தமிழ் அன்னை தந்த மகாகவி பாரதியின் பிறந்தநாள் .எட்டயாபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாக டிசம்பர் 11 , 1882 அன்று பிறந்தார். அவரது இயற் பெயர் சுப்பிரமணியன் .செல்லப் பெயர் சுப்பையா .
தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை உயர்த்தி போற்றியவர் மகாகவி பாரதி .பிரம்மனின் தொழில் படைப்பு . அந்த படைப்பு தொழிலை இப் பூவுலகில் செய்பவர்கள் தொழிலாளிகளே எனச் சொல்லி அவற்றைப் பட்டியலிடுகிறார்.
"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் பல வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே"
இப்படி படைப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் உங்களுக்கு எல்லாப் புகழும் சேரட்டும் என்பதை
"பெரும் புகழ் நுமக்கே இசைக்கிறேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே !"
என தொழிலாளர்களை நோக்கி கவி பாடுகிறான்.
விவசாயம் செய்து எங்களுக்கு உணவு , காய்கறி தருகிறீர்கள். எண்ணெய், பால், நெய் என எல்லாம் தருகிறீர்கள் . மரங்கள் அறுத்து எங்களுக்கு வீடு கட்டி தருகிறீர்கள் . நெசவு நூற்று ஆடை தருகிறீர்கள். எனவே நீங்கள் இந்த பூமியில் எங்களை காப்பவர்கள் என பாரதி சொல்வதை அவனது கவிதை வரிகளில் படியுங்கள்.
மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கறி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லாடை செய்திடுவீரே
.
"விண்ணின் இன்றெமை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே "
அது மட்டுமா .தொழிலாளர்களே! நாட்டில் அறத்தை நிலை நாட்டுபவர்களும் , மக்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியும் தருபவர்களும் நீங்களே . எனவே சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் "எங்களது கண்ணுக்கு முன்னால் தெரியும் தெய்வங்கள் நீங்கள் தான் " .என பாரதி குதூகலிக்கிறான் .
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே
தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே
இந்த பாரத தேசம் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என பாரதி சொல்வதைப் படியுங்கள் .
பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென குவிப்போம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
அது மட்டுமா . "உலகத் தொழில்கள் அனைத்தும் உவந்து செய்வோம்" என இந்தியத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார் .
"குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார் ".
1600 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி நம்மை வெள்ளையகளின் அடிமையாக்கியது வரலாற்று உண்மை. ஆனால் இன்று என்ன நடக்கிறது? இப்போது வெள்ளைகார கம்பனிகளுக்கு எல்லா சலுகைகளையும் அள்ளி வழங்கி வெண்சாமரம் வீசி வரவேற்கிறது மத்திய அரசு. உள்ளூர் தொழிலாளர்கள், விவசாயிகள் , நெசவாளிகள், அடித்தட்டு சிறு வியாபாரிகள் வேலை இழப்பது பற்றியோ அரசு கவலை படவில்லை . பெரு முதலாளிகள் ( CORPORATES) நலனை மட்டுமே பாதுகாக்கும் அரசாக இருக்கிறது மத்திய அரசு . ஏழை எளிய மக்களின் நலன் குறித்த அக்கறை அதற்கு ஏதுமில்லை . அதற்கு காரணம் இந்திய தொழிலாளர்கள் ஜாதி, மத ,அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பதும் , வர்க்க உணர்வின்றி நொந்து கிடப்பதுவுமேயாகும் .எனவே பாரதி கண்ட கனவுலகம் படைத்திட " சிலர் வாழ, பலரை வாடவைக்கும்" மத்திய அரசின் பொருளாதரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட வர்க்க ஒற்றுமையுடன் கூடிய ஒற்றுமை நமக்கு மிக அவசியம். "ஒற்றுமை வழி ஒன்றே வழியென்பது ஓர்ந்திட்டோம் நன்கு - தேர்ந்திட்டோம் . மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக் கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம்" என்ற பாரதியின் வரிகளை போர் பரணியாகப் பாடுவோம்.
“பாரதி பிடித்த தேர்வடம் நடு
வீதி கிடக்கிறது- அதைப்
பற்றிப்பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித் தவிக்கிறது!
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் - நாம்
நடந்தால் தேர் நடக்கும் - அன்றேல்
வெய்யில் மழையில் கிடக்கும்"
என்ற பரிணாமன் கவதையை மகாகவி பாரதியாரின் இன்றைய பிறந்த நாளில் நினைவு கூர்வோம். அவன் பிடித்து விட்டு சென்ற தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே.
குறிப்பு:
இந்து மத புராணங்களும், சாஸ்திரங்களும் காலத்தை யுகமாக பிரித்துள்ளனர்.
கிருத யுகம் - அறம், உண்மை நிறைந்த யுகம். வறுமையில்லை, துயரமில்லை.எங்கும் மகிழ்ச்சி தவழும் யுகம். இந்த யுகத்தில்அறக்கடவுளுக்கு நான்கு கால்கள் உண்டு. அரிச்சந்திரன் இந்த யுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுவதுண்டு.
எனவேதான் பாரதி இரஷியப் புரட்சியை பற்றி குறிப்பிடும்போது
"இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ"
என்கிறான். இரஷியப் புரட்சி மக்களுக்கு கிருத யுகம் வந்துவிட்டதாக பழமையோடு புதுமையைப் பொருத்துகிறான்
திரேதா யுகம் - அறக்கடவுள் தன் ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார் .இராமன் அவதாரம் செய்ததது இந்த யுகத்தில் தான்
துவாபர யுகம்--அறக்கடவுள் தன் இரு கால்களை இழந்து இரண்டு கால்களுடன் இருப்பார் .மஹாபாரதம் நடந்தது இந்த யுகத்தில் தான்
No comments:
Post a Comment