*ஆர்.என்.கே என்று அழைக்கபடும் அய்யா நல்லகண்ணு இன்று தனது போராட்ட மூச்சை நிறுத்திக்கொண்டார்*
*அவர் கடந்து வந்த பாதை.*
தமிழ் மண்ணில்
அறம் சார்ந்த அரசியலுக்கு உருவமாக திகழ்ந்தவர். அரசியல் பாரபட்சமில்லாமல் அனைத்து கட்சித் தலைவர்களோடு அன்பு பாராட்டியவர்.
மார்க்சியக் கொள்கை
காந்திய எளிமை என தனது வாழ்வை கட்டமைத்துக் கொண்டவர். சொத்து எனக்கெதுக்கு என்ற தனது கொள்கையால் தமிழ் மக்களின் சொத்தாகிப் போனவர். எங்கள் தமிழ் மண்ணின் அரசியல் அறத்திற்கு இவரே உதாரணம் என தமிழர்கள் கொண்டாடி வந்த கடைசி தலைமுறைத் தலைவர்.
தனது இளமைப் பருவத்தில்
அண்ணல் காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர். மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி சிறை சென்றவர்.
1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக இருந்தார். யார் மீதும் பகைமை பாராட்டாதவர் . எந்த பிரச்சினைக்கும் எளிய தீர்வுகளை சொல்லும் ஆற்றல் உடையவர். தனி மனிதர்கள் மீது அரசியல் ரீதியான கோபம் காட்டாத அவர் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் கொண்டவர்.
சிறுவயதிலேயே ஆர்வத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர்.
தேசவிடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு போராட்டம், கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டம் என தமிழ் மக்களின் நலம் காக்க, அவர்களின் உரிமைகளை பேண என்பதோடு மட்டுமின்றி சுற்றுப்புற கேடுகளில் இருந்து தமிழ் மண்ணைக் காக்க என பல் முனை போராட்டங்களை முன்னெடுத்தவர். .
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த போது தமிழகத்தில் அவர் கால்கள் படாத இடமில்லை. அவர் இந்திய விவசாயத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் நன்கறிந்தவர். விவசாயிகளின் தோழரை வாழ்ந்தவர். தாமிரபரணி ஆற்றை காக்க நீதிமன்றத்தில் தானே முன்னின்று வழக்காடி வென்றவர். பரணி ஆறு காத்தவர்.
தனது 80வது பிறந்தநாளையொட்டி கட்சி வசூலித்து கொடுத்த ரூ.1 கோடியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர். அக்கூட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட காரை எனக்கெதுக்கு இதெல்லலாம் என்று திருப்பித் தந்தவர் .
2022ல் தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்துடன் ரூ.5000-ஐ சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பிக் கொடுத்தவர்.
நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.
பணம் சேர்க்கவே அரசியல் என்ற இன்றைய சூழலில்
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுத்து மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்த ஒரு தலைமுறையின் கடைசி பிரதிநிதியாக நம் கண் முன்னே 101 ஆண்டுகள் வாழ்ந்த மாமனிதருக்கு
உங்களின் அறவழியில் அரசியல் பயணம் மேற்கொள்ள இளைஞர் பட்டாளம் திரளும் என்ற நம்பிக்கையில் விடை கொடுக்கிறோம். போய் வாருங்கள் அய்யா.
ப சேர்முக பாண்டியன்