Com.S.Muruganantham APM Sivagangai HO left for Heavenly Abode at 9.30 pm on 16.1.2021 after massive heart attack.
*ஒரு நல்ல மனிதரின் மறைவு- துயரம் தரும் செய்தி*
தோழர் எஸ்.முருகானந்தம் அவர்களது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அஞ்சல் துறையில் பணியில் இருக்கும்போது சம்பவிக்கும் துன்பமான நிகழ்வுகள் அருகி வரும் சூழலில் அவரது மறைவை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
ஒரு நல்ல மனிதரை நமது கோட்டம் இழந்துவிட்டது. நல்ல பண்பாளர். பழகுதற்கு இனியவர்.காட்சிக்கு எளியவர். தனக்கென ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் அதை ஆபீஸ் நண்பர்களுக்கு வெளிக்காட்டாமல் மெல்லிய புன்னகையுடன் அனைவருடனும் நட்பு பாராட்டுவார். அலுவலகத்தில் தன் பணியை விட்டு விட்டு தன்னுடன் பணியாற்றும் தோழர்களுக்கு தானாக முன் வந்து உதவும் குணம் அவரின் தனிச்சிறப்பு. கனவிலும் பிறருக்கு தீங்கு எண்ணாதவர்.
நான் கோட்ட செயலராய் இருந்த போது ( 1995 அல்லது 1996 ஆக இருக்கலாம் ) ஒரு முறை தோழர் முருகானந்தத்தை பார்க்க வீட்டுக்கு சென்றபோது ஒரு பெரியவரை சைக்கிளில் ஏற்றி கொண்டு போய்க்கொண்டு இருந்தார். அவரை வீட்டில் விட்டு வருகிறேன் என்றார். திரும்பி வரும் வரை காத்திருந்த நான் யார் அந்த முதியவர் என்று கேட்டேன். யார் என தனக்கு என்று தெரியாது. சிரமப்பட்டு நடந்து செல்கிறார். வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்து சைக்கிளில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறேன் என்கிறார். முகம் தெரியாத ஒருவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மனித நேயத்துடன் உதவும் புண்ணியவான் அவர்.
அலுவல் வேலையில் யாரும் அவரை குறை சொல்ல முடியாது. அஞ்சல் துறையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை பொதுமக்களை கனவுடன் அணுகி நல்ல சேவை செய்வதோடு சீரியமுறையில் அவர்களுக்கு வழிகாட்டுவார். எந்த ஆபீஸில் வேலை பார்த்தாலும் அதன் வேலைப்பளுவை உயர்த்தி அந்த ஆபிசை தக்க வைத்து விடுவார்.
நான் மதுரை RO வில் AO(ICO) ஆக வேலை பார்த்தபோது 2014 கடைசியில் சிவகங்கை HO இன்ஸ்பெக்சன் வந்தேன். ஒரு SO வுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் . தோழர் முருகானந்தத்தை பார்பதற்காகவே அவர் SPM ஆக இருந்த போஸ் நகர் SO ஐ தேர்வு செய்து அங்கு சென்றேன். இன்ஸ்பெக்சன் என்றதும் பதற்றம் அடைந்தார். உங்களை பார்க்கவே வந்திருக்கிறேன் என்று சொன்னேன். SB branch ஐ அவ்வளப்பு அருமையாக வைத்திருந்தார். நான் SB குறித்து அவரிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருந்தது .
சங்கத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு உள்ளவர். எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். சங்க கூட்டங்களில் அபூர்வமாக எப்போதாவது பேசுவார். அப்போது நல்ல கருத்துக்களை சொல்லி வழிகாட்டுவார்.
அவரிடம் பழகியவர்களுக்கு , அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்களுக்கு அவரது மறைவு பேரதிர்ச்சியையும் பெரும் துயரத்தையும் தருகிறது. அவரின் மறைவுக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கின்றேன்.
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றேன்.
...பி.சேர்முக பாண்டியன்
No comments:
Post a Comment