்றைய தினத்தில் அவரது துணைவியார், குழந்தைகளை தொலைபேசியில் அழைத்து என்னுடன் பேசவைத்து மேற்படிப்பு குறித்த ஆலோசனைகள் சொல்ல சொன்னார். . மேலும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரையும் அழைத்து என்னோடு பேசவைத்தார்.   என்மீது  நட்பு காட்டும் அவரின் அன்பின் ஆழத்தை அன்று தான் முழுமையாக கண்டேன். 

*அவர் குறித்த நினைவுகள் நிரம்பிக் கிடக்கும் மனம்*

எங்களது பேச்சு தமிழ் இலக்கியம் பற்றி திரும்பியபோது  *யாதும் ஊரே யாவரும் கேளிர்*  என்ற புறநானூற்று பாடலில் உள்ளடங்கிய தத்துவம் பற்றி பேசினோம். அதை ஒலிப்பதிவு செய்ததை கண்ட நான்  கணேசன், நான் இலக்கியவாதியும் இல்லை, பேச்சாளரும் இல்லை இதை போய் ஏன் ரிகார்டு செய்றீங்க?  என்று சொன்னபோது அதை தனது எளிய புன்னகையால் நான் சொன்னதை  புறந்தள்ளி விட்டு பதிவை  தொடர்ந்தார்.அது தான் அவரை நான் நேரில் பார்த்த கடைசி நாள். அந்த நாள்  அவர் குறித்த நினைவுகளால் என் மனம் நிரம்பிக்கிடக்கிறது. அதற்குப்பின் அலைபேசி மூலமும் Whatsapp மூலமும் என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார். 


*குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு*

*அரசுப்பணியை மக்கள் பணியாக நேசித்த நேர்மையான  ஒரு அரசு அதிகாரி, சிறந்த தொழிற்சங்கவாதி, வாஞ்சையோடும் உரிமையோடும் பழகும் அன்புத் தோழர் A கணேசன்* இன்று நம்மிடம் இல்லை. *இனி அவரைப் பார்க்க முடியாதே! என்ற நினைப்பே பெருஞ் சோகமாய் வாட்டுகிறது*.  அவரது மறைவால் நல்ல ,திறமையான , நேர்மையான அதிகாரி ஒருவரை  தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை இழந்துள்ளது.   இனிய நண்பரை ,தோழரை 
அவரோடு நட்பு பாராட்டிவந்த அனைவரும் இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்பும் பண்பும் பொறுப்பும் மிக்க  குடும்பத் தலைவரை  இழந்து பெருந்துயரில் வாடுகிற  அவரது மனைவி , குழந்தைகளுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கல்கள். 

பி.சேர்முக பாண்டியன்
ஓய்வு பெற்ற முதுநிலை கணக்கு அதிகாரி ,அஞ்சல் துறை
@ மதுரை

5 comments:

  1. ஒரு சிறந்த மனிதரை,சங்க செயல்பாட்டாளரை கொரனா கொன்று விட்டது.

    ReplyDelete
  2. மிக வருத்தமாக உள்ளத்து ..இந்த கொரோனா காலகட்டத்தில் பல தொழிற்சங்க
    முன்களப்பணியாளர்களை இழப்பது பேரிளப்பே....அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  3. எண்ணற்ற தொழிற்சங்க போராளிகளை இந்த கொரானா என்னும் கொடிய நோய் இரையாக்கி கொண்டது வேதனையுடன் கூடிய சோதனை. அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete