மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, May 23, 2021

தோழர் கே. பழனிவேலு அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி



*தோழர் கே. பழனிவேலு அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி*

மத்திய மாநில அரசு ஓயவூதியர் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்டத் தலைவர் தோழர் கே. பழனிவேலு அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று   (23.5.2021 )  காலை  சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி பேரிடியாக இருந்தது எனக்கு.


*தோழமையை விஞ்சிய உறவு _ அப்பாவான தோழர்.

எனக்கும் அவருக்குமான உறவு தொழிற்சங்க அரங்குகளில் தோழர்களுக்கு மத்தியில் இருக்கும்  உறவை விஞ்சியது. என் தந்தையின் பெயரும்  பழனிவேல் என்பதால்  எனது டாடி என்று அவரை அஞ்சல் தோழர்களிடம் விளையாட்டாக அறிமுகம் செய்து வைத்தேன். அன்றிலிருந்து அவரை நான் டாடி என அழைப்பதும் அவர் என்னை சன் என அழைப்பதும் வழக்கமானது.  அது எங்களுக்குள் இடையிலான அன்பை அதிகப்படுத்தியது . 


*அறிமுகத்தில் ஒரு புதுமை*

நான் முதன் முறையாக அவரைப் பார்த்த இடம் நேரம் கூட எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. இப்போது அஞ்சல் இலாகாவின் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிற   மானாமதுரை  தலைமை அஞ்சலகம் அப்போது  பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் கல்யாணித் தேவர் வீட்டுக்கு எதிராக இருந்த ஒரு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.அங்கு என்னை முதன் முறையாக சந்திக்க வந்த தோழர் பழனி வேலு " நான் பணி நிறைவு செய்த மாநில அரசு ஊழியன்; தொழிற்சங்கங்களில் செயல்பட்டிருக்கிறேன். மானாமதுரையில் அஞ்சல் தொழிற்சங்கம் செயல்பாடு  சிறப்பாக இருக்கிறது என்பதை கேட்டறிந்து உங்களை பார்க்க வந்தேன்"  என்று சொல்லி சுய அறிமுகம் செய்துகொண்டது என் நினைவில் அப்படியே உள்ளது. . ஒரு சங்கம் குறித்து மற்ற சங்கத்தினர் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருந்ததால் அப்போது எனக்கு இது ஒரு புதுமையான அறிமுகமாகப்பட்டது.


*தொழிற்சங்க கூட்டமைப்பும் அவரும்*

அதன் பின் 2006 ல் ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவானபோது அவர் தலைவராகவும் நான்  பொதுச்செயலாளர் ஆகவும் செயலாற்றினோம். அப்போது நான் மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் பணியாற்றி வந்தேன்.  தொழிற் சங்க செயல்பாட்டில் வயதுக்கு மீறிய அவரின்  வேகத்தை கண்டு  வியப்பேன். சில நேரம் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவேன். சில நேரங்களில்  தலமட்ட எதார்த்தம் காரணமாக  அவரின் வேகத்தை  கட்டுப்படுத்த வேண்டிய சூழலும் எனக்கு உருவாகும். அமைப்பின் விறுவிறுப்பான செயல்பாடு , வளர்ச்சி , மேம்பாடு என்பது பற்றியே பேசுவார். தன்னை ஒருபோதும் முன்னிலை படுத்த மாட்டார்.
 துரு துரு என இருக்கும் ஒரு  இளைஞரின் சிந்தனையும், செயல் திறனும்  ஊக்கமும் அவரிடம் அப்படியே இருக்கும் . அது  என்னை  அதிசயப்பட வைக்கும். . 


*உறவுக்கு தூரம் பொருட்டல்ல*

நான் இடமாற்றலாகி மதுரை மாவட்டத்திலுள்ள  வாடிப்பட்டிக்கும், பதவி  உயர்வு பெற்று பெங்களூர், சென்னை டில்லி என சிவகங்கை மாவட்டத்திலிருந்து  சென்று பல ஆண்டுகள் ஆகியும் நானும் அவரும் எப்போதும் தொடர்பிலே இருந்தோம்.


*அஞ்சல் சங்கங்களோடு தொடர்பு* 

தோழர் கே.செல்வராஜூம் நானும் அவரிடம் கொண்ட தோழமை உறவு  காரணமாக  சிவகங்கை கோட்டத்திலுள்ள அஞ்சல் சங்கங்களின் பொறுப்பாளர்களும் , அஞ்சல் ஊழியர்களும் அவரை நன்கு அறிவார்கள். அவர்களோடு அவரும் அன்போடு பழகுவார். எழுத்தர் சங்கம், தபால்காரர் சங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் என மூன்று சங்கங்களின் மாநாடுகளில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுவார். பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டார். ஐந்தாறு நிமிடங்களில் சொல்லவேண்டியதை  நறுக்கென பேசி முடிப்பார்.


*

அதன் பின்னர் மத்திய மாநில அரசு ஓயவூதியர் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட தலைவராய் பொறுப்பேற்ற பின்னர், அதன் மாநில செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் என்னை   தொடர்பு கொண்டு பேசுவார். அந்த அமைப்பை பலப்படுத்துவது பற்றியும்  செயல்பாட்டை  விரிவாக்கம் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய  மட்டுமே அவர் பேச்சின் சாரம் இருக்கும்.


*மூச்சும் பேச்சும் சிந்தனை அனைத்தும் சங்கம் பற்றியே*

என்னுடன் பேசும்போதெல்லாம் 
 தொழிலாளர்களுக்கான வர்க்க அரசியலின் தேவை பற்றி பேசுவார். ஆளும் அரசின் கொள்கைகளால் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை சுற்றியே  அவரது பேச்சு இருக்கும்.  அவரது மூச்சும் பேச்சும்  சிந்தனையும்  சங்கம் பற்றியும், தொழிலாளர்கள் சந்தித்து வரும்  பிரச்சனைகள் பற்றியுமே இருந்தன.


*தன்னலமற்ற தொழிற்சங்கவாதி*

அவரைப்போல் தன்னலமற்ற தொழிற்சங்க வாதிகளை காண்பது அரிது.  சங்கப்பணிக்காகவே  தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்தவர்.போராட்டங்களுக்கும் .கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும், ஊழியர்களை ஒன்று திரட்டுவதில் வல்லவர். எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கி கொண்டு அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பை உடையவர்.


*நம்பமுடியாத மறைவு*

சில மாதங்களாக ,அவர் தனது  மனைவிக்கு எடுக்க வேண்டிய சிகிச்சைக்காக மிகவும் சிரமப்பட்டு அலைந்து கொண்டிருந்தார். முதலில் சிவகங்கை GH ல் சேர்த்திருந்தார்.பின்னர் காரைக்குடி தோழர் கோவிந்த ராமானுஜம் அவர்களது உதவியால் அவரது மகன்கள் மதுரையில் நடத்தும் கல்யாணி மருத்துவமனையில் அம்மாவை சேர்த்திருந்தார். அப்போது நேரில் சென்று பார்த்து நம்பிக்கையான வார்த்தைகள் சொல்லி வந்தேன்.நான்கு நாட்களுக்கு முன்னர் என்னை தொடர்பு கொண்ட அவர் "எனக்கு காய்ச்சல் ஆக இருந்தது டெஸ்ட் எடுத்து பார்த்தேன்  டைபாய்டு பீவர் என்று சொன்னார்கள் . ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். சீக்கிரம் சரியாகிவிடும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். 
நேற்று நான் அவரது எண்ணை அழைத்தேன். அவரது தம்பி  திரு.மூர்த்தி பேசினார். அண்ணன் சிவகங்கை GH ல்அட்மிட் ஆகியிருக்கிறார். நன்றாக உள்ளார். நீங்கள் விசாரித்ததை அவரிடம் சொல்கிறேன் என்கிறார்.
எனவே  அவரது மறைவு குறித்து வந்த  செய்தி பேரிடியாக என்னுள் இறங்கியது. நம்ப முடியவில்லை.



*நம்மை தவிக்க விட்டு சென்ற இனிய தோழர்*

 துரு துரு இயங்கும் அவரது உருவமே காட்சியாக என்னுள் பரவியது. அச்செய்தி உண்மையாக இருக்க கூடாது என்ற நம்பிக்கையோடு  மீண்டும் அவரது எண்ணை அழைத்தேன். அவரது தம்பி அதே செய்தியை உறுதிப்படுத்தினார். மீளாத அதிர்ச்சிக்கு நம்மை ஆட்படுத்தி விட்டு இப்பூவுலகில் இருந்து நீங்கி விட்டார் தோழர் கே. பழனிவேலு.


*உங்களுக்கு எங்கள் செவ்வணக்கம் தோழரே!*

 தொழிலாளர்கள் பற்றி எப்போதும் சிந்தித்து வந்த 
அவரது மறைவு சிவகங்கை மாவட்ட தொழிலாளர்களுக்கு, ஓயவூதியர் களுக்கு  மட்டுமல்ல இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கே பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்

*Red salute to comrade Palanivelu*

பி.சேர்முக பாண்டியன்
மதுரை


5 comments:

  1. தோழரை பற்றிய பதிவு அருமை. மிகவும் துடிப்பான ஒரு போராளியை இழந்துவிட்டோம்!

    ReplyDelete
  2. தோழருக்கு செவ்வணக்கம்

    ReplyDelete
  3. உழைக்கப் பிறந்தவர். உழைப்பின் பெருமையை அறிந்தவர். தொண்டினை தலையாய கடமையாக கொண்டவர்.
    அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. உழைக்கப் பிறந்தவர். உழைப்பின் பெருமையை அறிந்தவர். தொண்டினை தலையாய கடமையாக கொண்டவர்.
    அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. தொழிறசங்களின் செயல்பாட்டை உயிரோட்டாமாக கொண்டு செல்லக்கூடிய தோழர் இழந்துவிட்டோம்

    ReplyDelete