மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, February 16, 2025

சின்னஞ்சிறு கிளியே-கண்ணம்மா! -மகாகவி பாரதியார் பாடல் படங்களாக - Mahakavi Bharathiyar song Chinnanchiru Kiliye Kannamma in image files

சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா!       மகாகவி பாரதியார் பாடல் 

குழந்தைகளோடு  விளையாடுவது , பேசுவது  எல்லோருக்கும் எப்போதும் பிடித்தமான ஒன்று. வாழ்வின்  இன்பமான  தருணங்கள் யாதென கேட்டால் *குழந்தைகளோடு விளையாடும் நேரமே°  எனத்  தயக்கமின்றி யாரும்  சொல்வர். நான் இன்னும் கொஞ்சம்  அழுத்தமாக சொல்வேன்.

 

 சிறு குழந்தைகளின்   ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கி ரசிக்கும் போது  இறகு போல மனது ஆகிவிடும் . நம் குழந்தையாகவோ அல்லது நம் பேரக் குழந்தையாகவோ இருந்தால் மனசு இறக்கை  கட்டிப்  பறக்கும் .அவர்களது ஒவ்வொரு  அசைவும், செயலும், மழலைப் பேச்சும்  கோபத்தை  தணிக்கும் , துயரத்தை  ஓட்டும்,  மகிழ்ச்சியை  பிரவாகமாய் பொங்கி ஓடச் செய்யும்.  வார்த்தையில் அடங்காத அவ்உணர்வுகளை உணர மட்டுமே முடியும். சொல்லில் வடிப்பது யாருக்கும் கடினமே.  ஆனால் மகாகவி பாரதி கண்ணம்மா என் குழந்தை என்ற தலைப்பிலான சின்னஞ்சிறிய கிளியே கண்ணம்மா என்ற  பாடலில் கவித்துவம் மிக்க தனது  வரிகள் மூலம் அவ்வுணர்வுகளை சொல்லில் வரைந்த ஓவியங்களாகத் தீட்டித் தந்துள்ளான்.

 

பாரதியின் சின்னஞ்சிறு கிளியே பாடலை படித்து அது தரும் சித்திரத்தை மனிதில் வரைந்து கொண்டபின்னர்   உங்கள் குழந்தைகளின் உலகத்தை உற்று நோக்கினால் நீங்கள் அடையும் பரவசம் ஒரு புது அனுபவத்தை அள்ளித்தரும், இனி பாடலை படிப்போம் .அதன் கவிதை இன்பத்தை துய்ப்போம்  

கண்ணன் பாட்டு - கண்ணம்மா என் குழந்தை 

சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என் முன்னே
ஆடி வருந் தேனே!

சின்னஞ் சிறு கிளியே-1


















ஓடி வருகையிலே-கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால்-கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!




சின்னஞ் சிறு கிளியே -2

















கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ,-கண்ணம்மா!
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!



சின்னஞ் சிறு கிளியே-3















உன்கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்ந்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.



சின்னஞ் சிறு கிளியே 4
















இன்பக் கதைக ளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே-உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ?



சின்னஞ் சிறு கிளியே 5


Tuesday, January 14, 2025

To download Bharathiyar poems , short stories and his articles

                             To download Bharathiyar poems , short stories and his articles 

அன்பிற்கினிய பாரதி அன்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். மகாகவி பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் அனைத்தையும் pdf Format இல் பதிவறக்கம் செய்ய கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யவும் .

Please click the following link download poems , short stories and articles (on various subjects) of Mahakavi Bharathiyar   

https://drive.google.com/drive/folders/1js4bkcl8OoK8qgNoBcogZOQO5xOJ47Qp?usp=drive_link


Monday, October 02, 2023

Philosophical Quotes

 Philosophical Quotes 





Quote by Laozi


 Quote by Confucius




Quote by David Bohm


Quote by Guatama Buddha 



Quote by Pythagoras






Quote by Guatama Buddha

Monday, September 11, 2023

இன்று தமிழ் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியின் நினைவு நாள் -11.09.2023

 இன்று தமிழ் அன்னையின் தவப்புதல்வன்   மகாகவி பாரதியின் நினைவு நாள்  -11.09.2023

-
.



                       
தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை உயர்த்தி போற்றியவன் மகாகவி பாரதி .பிரம்மனின் தொழில் படைப்பு . அந்த படைப்பு தொழிலை இப் பூவுலகில் செய்பவர்கள் தொழிலாளிகளே எனச் சொல்லி அவற்றைப் பட்டியலிடுகிறான். 

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் பல வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே

கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே"

                      இப்படி படைப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு  எல்லாப் புகழும் சேரட்டும் என்பதை 

"பெரும் புகழ் நுமக்கே இசைக்கிறேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே !" 

என தொழிலாளர்களை நோக்கி கவி பாடுகிறான்.

                     விவசாயம் செய்து எங்களுக்கு உணவு , காய்கறி தருகிறீர்கள். எண்ணெய், பால், நெய் என எல்லாம் தருகிறீர்கள் . மரங்கள் அறுத்து எங்களுக்கு வீடு கட்டி தருகிறீர்கள் . நெசவு நூற்று ஆடை தருகிறீர்கள். எனவே நீங்கள் இந்த பூமியில் எங்களை காப்பவர்கள் என பாரதி சொல்வதை அவனது கவிதை வரிகளில் படியுங்கள்.

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கறி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லாடை செய்திடுவீரே
.
"விண்ணின் இன்றெமை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே "

                     அது மட்டுமா .தொழிலாளர்களே! நாட்டில் அறத்தை நிலை நாட்டுபவர்களும் , மக்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியும் தருபவர்களும் நீங்களே . எனவே சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் "எங்களது கண்ணுக்கு முன்னால் தெரியும் தெய்வங்கள் நீங்கள் தான் " .என பாரதி குதூகலிக்கிறான் .


நாட்டில் அறம் கூட்டி வைப்பீரே .
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே

தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

                         இந்த பாரத தேசம் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என பாரதி சொல்வதைப் படியுங்கள் .

பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென குவிப்போம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

                       அது மட்டுமா . "உலகத் தொழில்கள் அனைத்தும் உவந்து செய்வோம்" என இந்தியத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார் .

                        இரஷியாவில் மாமேதை லெனின் தலைமையில் புரட்சி நடந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வந்ததை வரவேற்று பாடிய மகாகவி பாரதி

"குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார் ".

                       என்று ஆனந்த கூத்தாடுகிறான்.பாரதி தனி   ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் அல்லவா . எனவே .கொடுமை கண்டு கொதிநிலை அடைந்த அவன் .வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.எனவேதான் "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்து பாடுகிறான். ."உலகத்துக்கு ஓர் புதுமை" என அப்புரட்சியைப் பறை சாற்றுகிறான். பாரதி இரஷியப் புரட்சியை பற்றி குறிப்பிடும்போது
"இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ"
என்கிறான்..உலகம் முழுதும் அப்புரட்சி பரவ ஏங்கி தவிக்கிகிறான். தொழிலாளர் தலைமையிலான ஆட்சியில் தான்எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறான்

                       1600 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி நம்மை வெள்ளையகளின் அடிமையாக்கியது வரலாற்று உண்மை. ஆனால் இன்று என்ன நடக்கிறதுஇப்போது உள்நாட்டு வெளிநாட்டு  கம்பனிகளுக்கு எல்லா சலுகைகளையும் வாரி வாரி வழங்கி  வெண்சாமரம் வீசி வரவேற்கிறது. காக்க இராணுவத்தையும் மேய்க்க போலீசையும் மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு  மற்ற எல்லாவற்றையும் அதானியிடமும் அம்பானியிடமும் தரத் துடிக்கிறது இப்போதைய மோடி அரசு .    மத்திய அரசு  தொழிலாளர்கள், விவசாயிகள் , நெசவாளிகள், அடித்தட்டு சிறு வியாபாரிகள் வேலை இழப்பது பற்றியோ அரசு கவலை படவில்லை . பெரு முதலாளிகள் ( CORPORATES) நலனை மட்டுமே பாதுகாக்கும் அரசாக இருக்கிறது அது. . ஏழை எளிய மக்களின் நலன் குறித்த அக்கறை அதற்கு ஏதுமில்லை .  தனது வாக்கு வங்கி அரசியலுக்காக  மக்களிடையே மத/ இன  வெறி ஊட்டி அவர்களை மோதவுட்டு வேடிக்கை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு  ஏற்கெனவே அரசியல் ரீதியாக பிளவுண்டு கிடக்கும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வவை முழுமையாக மழுங்கடிக்க எல்லாவித வேலைகளையும் செய்து வருகிறது . இந்திய தொழிலாளிவர்க்கம்  ஏற்கனவே போராடிப் பெற்ற 44 தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தொழிலாளர்களின்  உரிமைகளை பறிக்கும் நோக்கிலும் பெரு முதலாளிகளுக்கு கூடுதலாக அதிகாரம் தரும் நோக்கிலும்  நான்கு சட்டத் தொகுப்புகளாக சுருக்கி  உள்ளது மோடி தலைமையிலான  மத்திய அரசு .


 .எனவே பாரதி கண்ட கனவுலகம் படைத்திட " சிலர் கொழுக்க வைத்து  , பலரை வாடவைக்கும்  மத்திய அரசின்  பிற்போக்கான பொருளாதரக் கொள்கைகளையும் , மக்களை  பிளவு படுத்தும் மதவாத கொள்கைகளையும்  எதிர்த்துப் போராட வர்க்க ஒற்றுமையுடன் கூடிய ஒற்றுமை நமக்கு மிக அவசியம்.  

"ஒற்றுமை வழி ஒன்றே வழியென்பது ஓர்ந்திட்டோம் நன்கு - தேர்ந்திட்டோம் . மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக் கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம்" என்ற பாரதியின் வரிகளை போர் பரணியாகப் பாடுவோம்.


“பாரதி பிடித்த தேர்வடம் நடு
வீதி கிடக்கிறது- அதைப்
பற்றிப்பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித் தவிக்கிறது!

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் - நாம்
நடந்தால்  தேர் நடக்கும் - அன்றேல்
வெய்யில்  மழையில் கிடக்கும்"

                           என்ற பரிணாமன் கவதையை மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் நினைவு கூர்வோம். அவன் பிடித்து விட்டு சென்ற தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே.

குறிப்பு:
இந்து மத புராணங்களும், சாஸ்திரங்களும் காலத்தை யுகமாக பிரித்துள்ளனர்.
கிருத யுகம் - அறம், உண்மை நிறைந்த யுகம். வறுமையில்லை, துயரமில்லை.எங்கும் மகிழ்ச்சி தவழும் யுகம். இந்த யுகத்தில்அறக்கடவுளுக்கு நான்கு கால்கள் உண்டு. அரிச்சந்திரன் இந்த யுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுவதுண்டு.
எனவேதான் பாரதி இரஷியப் புரட்சியை பற்றி குறிப்பிடும்போது

"இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ"

என்கிறான். இரஷியப் புரட்சி மூலம் மக்களுக்கு கிருத யுகம் வந்துவிட்டதாக பழமையோடு புதுமையைப் பொருத்துகிறான்
திரேதா யுகம் - அறக்கடவுள் தன் ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார் .இராமன் அவதாரம் செய்ததது இந்த யுகத்தில் தான்
துவாபர யுகம்--அறக்கடவுள் தன் இரு கால்களை இழந்து இரண்டு கால்களுடன் இருப்பார் .மஹாபாரதம் நடந்தது இந்த யுகத்தில் தான்
கலியுகம்--அறக்கடவுள் தன் மூன்று கால்களை இழந்து ஒரு காலுடன் இருப்பார்

Tuesday, February 21, 2023

உலகத் தாய் மொழி தினமும் (21.02.2023 ) தமிழர் தம் கடமையும்

 

உலகத் தாய் மொழி தினமும் (21.02.2023 ) 

தமிழர் தம் கடமையும்



சர்வதேச தாய் மொழி நாளின்  வரலாறு            

  1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரமடைந்தன . அப்போது பாகிஸ்தான் நாடு  மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ( இன்றைய பங்களாதேஷ்) என இரண்டு பகுதிகாளாக இருந்தது . உருதுமொழியே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அன்றைய ஒன்றுபட்ட பாகிஸ்தான் அரசு அறிவித்த போது   வங்காள  மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பான்மை கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அதைக் கடுமையாக எதிர்த்து போராடினர் . போராட்டம் கிழக்கு பாகிஸ்தான் முழுதும் பரவியது .21.02.1952 அன்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பிரமாண்டப் பேரணியை கலைக்க காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது .அதில்  அப்துல் சலாம் , அப்துல் பர்கத் ,ரபீக் உதின் அஹமது, அப்துல் ஜபார், ஷபியூர் ரஹ்மான்  என்ற ஐந்து மாணவர்கள்   மரணமடைந்தனர் . தங்களது தாய் மொழியின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த இந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய் மொழி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ(UNESCO)  அமைப்பு  விடுத்த அறைகூவல் படி உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 தேதியன்று  சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

 என் மொழி தமிழ்! நான் தமிழன்!!

 நம் மொழி தமிழ் மொழி .தமிழர் என்பது நம் அடையாளம். தமிழ் உலகின் மூத்த மொழி. இலக்கிய இன்பத்தை வாரி வாரி வழங்கும் வள்ளல் மொழி .உயிருக்கு நேரான மொழி இது .”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் பாரதி.

 வாழிய செந்தமிழ் ;வாழிய நற்றமிழர் ;வாழிய பாரத மணித்திருநாடு என்று பாரதி வரிசை படுத்தி அடுக்குவதன் அர்த்தமே தேசியம் என்பது  நாம்  கடைசியாக வைத்துக்கொள்ள வேண்டிய அடையாளம். எனவே என் மொழி தமிழ் , நான் தமிழன். அதன்பின்னரே மற்றேல்லாம்  என்ற கோட்பாட்டை   ஒவ்வொரு தமிழரும் உயிர் மூச்சென கொள்ள வேண்டும் .

  திருதராஷ்டிர ஆலிங்கனம் என்றால் என்ன ? 

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு .குருசேத்திரப் போர் முடிவுக்கு வந்தது . கௌரவர்கள் கொல்லப்பட்டனர் . வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஆட்சிபீடம் அமரப் போகிறார்கள் . கௌரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் பார்வையற்றவர் . அப்போது  அங்கு அமர்ந்து  இருக்கிறார். தனக்கு பிரியமான மகன் துரியோதனனைக்  கொன்ற பீமன் மீது அவருக்குள்ளே  கடுங்கோபம்; வெறுப்பு. திருதராஷ்டிரன் ஒரு வரம் பெற்றவர் . அவர் யாரை வெறுப்புடன் ஆரக்கட்டி தழுவிக் கொள்கிறாரோ அவர் அப்பளமாக நொறுங்கிப் போவார்..அதற்கு  திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று பெயர்.

 இதை நன்கு அறிந்தவன்  கிருஷ்ணன். பாண்டவர்களில் ஒவ்வொருவராக திருதராஷ்டிரனிடம் அறிமுகம் செய்து ஆசி பெறவைத்த கிருஷ்ணன் , பீமனின் முறை வந்த போது , பீமன் போல் செய்யப்பட்ட ஒரு சிலையை திருதராஷ்டிரன்  முன் தள்ளிவிட்டதாகவும் , அவர் பீமன் என நினைத்து அச்சிலையை கட்டித் தழுவியதாகவும் அதன் மூலம் பீமன் கிருஷ்ணனால் காப்பற்றப்பட்டான் என்றும் மகாபாரதம் சொல்கிறது .

உலக மகா நடிப்பை  புரிந்துகொள்வோம் 

 மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு ஒரேநாடு ;ஒரே மொழி; ஒரே பண்பாடு என்ற கொள்கையை முன்னிறுத்தி வருவது யாவரும் அறிந்த ஒன்று .  அது இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாகக்   கொண்டுவர விரும்பும் ஹிந்தி மொழித் திணிப்பை கடுமையாக  எதிர்க்கும் தமிழர்கள் மீதும் தமிழ் மீதும்  உள்ளுக்குள்ளே வெறுப்பு இருந்தாலும் , தமிழ் மீது அதிகக் காதல் கொண்டது போல் நடிக்கிறது . காசியில் தமிழ் சங்கமம் நடத்துகிறது . பிரதமர் உலகில் மூத்த மொழி தமிழ் மொழி என்கிறார்; தமிழர்களை கவருவதாக நினைத்து தமிழில் பேசியும்  திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் சொல்லியும்  தமிழ்க்கொலை செய்கிறார். 

இவர்கள் நடிப்பில் ஏமாறாமல் உஷாராக இருப்போம் :

இவை போன்று  தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் காட்டும் கரிசனமும்  “திருதராஷ்டிர ஆலிங்கனத்துக்கான” முன்னோட்டமே என்பதை தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  இவர்களது நடிப்பில் மயங்கி ஏமாந்து விடாமல் உஷாராக இருப்போம் என ஒவ்வொரு தமிழரும் இந்த உலகத் தாய் மொழி தினத்தன்று சபதமேற்ப்போம். என் மொழி! என் பண்பாடு!! என உரக்க சொல்வோம். அதை எந்நாளும் காக்க இந்நாளில் உறுதி ஏற்ப்போம்  

 ...பி.சேர்முக பாண்டியன்