மகாகவி பாரதி பிறந்த நாள்-11.12.2019
மகாகவி பாரதி பிறந்த நாள்-11.12.2019
..பி.சேர்முக பாண்டியன்
மதுரை.
கரடுமுரடான புரியமுடியாத
சொற்க்கோவையே கவிதை
என்று நாங்கள் பயந்திருந்தோம்.
அதை திருப்பிப் பார்க்கவே
தயங்கிக் கிடந்த நேரத்தில்
வாராது வந்த மாமணியாய்
வந்தாய் நீ எங்கள் தமிழ்
அன்னையின் செல்ல மகனாய்.
எளிய வார்த்தைகளில்
எங்களுக்கு புரியும் மொழியில்
உணர்ச்சி குவியலாய் வந்த
உன் கவிதை எங்களுக்கு
தேனாய் இனித்தது .
உன் கவிதை தென்றலாய்
வீசும்போது அதன் இன்பத்தை
அனுபவித்து மகிழ்ந்தோம்.
அது அனலாய் தகித்தபோது
அக்கினி குஞ்சுகளாய்
மாறி அநீதியை சுட்டெரித்தோம்.
கவிதை பயம்போக்கி
தமிழர்க்கு கவிதாரசனை
தந்த எங்கள் கவிராஜன் நீ.
மகாகவியே உன்
கவிதைகளின் சரமே
தமிழன்னைக்கான
அர்ச்சனை பூக்கள்.
அவைகளின் சாரமே
தமிழர்க்கான வாழ்வுநெறி
"தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும்
காணோம்" என்றாய்.
அதன் பின்னர்தான்
தமிழின் இனிமையை
நாங்கள் உணர்ந்தோம்
"எங்கள் தமிழ்மொழி
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே"
என்று சொன்னாய்.
அவைகளே பைந்தமிழின்
பெருமையை எங்களுக்கு
சொல்லித் தந்தன.
தமிழ் மொழி தந்த
பெருமிதத்தால்
"நாங்கள் தமிழர்
இந்திய மண்ணில்
தனித்துவம் மிக்கவர்கள்"
என்று தலை நிமிர்ந்து
ஓங்கி ஒலிக்கிறோம்
சமூக அநீதிக்கு எதிராய்
நாங்கள் ஆவேச குரல்
எழுப்ப உன் கவிதைகளே
எங்களின் ஆயுதங்கள் .
மாதருக்கு எதிரான
மடமையை கொளுத்த
உன் கவிதைகளே
எங்களது தீப்பந்தங்கள்
.
எல்லாம் சரி தான்.ஆனால்
"சாதிகள் இல்லை;
குலதாழ்ச்சி உயர்ச்சி
சொல்லல் பாவம்" என்று
உனது பாப்பா பாட்டில்
குழந்தைகளுக்கு சொன்னதை
மட்டும் நாங்கள் எங்கள்
குழந்தைகளுக்கு சொல்லித்தர
மறந்துவிட்டோம். எனவே
சா"தீய" சீழ் பிடித்த
சமூகமாய் இன்னமும்
தலைகவிழ்ந்து கிடக்கிறோம்.
தமிழன் என்று சொல்லி
தலைநிமிர்ந்து நடப்பதும்,
சாதிய சகதியில் சிக்கும்போது
தலை குனிவதும் எங்களது
வாடிக்கையாகிப் போனது
ஆனாலும் நாங்கள்
எங்கள் நம்பிக்கையை
இன்னும் இழக்கவில்லை.
உன் கவிதைகளே
எங்களுக்கு ஆதர்சமாய்
வழி காட்டிக் கொண்டே
இருக்கின்றன.
அவற்றின் வெளிச்சத்தில்
சாதியத்தை முறியடிப்போம்
என்றும் தலை நிமிர்ந்து
நடப்போம்.
No comments:
Post a Comment