மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Saturday, October 09, 2021

பாபு தாராபாதா முகர்ஜி 9.10.1921 அன்று லாகூரில் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்

*பாபு தாராபாதா முகர்ஜி  9.10.1921 அன்று லாகூரில் ஆற்றிய  ஆங்கில உரையின் தமிழாக்கம்*


1. "அகில இந்திய (பர்மா உட்பட) அஞ்சல், ஆர்.எம். எஸ். ஊழியர் சங்கத்தின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டிற்கு என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த பெருமைக்கும், அன்பிற்கும் நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். இத்தகைய மதிப்பு நிறைந்த ஒரு மாநாட்டின் தலைமைப் பதவியை ஏற்று நடத்தும் தகுதியும். திறமையும் எனக்கில்லை. என்னுடைய குறைபாடுகளை நான் அறிவேன். இந்தியா, பர்மா எங்கணும் இருந்து வந்து குழுமியுள்ள சங்கப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி முக்கியமான பல தீர்மானங்களையும், திட்டங்களையும் விவாதிக்க, செயல்படுத்த வந்திருக்கின்றீர்கள். உங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக செயல்பட முடியுமா என்று அஞ்சுகின்றேன். என்னுடைய கடமை மிகப் பெரிது. என்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாடுகின்றேன். உங்களுடைய அன்பாலும், கட்டுப்பாடான நடத்தையாலும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டிய எனது கடமை எளிதாயிற்று. சென்ற ஆண்டில் பிரபல அரசியல் தலைவரும், அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஊழியர்களின் சிறந்த. நண்பனுமான உயர்திரு. கப்பர்டா நமது முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அவர் எல்வளவு 'வெற்றிகரமாக மாநாட்டை நடத்தினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2. 'அத்தகைய பெரும் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கின்றீர்கள். ஆனால் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்ததிலும் ஒரு முக்கியத்துவம் இருப்பதை உணர்கின்றேன். என்னுயை வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒரு எளிய கீழ்மட்ட அஞ்சலக ஊழியனாகக் கழித்துள்ளேன். என்னுடைய வாழ்வின் பெரும் பகுதியும், துயர் மிக்க வாழ்க்கையாகவே கழிந்தது. இத்தனை ஆண்டுகள் சேவை செய்த பின்னரும் இன்னும் துன்பத்தில் உழல்கின்றேன். என்னைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் தொழிற் சங்கத்தின் உண்மைத் தத்துவத்தை உணர்த்துகின்றீர்கள். தன்னுடைய தோழர்களுக்காக, சகோதரர்களுக்கு தொழிற்சங்கத்தில் உழைத்த குற்றத்திற்காக, அதிகார வர்க்கத்தால் கொடுமைப்படுத்தப்படும் எனக்கு நீங்கள் பேராதரவு தருகின்றீர்கள் என்பதையும், என்னுடைய தலைமையை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயங்கவில்லை என்பதையும் இந்தத் தேர்வு அறிவிக்கின்றது. அஞ்சல் துறை முதல்வர் சட்டவிரோதமாக என்னை இந்தியாவிலிருந்து பர்மாவிற்கு மாற்றவும், துன்புறுத்தவும் முயன்றாலும் நீங்கள் என்னைப் பெருமைப்படுத்தி வந்தீர்கள். உங்கள் சகோதரர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்பதையும், பிறருடைய தயவின்றி உங்கள் பிரச்சினைகளை நீங்களே உங்கள் சக்தி கொண்டு தீர்க்க முடியும் என்பதையும் உலகிற்கு அறிவிக்கவே என்னை இந்த மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள்.


3. “இந்த மாநாட்டில் என்னால் கலந்துகொள்ள இயலாது” என்று எண்ணினேன். கல்கத்தாவில் கடுமையான நோயால் அவதியுறும் எனது மனைவி, மரணப்படுக்கையில் இருக்கின்றார். மரணத்தின் வாயிலில் நிற்கும் என் மனைவியை விட்டுவிட்டு இங்கு வர இயலாது என்று அஞ்சினேன். என்றாலும் நீங்கள் எனக்களித்த மகத்தான பெருமையையும், நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே உங்கள்
அழைப்பை உவகையுடன் ஏற்றுக்கொண்டேன். என்னுடைய மனைவியும் இதற்கு சம்மதித்தாள். 


4. “இந்திய நாட்டின் எல்லைக் காவலனாக என்றென்றும் பஞ்சாப் விளங்கி வந்துள்ளது.நாடு வாழ்வதற்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்னணியில்: நிற்க, முதற்பலியாக பஞ்சாப் நின்றுள்ளது. அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஊழியர்கள் இன்றுள்ள பொருளாதாரமற்ற அடிமைத்தனங்களை உடைத்தெறியவும், விடுதலை பெறவும் நம்முடைய பஞ்சாப் தோழர்கள் பெரும் பங்கேற்க இன்று முன்வந்துள்ளார்கள். ஐந்து நதிகள் பாயும் செழிப்பான இந்த ஜீவபூமியில் நடக்கும் இந்த மாநாடு நிச்சயம் வெற்றி பெறும். முதல் இரண்டு அகில இந்திய மாநாடுகளையும் நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நமது பஞ்சாப் தோழர்களின் உறுதியையும், துணிவையும் பாராட்டுகின்றோம்.


5. "சென்ற மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்”. பெரிதும் விளம்பரப் படுத்தப்பட்ட அஞ்சல் விசாரணைக் குழுவின் முடிவு வெளியாயிற்று, அவர்கள் முடிவு எவ்வளவு பாதகமானவை, மோசமானவை, அபத்தமானவை, உழைப்பின் மதிப்பை துச்சமாக மதிப்பவை என்பது தெளிவாகி விட்டது. இந்தக் குழுவின் பயங்கரமான சிபாரிசுகள் எவ்வளவு மோசமானவை என்பதை நீங்களே உணர்வீர்கள். உங்களில் பலர் அதன் கொடுமைக்கும் ஆளாகியிருக்கின்றீர்கள்.

6. "சலுகைகள் எல்லாம்தானங்கள் போன்றவை.என்ன தானம் கொடுப்பதென்பதும், எவ்வளவு கொடுப்பதென்பதும் கொடுப்பவர் முடிவு செய்யவேண்டியவை. இரப்போருக்கு அதைப் பற்றிப் பேச உரிமை இல்லை” என்ற முன்னுரையுடன் தனது சிபாரிசுகளை துவக்கியுள்ளது இந்தக் குழு. அரசாங்கத்தை தானம் வழங்குபவராகவும், தொழிலாளர்களைப் பிச்சைக்காரர்களாகவும், கிடைக்கின்ற பிச்சையோடு நாம் திருப்தி அடைய வேண்டுமென்றும், இந்தக் குழு கூறுகின்றது. என்ன அவமானம்! என்ன கேவலம்!! என்னைப் போலவே உங்களுக்கும் ஆச்சரியம்! பொறுப்பு வாய்ந்த மனிதர்களைக் கொண்ட குழு; ஒரு நாகரீக அரசாங்கத்தால் இந்த 20-ம் நூற்றாண்டிலே நியமிக்கப்பட்ட ஒரு குழு; எப்படி இவ்வளவு சிறுமையான முடிவெடுத்தது? அரசியல் விவகாரங்களில் கூட நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் அளவு வர்க்க உணர்வு பெற்றுவிட்ட தொழிலாளர்கள் பெருகிவரும் இந்த நேரத்தில், தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் என்று இகழவும் துணிவு இருக்கின்றது. ஆண்டாண்டு காலமாக துன்பத்தாலும், அவமானத்தாலும் அவதியுற்றாலும் நாம் அமைதி காத்து வந்தோமே, அந்தக் குற்றத்திற்குத்தான் இன்று பிச்சைக்காரர் பட்டம் கிடைத்திருக்கின்றது. தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் போன்ற நிலையில்தான் இன்னும் அஞ்சலகங்களில் இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர்வதற்காகத்தான் நம்மைப் பிச்சைக்காரர்கள் என்று அழைத்தார்களோ! அரசாங்கம் போடுகின்ற எந்தப் பிச்சையையும் நாம் முணுமுணுப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் திருப்தி அடைய வேண்டும். மேலும் வேண்டும் என்று சத்தம் போடுவதில் பயனில்லை என்று இந்தக் குழு கூறு கின்றது,

7. "சகோதரர்களே, தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. உலகில் செல்வத்தை படைக்கும் ஒரே சக்தி தொழிலாளர் சக்தி. உழைப்பின்றி, வேலை செய்யாத உலுத்தர்கள், பிறர் உழைப்பைத் திருடுபவர்கள், உறிஞ்சுபவர்கள் சமுதாயத்தின் இரத்தத்தைக் குடித்து கொழுப்பவர்கள், செல்வத்தைப் படைக்கும் தொழிலாளர்களைப் பிச்சைக்காரர்கள் என்கிறார்கள். என்ன வேடிக்கை பார்த்தீர்களா? தொழிலாளியின் உழைப்பால் கிடைக்கும் செல்வத்தை அபகரித்துக் கொண்டு, தொழிலாளிக்கு பிச்சைக் காசுகளை கூலியாகக் கொடுப்பதும், தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் என்பதும் என்ன நியாயம்? அந்தப் பிச்சைக் காசும் கூட தொழிலாளியின் உயிர் உடலில் ஒட்டி இருக்கவேண்டும் என்பதற்காகவும், மறுநாள் மீண்டும் அவன் மற்றவர்களுக்காக உழைத்து செல்வத்தை உற்பத்தி பண்ணவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்படுகின்றது.


8."தோழர்களே, தொழிலாளி உழைப்பை மறுத்தால் இந்த உலகம் என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு மணி தானியம் விளையாது, ஒருமுழத் துணியும் நெய்யப்படாது; செங்கல்லும் இடம் பெயராது; ஒரு குடிசையும் கட்டப்படமாட்டாது அந்தப் பருத்துக் கொழுத்து ஆடம்பர உடையணிந்து செல்வத்தில் புரளும் உருவங்கள், தங்களுடைய வர்க்கத்தின் கீழ்த்தரமான குணங்களை பகட்டாகக் காட்டுபவர்கள், பசிக்கு உணவின்றியும், உடலைமூடத் துணியின்றியும். தங்கவீடின்றியும் தவிப்பர். தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் என்று அழைக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், தோழர்களே, இந்த மாயையை உதறித்தள்ளுங்கள். உறக்கத்தில் இருந்து விழித்தெழுங்கள். உங்களை உணருங்கள். உங்களது உண்மை மதிப்பு என்னவென்று நினையுங்கள். உங்கள் சக்தியை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இலட்சியத்தை நோக்கி விரைந்து நடைபோடுங்கள், உங்கள் உள்ளம் உறுதியுடன் இருந்தால் ஆண்டவனும் உங்களுக்குத் துணை இருப்பார்.




9. "சகோதரர்களே, இந்த விசாரணைக் குழுவிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதன் அங்கத்தினர்கள் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள், உங்கள் குறைகளை எடுத்துரைக்கக் கூடியவர்கள் என்று யார், யாரை நம்பினீர்களோ, அவர்களை எல்லாம் -உங்கள் சங்கங்கள் குறிப்பிட்டவர்களை எல்லாம்-இந்தக் குழுவில் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் பிடிவாதமாய் மறுத்தது. நீங்கள் தேர்ந்தெடுக்காத, உங்களால் விரும்பப்படாத, உங்கள் நம்பிக்கையைப் பெறாத அங்கத்தினர்களைக் கொண்ட ஒரு குழுவின் முடிவு, உங்களைக் கட்டுப்படுத்தாது. உங்களைப் பற்றி அந்த விசாரணைக் குழு கவலைப்படவில்லை. நீங்களும் அந்தக் குழுவைப் பொருட்படுத்தக்கூடாது 


10.."உங்களுடைய ஆலோசனைகளையும், சாட்சியங்களையும் பயனற்றவை, முரண்பாடானவை, நம்பத்தகாதவை என்று கூறி இந்தக் குழு நிராகரித்தது. ஆனால் அரசாங்கம் கொடுத்த வேறு பல அறிக்கைகளை, பல போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்கள் கொடுத்த திட்டங்களை மட்டும் சீர்தூக்கி பார்த்தது. அவற்றிலும்கூட உயர்ந்த சம்பள விகிதங்களை சிபாரிசு செய்த சில போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்களின் கருத்தைப் புறக்கணித்தது. குறைந்த ஊதியம் சிபாரிசு செய்த போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்களின் கருத்தை ஏற்றுக்கொண்டது. இந்தக் குழுவின் நோக்கம் ஒன்றுதான். பணச் செலவு கூடாது. என்பதே அது. இந்தக் குழுவின் முடிவுகள் எல்லாம் அந்த ஒரே அடிப்படையில்தான் எடுக்கப்பட்டுள்ளது.


11. "பெரிய அதிகாரிகளின் ஊதியம் பற்றி சிபாரிசுகள் செய்யும்பொழுது இந்த சிக்கனம் காற்றோடு போயிற்று”. ஆயிரக்கணக்கில் ஊதியம் வாங்கும் சிலருக்கு சென்ற ஆண்டில் குறைந்தது இருமுறை சம்பளம் உயர்த்தப்பட்டது  ஊதியம் வாங்கும் சிவருக்கு சென்ற பட்டது. ஆனால் குறைந்த சம்பளம் பெறும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பற்றி கவலைப்படவில்லை. கூடுதல் சம்பளம் வேண்டுமென்ற நமது கோரிக்கைகள் நம்பத்தகாதவை. பொறுப்பற்றவை. செலவு மிக்கவை என்றெல்லாம் கூறி நிராகரித்தனர். வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் குமாஸ்தாக்களுடனும் வேலை ஆட்களுடனும் நம்மை ஒப்பிட்டிருக்கிறது அரசாங்கம், நமது குடும்பம் வாழ்வதற்கு தேவையான ஊதியம் பற்றி இந்தக்குழு கவலைப்படவில்லை.யாரோடு ஒப்பிடுவது? யார்யாருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது? அரசாங்கம் கொள்கை வகுத்து அதனை மற்றவர்கள் பின்பற்றுவதா? அல்லது கொள்ளையடிக்கும் முதலாளிகள் காட்டும் வழியை அரசாங்கம் கொள்கையாக பின்பற்றுவதா? இன்றைய உலகில் நாம் வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான ஊதியம் வழங்குவதை மறுத்து அதனை. நியாயப்படுத்த போலிச் சமாதானங்களும், வேண்டாத வாதங்களும் கூறப்படுகின்றன.


12.“இங்கிலாந்து நாட்டுத் தொழிலாளர்களுக்கு யுத்த காலத்திற்கு முன்பு கிடைத்த சம்பள விகிதத்தையும் விலைவாசி உயர்வால் இன்று அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஊதிய உயர்வையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் பிரிட்டிஷ் அஞ்சலக சகோதரர்களுக்கும். நமக்கும் எத்தகைய மாறுபாடான, நேர்விரோதமான நியாயம் வழங்கப்படுகின்றது என்பது தெளிவாகும். 18 வயதுள்ள ஆங்கில நாட்டுத் தபால்காரருக்கு வேலை நியமனத்தின் போது வாரம் 20 ஷில்லிங்குகள் வாரச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று 53 ஷில்லிங்குகள் வாரச் சம்பளமாகப் பெறுகின்றார்கள். இதில் இரண்டு உண்மைகள் வெட்ட வெளிச்சமாக விளங்குகின்றது. ஒன்று, பிரிட்டிஷ் தபால்காரரின் சம்பளம் ரூ.175 என்பது. மற்றது யுத்தகாலத்திற்கு முன்பிருந்ததை போன்று 160 சதம் அதிக சம்பளம் பெறுகின்றார்கள் என்பது .இந்தியாவில் அஞ்சலக எழுத்தர்களுக்கு 25 வருட சேவைக்குப் பிறகு கிடைக்கக்கூடிய மிக அதிக சம்பளம் ரூ.120 முதல் 140 வரை மட்டுமே. இதற்கிடையில் இருமுறை அவர்களது திறமையின் தகுதி (Efficiency Bar) கடுமையாக சோதிக்கப்படுகிறது. அவர்களது சம்பளம் ரூ. 35 முதல் 50 வரை. இங்கிலாந்தில் ரூ.175 சம்பளம் வாங்கும் தபால்காரருடன் உங்கள் நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன மகத்தான அதிர்ஷ்டம் உங்களுடையது! உங்களில் பலருக்கு பெயரளவிற்குத் தான் உயர்வு கிடைத்தது. சிலருக்குப் பாதகமும் நேர்ந்தது.


13. "இங்கிலாந்தில் தபால்காரருக்கு மட்டும்தான் சம்பளம் உயர்ந்ததென்பதல்ல. மற்றவர்களுக்கும் அப்படியே. சம்பள உயர்வுக்கான கூடுதல் செலவை, அஞ்சல் கட்டணங்களை உயர்த்தி ஆங்கில நாட்டு அஞ்சல் நிர்வாகம் சமாளித்துள்ளது. நம்முடைய நாட்டு நிலை என்ன? ஒவ்வொரு ஆண்டும் அஞ்சல் துறையின் அதிகப்படி வருவாய் பொது நிதிக்குச் சேருகின்றது.  சென்ற 8 ஆண்டுகளில் மட்டும் அஞ்சல் துறை 8 கோடி ரூபாய் பொது நிதிக்குக் கொடுத்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலிருந்து அஞ்சல் துறையின் மூலமாக லாபம் சம்பாதிக்கும் நோக்கம் கிடையாது என்று உறுதிமொழி கூறினார்கள். ஒவ்வொரு ஆண்டும் அப்படி லாபம் சம்பாதிப்பது எதைக் காட்டுகின்றது? உறுதி மொழியைக் காப்பாற்றுகின்ற லட்சணம் இதுதானா?


14. 'ஆண்டாண்டு காலமாக அமைதியாகப் பொறுமையுடன் செயலற்றுக் கிடந்த குற்றத்திற்காக நாம் இவ்வளவு கேவலமாக நடத்தப்படுகின்றோம். இதற்கு நாமே பொறுப்பு. நாம் உரிமைக்காகப் போராடாமல் இருந்ததால், நம்முடைய குறைகள் கேட்கப்படவில்லை. நாம் இன்னும் சற்று சத்தம் போட்டிருந்தால் அரசாங்கம் நமக்கு இத்தகைய அநீதி இழைத்திருக்காது. பழைய அனுபவங்களிலிருந்து நாம் பாடம் பெற்றுக் கொள்ள வேண்டும் . நாம் மனிதர்களாக வாழவேண்டுமென்றால் நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டுமென்றால் தொடர்ந்து போராடத்தான் வேண்டும்.


15. "தோழர்களே, இன்று நம் முன்னுள்ள பிரச்சினை உணவுப் பிரச்சினை. நியாயமான வாழ்க்கை வாழ்வது பற்றிய பிரச்சினை. நாம் வாழ்வதற்குத் தேவையான ஊதியம் பெறுகின்றோமா? நம்முடைய குழந்தைகளுக்குத் தேவையான உணவும், உடையும், கல்வியும், இருக்க இடமும், மருத்துவ வசதியும், எதிர் காலத்திற்கான ஏற்பாடுகளும் செய்ய நமது முதுமை காலத்திற்கு ஏதேனும் சேமிக்க முடிகின்றதா? நாம் வாழவில்லை. எப்படியோ காலத்தைக் கடத்துகின்றோம். நாட்களைத் தள்ளுகின்றோம். இந்த வாழ்க்கை வாழ சம்மதிக்கின்றீர்களா?


16. "மனிதன் மிருகமல்ல. உடலின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் மிருகவாழ்க்கையில் மனிதன் திருப்தி கொள்ள முடியாது. அவனுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டால் உள்ளத்து இயற்கை புரட்சி செய்யும். மனிதன் உயர்ந்த லட்சியங்களுக்காக வாழவேண்டும். மனிதத் தன்மையையும், மனிதாபிமானத்தையும் வளர்க்க வேண்டும். உலகையும், உலகைத்தோற்றுவித்த ஆண்டவனையும் உணரவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். கவலைகளில் இருந்து மனிதன் விடுபடாதவரை உயர்ந்த நோக்கங்கள், லட்சியங்கள் பற்றி சிந்திக்க இயலாது. ஒரு மனிதனின் வருவாய், அவனது குடும்பக் கவலைகளில் இருந்து விடுதலை அளிக்கும் வகையில், உள்ளத்தை உயர்ந்த லட்சியங்களில் செலுத்த வாய்ப்பளிக்கும் படியாகவும் இருக்கவேண்டும்.


17. ''ஆனால் அஞ்சல் இலாகாவில் பணி புரியும் நமது வாழ்வு எப்படி உள்ளது? மிகக் குறைந்த ஊதியம். மீளாத கவலை. கடுமையான, நீண்ட நேர, களைப்புற வைக்கும் உழைப்பு. மிருக வாழ்க்கை போன்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை நீடிக்க நாம் அனுமதிக்க முடியாது. அது இயற்கைக்கு விரோதம். எனவே வேலை நேரத்தைக் குறைக்க, ஊதியத்தை உயர்த்த நாம் உறுதிகொள்ள வேண்டும். தொடர்ந்து ஓய்வில்லாது மீண்டும், மீண்டும் நாம் போராடினால்தான் நமது வாழ்க்கை வாழத் தக்கதாக அமையும். மனிதன் மிருகமாக வாழ்வதா? அல்லது கடலினும் பெரிய துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடி, மனிதர்களாக வாழ்வதா? என்பதை இந்த மாநாட்டில் முடிவு செய்யவேண்டும்.


18. "நமது கேவலமான வாழ்க்கைக்கு நாமே காரணம். நம்முடைய தகுதிக்குத் தக்கவாறுதான் நமக்கு பலன் கிடைக்கும். உயர்ந்த நிலையிலிருந்து நாம் தாழ்வடைந்து விட்டோம். நம்மை நாமே மறந்துவிட்டோம். நமக்கு உள்ளம் இருக்கின்றது என்பதையும் ஆண்டவனின் தத்துவம் அதுதான் என்பதையும் மறந்து விட்டோம். நம்மைச் சூழ்ந்துள்ள மாயையை விலக்கினால், கேவலமான அச்சத்தையும், சுயநலத்தையும், விதியின் பெயரால் தாழ்ந்துகிடக்கும் செயலின்மையையும் வெற்றி கொண்டோமென்றால், நமது உள்ளம் உண்மை வெற்றியில் பூரிப்படையும். என்ன தடை எதிர் நின்றாலும் அதனை உடைத்தெறியும்.


19. "இந்த அஞ்சல் குழுவினிடமிருந்து நீங்கள் பெரிதும் எதிர்பார்த்தீர்கள். 
உங்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அரசாங்கம் விரும்புவதாக
எண்ணினீர்கள்.  உங்கள் நம்பிக்கை பாழானது. முந்தைய நிலையில் எந்த
முன்னேற்றத்தையும் இந்தக் குழு உங்களுக்கு வகுத்துத் தரவில்லை. ஏமாற்றத்தால் நீங்கள் செயலிழந்து இருக்கப் போகின்றீர்களா? அல்லது 'உங்கள் சக்தி அனைத்தையும் திரட்டி, ஓய்வின்றிப் போராடி உங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கத்திடமிருந்து பெறப் போகின்றீர்களா?


20.“அஞ்சல் குழுவின் முடிவுகள் திருப்தியற்றவை. அவமானகரமானவை, நீங்கள் கேவலமாக நடத்தப்பட்டிருக்கிறீர்கள்” என்று நீங்கள் உறுதியாக நம்பினால், உங்கள் நிலையை உயர்த்த வேண்டுமென்பதில்  உறுதியாகயிருந்தால் உங்கள் முன் ஒரே ஒரு வழிதான் உள்ளது. ஒன்றுபடுங்கள். நியாயமான ஊதியம் பெறவேண்டுமானால் ஒன்றுபடுங்கள்; வேலைநேரம் குறையவேண்டுமானால் ஒன்றுபடுங்கள்; நிர்வாகத்திலுள்ள உயர் அதிகாரிகள் உங்களை மதிக்க வேண்டுமானால் ஒன்றுபடுங்கள்.

21. ''அஞ்சல் விசாரணைக் குழுவின் தலைவர் திரு.ஹசல்டைன் தான்  தந்தி விசாரணைக் குழுவிற்கும் தலைவராயிருந்தார். தந்தி ஊழியர் சங்கத்தின் செயலாளர் திரு ஹென்றி பார்ட்டன் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலும் தந்தி விசாரணைக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தந்தி ஊழியர்களை பிச்சைக்காரர்கள் என்றோ அவர்களது சாட்சியங்கள் தகாதவை என்றோ சொல்லவில்லை. ஆனால் அதே  தலைவரைக் கொண்ட அஞ்சல் விசாரணைக்குழு நம்மை பிச்சைக்காரர்கள் என்றும், நமது சாட்சியங்கள் நம்பத்தகாதவை என்றும் கூறினால் அதற்கு காரணமென்ன? நம்முடைய சங்கம் தந்தி ஊழியர் சங்கத்தைப் போன்று பலம் வாய்ந்தல்ல; நமக்குள்  ஒற்றுமையில்லை; நம்மைத் துச்சமாக மதிக்க முடியும் என்பதே.



22. தோழர்களே, வேண்டுகோள்களும், கருணை மனுக்களும், விண்ணப்பங்களும், பயனளிக்காது. உங்களது. சக்தியை அரசாங்கத்துக்கு உணர்த்தும் வகையில், நீங்கள் ஒன்றுதிரள வேண்டும். நமது சங்கம், சரியான முறையில் செயல்பட்டால், தந்தி ஊழியர் சங்கத்தைவிட பன் மடங்கு சக்தி உடையவர்களாக இருப்போம். சில தடைகள் இருக்கின்றன. நாம் நாடெங்கும் சிதறிக் கிடக்கின்றோம். சங்கம் சீர்பட்டால் நமது பலம் பெருகும். நாடெங்கும் உள்ள அஞ்சல் ஊழியரிடையே சங்க உணர்வு பெருகி வருகின்றது. ஒவ்வொருவரும் பொது நன்மைக்காகத் தங்களால் இயன்றவற்றை செய்ய முன்வருகின்றனர். செழுமையான, வளம் நிறைந்த பூமி நம் முன்னேயுள்ளது. இந்த நிலத்தில் விதைத்து பெரும் பலன் அடைய துணிவு நிறைந்த ஊழியர்கள் சிலர் வேண்டும்.


23. "சக்தியுடன் செயல்பட சங்கம் ஒன்றுபட்டதாய் இருக்க வேண்டும்; தொடர்பின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சங்கங்கள் பரந்து கிடப்பதால் பயனில்லை. அவற்றின் சக்தியற்ற தன்மையை அதிகாரிகளும் அறிவார்கள். ஒரு மத்திய சங்கத்தின் கீழ் நாம் ஒன்றுபடாவிட்டால் நம்முடைய முயற்சிகளில் வெற்றி பெற முடியாது. இதை அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். சங்கம் நிறைவேற்ற வேண்டும். அகில இந்திய சங்கம் உண்மையான வலிமை பெற வேண்டு மென்றால் நம்மிடையே உள்ள குறுகிய மனப்பான்மையையும், மாநில மனப்போக்கையும் விட்டு விட வேண்டும். பரந்த நோக்கமும், நம்பிக்கையும் கொண்டு அகில இந்திய சங்கத்தையும் நமது ஒன்றிணைப்பையும் உறுதி செய்ய வேண்டும் . வர்க்க உணர்வு வேண்டும். நாம் சங்கத்திற்காக இருக்கின்றோம்; சங்கம் நமக்காக இருக்கின்றது என்று நாம் உணர வேண்டும்.


25.  "நம்முடைய சங்கம் பலம் வாய்ந்ததாக விளங்க சில அடிப்படைகள் தேவை. வங்க மாநில மாநாட்டில் நான் விரிவாக குறிப்பிட்டவாறு அந்த அடிப்படைகள் வர்க்க உணர்வு, சங்க உணர்வு, போதுமான நிதிநிலை, பிரச்சாரம், சட்ட சபையில் பிரதிநிதித்துவம், கட்டுப்பாடு என்பவையே.

"இவ்வளவு கேவலமான முடிவுகளை தந்ததற்காக அஞ்சல் விசாரணைக் குழுவும் அதனை அமைத்து முடிவுகளை ஏற்றுக் கொண்ட அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும். நாம் இந்த குழுவின் முடிவுகளை நிராகரிக்கின்றோம். அரசாங்கமும் அதனை நிராகரிப்பதுதான் கௌரவம். இனி நாம் செய்ய வேண்டியது என்ன? நான்கு முக்கிய கடமைகள் நம்முன் உள்ளன. அஞ்சலக ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தைப் பெறுவது, வேலை நேரத்தை குறைப்பது, மேலதிகாரிகளின் நடத்தையில் மாற்றங்காண்பது, நிர்வாகத்தில் நமது குரல் மதிக்கப்படச் செய்வது என்பவையே.

"சென்ற மாநாட்டில் எழுத்தர்களுக்கும், அஞ்சல் பிரிப்பவர்களுக்கும் ஒரே சம்பள விகிதம் வேண்டும் என்று கேட்டோம். அந்த தீர்மானத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. வாழ்க்கைக்கு போதுமான சம்பளம் வழங்காதபோது, திறமையின் தகுதியை சோதிப்பது என்ற பெயரால் ஊதிய உயர்வுக்குத் தடை விதிப்பது முறையற்றது. உயர்ந்த பதவிகளில் வாழ்க்கைத் தேவையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. நிர்வாகத் திறமை மிக்கவர்களும், உயர் தகுதிகள் உடையவர்களும், உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அந்தப் பதவிகளுக்கு கௌரவம் கொடுக்க திறமைத் தகுதியைச் சோதிப்பது நல்லது.


"இன்றுள்ள நிலையில் அஞ்சல் ஊழியர்கள் 10-12 மணி நேரம் வேலை செய்கன்றனர். பொறுப்பு மிகுதி . கடுமையான உழைப்பு. பணப் பொறுப்பு வேறு. அதிகாரிகள் வேலை இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. நேரத்தைக் குறைப்பது மட்டுமின்றி  வேலைப் பளுவைக் கண்டறிய உள்ள அளவீடுகளையும் மாற்றி அமைக்கவேண்டும்,

"அஞ்சல் இலாகாவில் கீழ்மட்ட ஊழியர்களுக்கு அதிகாரிகள் வழங்கும் தண்டனை முக்கியப் பிரச்சினையாக உள்ளது. அஞ்சல் அதிகாரிகள் ஊழியர்களை பொதுப்பணி ஊழியர்களாக (Public Servant) அல்லாமல் அடிமைகளாகத்தான் (Public Slaves) நடத்துகின்றனர். சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு அஞ்சலகத்திற்குள் நுழைந்து பார்த்தோமென்றால் ஊழியர்களை அதிகாரிகள் எவ்வாறு விரட்டுகின்றனர்; மிரட்டுகின்றனர் என்பதைப் பார்க்கலாம். எங்கே வேலை போய்விடுமோ என்ற அச்சத்தால் ஊழியர்கள் வாய்திறவாது அடங்கிக் கிடக்கின்றனர். இலாகாவில் ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

"ஊழியர்களை அச்சுறுத்தியே அஞ்சல் இலாகாவில் நிர்வாகம் நடைபெறுகின்றது. அதிகாரிகள் வெளியிடும் உத்தரவுகளும், குறிப்புகளும் அச்சுறுத்துபவையாய் உள்ளன. உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், குறை இருந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ஒவ்வொரு முறையும் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஊழியர்களின் நாணயம், கடமையுணர்ச்சி இவற்றை இலாகா மதிப்பதேயில்லை. தண்டனைகளால்தான் நடப்பதாக எண்ணுகின்றனர்.  அடிமை சந்தை நடத்துபவர்களைப் போன்று வேலை நடப்பதற்காக கையில்  கோலேந்திக்கொண்டு இருக்கின்றது நிர்வாகம். மனிதர்களின் நாணயத்தைக் கெடுக்க இதை விட வேறென்னவேண்டும்? மனிதனுக்கு நல்ல குணங்கள் உண்டு என்பதையே அதிகாரிகள் நம்புவதில்லை. அவர்கள் எண்ணப்படி, ஆண்டவன் மனிதனைப் படைக்கவில்லை, சாத்தான்தான் மனிதனைப் படைத்தான். எனவே: கோல்கொண்டு அச்சுறுத்தினாலன்றி வேலை நடக்காது என்று எண்ணுகின்றனர்.

ஒரு கடிதத்தை தவறுதலாக அனுப்பிவிட்டீர்களா? அபராதம் கட்டவேண்டும். வேலைமிகுதியால் சற்று கவனக் குறைவாக நடந்துவிட்டீர்களா? தண்டிக்கப்பட வேண்டும். சிறு சிறு குற்றங்களுக்கும் தண்டனை, அபராதம்,பதவிக் குறைப்பு. திறமைத் தகுதி (Efficiency Ear) தேர்வைக் கடந்து நீங்கள் அப்பால் செல்ல முடியாது. செலக்ஷன் கிரேட் (Selection grade) பதவி உயர்வு பற்றி கனவு காண முடியாது. இலாகாவின் சட்ட திட்டங்கள் அனைத்தையும் நாம் கரைத்து குடித்திருக்கவேண்டும் என்றும் அஞ்சல்துறை தலைவர் விரும்புகின்றார். இது யாராலும் நடவாத காரியம்.

"சகோதரர்களே, நமது குறைகளை நிர்வாகம் கவனிக்க வேண்டுமென்றால் நம்முடைய குரல் அங்கு ஒலிக்க வேண்டும். அதுவரை நமது நிலையில் முன்னேற்றம் ஏற்படாது. முன் யோசனையின்றி பல திட்டங்களை நிர்வாகம் கொண்டு வருவதும், அதன் விளைவால் ஏற்படும் பல துன்பங்களை நாம் அனுபவிப்பதும், பின்னர் அத்திட்டங்கள் கைவிடப்படுவதும், மாற்றப்படுவதும் நீங்கள் அறிந்ததே. முன் யோசனையற்ற திட்டங்களால் வீண் செலவும், ஊழியர்களுக்கு எண்ணற்ற தொல்லைகளும் ஏற்படுகின்றன. ஊழியர்  சங்கங்களின் கருத்துக்கு நிரவாகம் மதிப்பளித்தால் இத்தகைய தொல்லைகளும் செலவும் ஏற்படாது. நம்மை, நமது அகில இந்திய (பர்மா உட்பட ) அஞ்சல், ஆர்.எம். எஸ். ஊழியர் சங்கத்தை நிர்வாகம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கேட்க நமக்கு உரிமை உண்டு.

நம்  துன்பங்கள் எல்லையற்றவை. அவற்றில் ஓரளவு மட்டுமே நான் கூறியுள்ளேன். நீண்டநேரம் பொறுமையை சோதித்து விட்டேன். மேலும் பேசி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை.

"முடிவில் ஒன்றுமட்டும் கூற விரும்புகின்றேன். நீங்கள் மனிதர்கள். வாயற்ற கால்நடைகளல்ல. உங்களுக்கு உள்ளம் இருக்கின்றது. அதுவே ஆண்டவன் இருப்பிடம். உங்கள் தவறு, அறியாமை, சோம்பல் இவை தவிர வேறு எவற்றாலும் அந்தசக்தியை அடக்க முடியாது. விண்ணையும், மண்ணையும் மாற்றவல்ல. மகத்தான சக்தி உங்களிடத்தில் உள்ளது. இந்த சக்தியை செயல்படுத்தங்கள். உறுதியுடனும், தெளிந்த நோக்குடனும் ஒன்றுபடுங்கள். வெற்றி உங்களை நாடி ஓடிவரும்.

"இந்த மாநாட்டின் நினைவுகளை மட்டும் நீங்கள் எடுத்துச் சென்றால் போதாது. இந்தக் கொள்கைகளுக்காக அயராது பாடுபட வேண்டும். நாடெங்கும் உள்ள ஊழியர்களை ஒன்றுபடுத்துங்கள். அடுத்த ஆண்டு நாம் சென்னையில் கூடும்பொழுது, துச்சமாக நம்மை நிர்வாகம் மதிக்கமுடியாது என்பதை எடுத்துக் காட்டுவோம். நமது சங்க அங்கீகாரம் பற்றி ஒரு வார்த்தை. அங்கீகாரம் தருவதற்கு அரசு விதிக்கும் நிபந்தனைகள் இழிவானவை. நீங்கள அவற்றை ஏற்றுக் கொண்டால் உங்கள் சங்கத்தின் சுயேச்சையும் உரிமையும் பறிபோகும். சங்கம் வலிமை பெற்றால் அங்கீகாரம் கிடைப்பது உறுதி. அரசாங்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அங்கீகாரம் கொடுத்துத் தான் ஆகவேண்டும். சங்கத்தை பலப்படுத்துங்கள். அங்கீகாரத்தைத் தேடி ஓடாதீர்கள். அதுதானே வரும்.

"முடிவாக இந்தமாநாட்டின் வெற்றிக்கு காரணமாய் இருந்த பாவா தேஜா சிங், திரு.சுவாபெர்ரி, தொண்டர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி முடிக்கின்றேன். வணக்கம்.''

1 comment: