மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, September 20, 2011

மனம் தளராத பெண் போராளி -இரும்பு மனுஷி- ஐரோம் சானு ஷர்மிளா ( Irom Chanu Sharmila)


மனம் தளராத பெண் போராளி -இரும்பு மனுஷி- ஐரோம் சானு ஷர்மிளா ( Irom Chanu Sharmila)

                              Armed Forces ( Special Powers) Act 1958 ( இராணுவத்தினருக்க்கான சிறப்பு அதிகாரத்திற்கான சட்டம் 1958)   கலவரப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட மணிப்பூர் , நாகாலந்து, மிசோரம் , மேகாலயா, திரிபுரா,அருணாசல பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் அமலில் இருந்து வருகிறது. இராணுவத்தினருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை இச்சட்டம் தந்துள்ளது. கேள்வி கேட்பாடே இல்லாமல் யாரையும் எப்போதும் கைது செய்ய்யலாம் . விசாரணைக்கு அழைத்து செல்லலாம்.  அவர்கள் திரும்பி வரலாம் வராமலும் போய்விடலாம். தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கப் போகிறோம் என்று சொல்லி அள்ளிச் செல்லப் பட்ட குறைந்த வயதுள்ள பெண்களும், ஆண்களும் திரும்பி வராவிட்டல் அவர்களது பெற்றோர் படும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? மனித உரிமை மீறலுக்கு அப்பட்டமாக துணை போகும்  கொடுஞ்சட்டம் அது.

                                 அன்று நவம்பர் 2, 2000 . மணிபூர் தலைநகரம் இம்பால் அருகில் உள்ள நகரம் மலோம் ( MALOM) . அங்குள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் மாலை நேரத்தில் பஸ்ஸுக்கு பலர் காத்திருந்தனர். அவர்களிடம் பல கனவுகள். வரும் பேராபத்தை உணரவில்லை. ஓரிரு நட்களுக்கு முன்னர் தங்களது முகாமில் குண்டு வீசிய தீவிரவாதி ஒருவனைப் பிடிக்க அந்த நகருக்குள் திடீரென நுழைந்த அஸ்ஸாம் ரைபில்ஸை சார்ந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். அந்த இடத்திலேயே 10 பேர் மாண்டனர். மலோம் மசாக்கர் என மணிப்பூர் பத்திரிக்கைகள் வர்ணித்தன. அவர்களில் ஒருவர் 1988ல் குழந்தைகளுக்கான வீர சாகச விருது பெற்ற 18 வயது சினாம் சந்திரமணியும் ஒருவர். தன் சித்தியை அழைத்துகொண்டு பஸ் ஏற்றிவிட வந்த அவரது மூத்த சகோதரரும், 62 வயது நிரம்பிய அவரது சித்தியும்   கோரமாக மடிந்தனர், ஒரே குடும்பத்தை சார்ந்த மூவர் அக்கோர சம்பவத்தில் இற்ந்து போயினர் . 
                                  தீவிரவாதத்துடன் சம்பந்தமே இல்லாத சாதாரண மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட துயர சம்பவம் 28 வயது மங்கை சானுவுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த Armed Forces ( Special Powers) Act 1958 ( AFSPA)  சட்டத்தால் தானே இம்மாதிரியான துயர சம்பவங்கள் நடைபெறுகின்றன . அச்சட்டத்தை வாபஸ் பெற ஆளும் மத்திய அரசைக் கோரி காந்திய வழி அறப்போராட்டமான உண்ணாவிரத போராட்டமே சிற்ந்த வழி என கருதினார்.. தன் தாயின் ஆசிர்வாதத்துடன் மறுநாள் நவம்பர் 3ம் தேதி வெள்ளிக் கிழமையன்றே தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். போராட்டம் சில நாட்கள் தொடர்ந்தது. மக்களின் ஆதரவு பெருகியது .அதுவரை தூங்கி கிடந்த அரசு எந்திரம் விழித்துக் கொண்டது. .                            

                                 தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று சொல்லி அவரைக் கைது செய்து ஜெயிலில் தள்ளியது அரசு.  தற்கொலை முயற்சிக்கு ஓரண்டு சிறை தண்டனை தரப்பட்டது. அங்கும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். கட்டாயப் படுத்தி மூக்கு வழியாக அவர் உயிரை நீடிப்பதற்கான திரவ உணவு தரப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் தண்டனை முடிந்து அவர் ஜெயிலில் இருந்து விடுதலை அடைவதும், வெளியில் வந்தவுடன் தன் உண்ணவிரத போராட்டத்தைத் தொடர்வதும் , மீண்டும் தண்டனை பெற்று சிறையில் அடக்கப் படுவதும் , அங்கும் போராட்டத்தை தொடர்வதால் கட்டயப்படுத்தி திரவ உணவுகள் வழங்கப் படுவதும் 11 ஆண்டு களாகத் தொடந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது . இன்று அவருக்கு வயது 39. உலகில் நீண்டகாலம் உண்ணாவிரதம் இருந்து வரும் போராளி இவர்தான் என சரித்திர பதிவுகள் சொல்கின்றன.

                             ஊழலுக்கு எதிரான அன்னா ஹஜாரேயின் போராட்ட்டத்தை சல்லி சல்லிய அலசித் தீர்த்தன இந்திய பத்திரிக்கைகளும் , டிவி மீடியாக்களும். ஆனால் மன உறுதி மிக்க ஒரு பெண் போராளியின் 11 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் அவற்றின் கண்ணில் படவில்லை . சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் மீடியாக்களின் இக்குறுகிய கண்ணோட்டம் குறித்து ஹிந்து பத்திரிக்கையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று எழுதிய கட்டுரை பெரும் விவாததை தேசிய அளவில் உண்டாக்கியது . இருந்தபோதும் உலகின் பல்வேறு நடுகளில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களும், ஐரோப்பா பார்லிமெண்ட் உறுப்பினர்கள் பலரும், பிரிட்டனின் பசுமை கட்சியும் சானுவின் இப்போராட்டத்தை நிறுத்த உடனடி ந்டவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

                                மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் கிழக்கு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து தங்க்ஜம் மனோரமா என்ற 34 வயது பெண்மணியை தீவிரவாதி என்று சொல்லி அஸ்ஸாம் ரைபில்ஸ் என்ற ராணுவ பிரிவு 2004 ஜுலையில் விசாரணைக்கு அழைத்து சென்றது. ஆனால் அவர் மறுநாள் கற்பழிக்கபட்டும் ,குண்டுகள் உடலை சல்லடையாக்கியும் பிணமாக அருகில் உள்ள கிராமத்தில் கிடந்தார் .  . மனோரமாவின் உடல் சவக்கிடங்கில் எடுக்கப்படவில்லை. மணிப்பூர் முழுதும் போராட்ட களமாகிப் போனது.   மூன்றாம் நாளில்  இம்பாலில் இருந்த அஸ்ஸாம் ரைபில்ஸ் பிரிவு கட்டடத்தின் கேட் முன்னே திடீரென கூடிய பெண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு எழுப்பிய கோஷங்கள் இப் பிரச்சனையின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது இராணுவத்தினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டத்தின் வீச்சை அதிகப்படுத்தியது.நாடு முழுவதும் இச்சட்டத்திற்கு எதிரான கண்டக்குரல்கள் ஓங்கி ஒலித்தன

                                பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையில் இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க  ஐந்து நபர் கமிட்டியை அமைத்தது. ஜுன் மாதம் 2005ல் இக்கமிட்டி தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்பித்தது . அதில் மக்களை அடக்கி ஒடுக்கும் மனித உரிமை மீறல் மிகுந்த இக்கொடிய சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும். அதற்கு பதிலாக இந்தியா முழுதும் தற்சமயம் அமலில் உள்ள  சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் சட்டத்தையே (Unlawful Activities (Prevention) Act, 1967,) கலவரப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் விரிவு படுத்தலாம் என அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பு அதிகாரங்கள் இல்லாமல் கலவரப் பகுதிகளில் இராணுவம் செயல் பட முடியாது என்று சொல்லி அப் பரிந்துரைகளை நிராகரித்தார். பொருளாதரச் சீர்திருத்தம் பற்றி பேசும்போதெல்லாம் அதற்கு மனித முகம் வேண்டும் எனக் கூறிவரும் பிரதமர் மன்மோகன் சிங் இச்சட்டத்திற்கு மனித முகம் கொண்டு வர உரிய திருத்தம் செய்யப்படும் என தொடர்ந்து சொல்லி வருகிறார் . ஆனல் இது வரையிலும் அச்சட்டம் குறித்து உருப்படியாக எந்த  நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இராணுவத்திலுள்ள உயர் அதிகார மையங்கள் அவர்களின் "சகல" நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் அச்சட்டத்தில் அரசு கை வைக்காமல் பார்த்துக்கொள்கின்றன என சொல்லப்டுகிறது.

                                  இச் சட்டம் அமலில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இராணுவத்தின் மனித உரிமைமீறல்கள் தொடர்கின்றன. இதை ரத்து செய்ய சொல்லி போராடும் வீர மங்கை ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும் 11 வது ஆண்டாக தொடர்கிறது.இதனிடையே ஷர்மிளா சமீபத்தில் கொடுத்த பத்திரிக்கை பேட்டியில் தான் எதற்கு எதிராக இத்தனை ஆண்டு காலம் போராடி வருகிறேனோ அந்த சட்டம் வாபஸ் பெறும் வரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும், அதன் பின்னரே தான்  நீண்ட நாட்களாக காதலித்து வரும் இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரஜையை திருமணம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். தனது மாநில மக்களின் பதுகாப்பிற்காக தன் உடலையே ஆயுதமாக்கிக் கொண்டு  போராடி வரும் அவரது துயரங்களை நேரில் காண சகிக்காத அவரது அன்னை ஐரோம் சக்கி அவரை நேரில் காண்பதையே தவித்து வருகிறார் .ஷர்மிளா தனது போரட்டத்தில் வெற்றி பெற வேண்டும்;  காதலித்து வருபவரை விரைவில் திருமணம் செய்ய வேண்டும்;  அவரைப் பெற்றெடுத்த தாய் அவரை நேரில் காணும் நல்ல சூழல் உருவக வேண்டும் என்பது தான் நம் அனைவரின் வாழ்த்தாக இருக்கட்டும்.   மத்திய அரசிற்கு அதற்கான ஞானம் பிறக்கட்டும் .

No comments:

Post a Comment