மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, December 11, 2016

இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்

இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்


தமிழ் தாய்க்கு கிடைத்த வரம் மகாகவி. மீளாத்துயிலில் கிடந்த தமிழகத்தை தட்டி எழுப்பியவன். தமிழுக்கு  புது ரத்தம் பாய்ச்சி புத்துணர்வும் புது மலர்ச்சியும் தந்த மருத்துவன் .தன்னிலை கண்டு தவித்த தமிழன்னையின் ஏக்கம் பாரதி பிறந்த அன்று தான் தணிந்தது .வராது வந்த மாமணியாம் பாரதி தமிழர்க்கு தந்த கவிதைகளும் அவனது சிந்தனை செல்வங்களும் தமிழ் மண்ணில் காலம் காலமாய் வாழும். பாரதியைப் படிப்போம் . தமிழ் உணர்வு பெறுவோம்.

பாரதி வெறும் கவிஞன் மட்டுமல்ல .பன்முகத்  தன்மை கொண்டவன்

தேச  விடுதலைக்கான போராளி..
தன் கவிதைகளை விடுதலைப் போராட்ட ஆயுதமாக்கியவன் . அவனது கவிதைக் கனலில் தெறித்த நெருப்புக்கு பயந்தது ஆங்கில ஏகாதிபத்தியம்."எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு,. நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு" என நம்பிக்கை தந்து அடிமைப்பட்ட மக்களின் அச்சம் போக்கியவன்.

தமிழ் பற்றாளன்
தமிழ் மீது அளப்பரிய காதல் கொண்டவன், “எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி”* என மார்தட்டித் திரிந்தவன்" . அவன் ஆங்கிலம் ஹிந்தி சமஸ்கிருதம் என பல மொழிகள் தெரிந்தவன் . எனவே “ தான் நாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என பெருமை பொங்க உரக்க முழக்கமிடுகிறான் , தமிழின்  பெருமையை உணரவைத்து அதன் மீது  தமிழர்க்கு தமிழ் மீது பற்று ஊட்டியவன் .”சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என பிஞ்சு நெஞ்சிலே தமிழ் உணர்வைப்  பதியம் போட்டவன்.

 சிறந்த பத்திரிக்கையாளன்
 . சுதேசமித்திரனில் துணை ஆசிரியர். சக்கரவர்த்தினியின் பொறுப்பாசிரியர். இந்தியா வார இதழின்  ஆசிரியர் ,விஜய நாளேட்டின் ஆசிரியர் . சூரியோதயம் வார இதழின் ஆசிரியர் . பாலபாரதம் என்ற ஆங்கில இதழின் ஆசிரியன். இப் பத்திரிக்கைகளில் வந்த அவனது எழுத்துக்கள் தமிழர்களிடம் விழிப்புணர்வு அலைகளை  உண்டாக்கின. அரசியல் கேலிச் சித்திரத்தை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவன் அவன்  

சமுக சமத்துவத்திற்க்கான போராளி
தன் பாட்டுத் திறத்தாலே உலகை பாலிக்க நினைத்த பேராசைக்காரன் .மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வு  நிலையை  ஒழித்திட  சமரசமற்ற நிலை கொண்டிருந்தான் ."சாதி இரண்டொழிய வேறில்லை என்ற தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தென்போம்" "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" "இல்லை என்ற சொல்லை உலகில் இல்லையாக வைப்பேன்" என்கிறான் .   

பெண்ணுரிமை  போராளி
அவன் வாழ்த்த காலத்தில் பெண்களை படிக்க வைப்பதும் சமமாக நடத்துவதும் கனவினிலும் நடக்காத ஒன்றாய் இருந்தது . 
"பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை ஆற்றிடும் காணீர்" "ஆணும் பேணும் சமமெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையகம் தழைக்குமாம்" என்கிறான் .
உடலின் இருகண்களை  எவ்வாறு பேதமின்றி  பார்க்கிறோமோ அது போலவே அண்களும் பெண்களும் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்பதை  " கண்களில் ஒன்றினைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ" என்கிறான் பாரதி 

தமிழுக்கு  முதல் சிறுகதை தந்தவன்
மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்க கண்டத்திலும் சிறுகதைகள் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில் தமிழில் சிறுகதை போக்கு காணப் படவில்லை .
*சக்கரவர்த்தினி பத்திரிக்கையில்  1905ல் பாரதி எழுதிய *துளசிபாய் என்ற சிறுகதை தான் தமிழ் மொழியில் வந்த முதல் சிறுகதை* என அறியப்படுகிறது . எனவே அவன் தான் தமிழ் சிறுகதை முன்னோடி.

புதுக்கவிதைக்கு தடம் பதித்து தந்தவன்
மரபுக்கவிதை எழுதுவதே வாடிக்கையாக் கொண்டிருந்தனர் தமிழ் கவிஞர்கள்.அவனது வசனக் கவிதைகளே புதுக் கவிதைக்கு மடை மாற்றும்  ஆகர்ச சக்தியாக அவர்களுக்கு விளங்கின.. அதில் ஈர்க்கப்பட்ட கவிஞர்கள் பலரும் புதுகவிதைக்கு மாறினார் .

சிறந்த கட்டுரையாளன்
.பாரதியின் கட்டுரைத் தொகுப்புகள் தமிழுக்கு கிடைத்த வரம். அக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் மீது தயவு தாட்சண்யமின்றி  விர்சம்சனம் செய்து தன்னுடைய கருத்தை  பதிவு செய்திருக்கிறான் . சமூக ,அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகள்   உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவற்றை ஆராய்ந்து  படித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தான்.

இளைஞர்கள் பாரதியை படிக்கவேண்டும். குழந்தைகளுக்கு அவனை அறிமுகம் செய்ய வேண்டும். தமிழ் மொழி மீதான உணர்வை  அவர்களிடம் நெறிப்படுத்தும் . மொழி உணர்வு பெறுவோம். பாரதி புகழ் ஓங்கட்டும்





No comments:

Post a Comment