மௌனமே மொழியான கவிஞன் நஸ்ருல் இஸ்லாம்(24.05.1899 --29.08.1976)
. மே 2009 ல் ஜனசக்தியில் .வெளிவந்த என்னுடைய இந்த கட்டுரை இது -பி.சேர்முக பாண்டியன், மதுரை
![]() |
NAZRUL ISLAM |
மாணவப் பருவத்தில் நண்பர்களோடு நஸ்ருல் விளையாடிக் கொண்டிருந்தான். எல்லோரும் அங்கும் இங்கும்
தாவிக்குதித்து விளையாடும் போது குருவிக் கூடு ஒன்று கலைந்து போனது. குஞ்சுகள் சிதறி ஓடின. நஸ்ருலின் கவனத்தை அவை ஈர்த்தன. கூட்டை நோக்கி அவன் ஓடினான். கூட்டைச் சரி செய்தான். குஞ்சுகளை அக்கூட்டில் பத்திரமாகச் சேர்த்தான். பெரு மூச்சோடு திரும்பினான். வேறு இடம் சென்று மீண்டும் விளையாடினான். இந்த நிகழ்வுதான், 'சடுமா பாக்கிர் சானா (குருவிக் குஞ்சு) என்ற கவிதையாக பிற்காலத்தில் அவனிடமிருந்து உருவானது.
அப்போது அவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனது தந்தை அகால மரணமடைந்தார். குடும்பம் நிர்கதிக்கு ஆளானது. 'துரதிருஷ்டப் பையன் (தூக்குமியா) எனப் பலரும் அவனுக்குப் பட்டப் பெயர் சூட்டி அழைத்தனர். பள்ளி வாசலில் முஜ்கினாகச் சேர்ந்தான் நஸ்ருல். அவனது பணி தொழுகைக்கு அழைப்பதுதான். அவனது படிப்பு தடைப்பட்டது. ஆனால் அவனுள் எழுந்த அறிவு தாகத்திற்கு அளவில்லை, இஸ்லாம் மதம் குறித்து அறிந்து கொண்டான். உருது, பாரசீக மொழிகளைக் கற்றறிந்தான்.
மீண்டும் 11ம் வயதில் மாணவனாக தன் படிப்பை நஸ்ருல் தொடர்ந்தான். ஆறாம் வகுப்பு முடிந்தவுடன் படிப்பை அவனால் தொடர முடியவில்லை. அசன்ரூ சோலுக்குச் சென்று டீக்கடையில் வேலை பார்த்தான். அவனது மாமா பாஜ்லெகரீம் ஊர் ஊராகச் சென்று கிராமிய இசைக் கச்சேரிகளையும் நாடகங்களையும் நடத்துவர். அவரது கலைக்குழுவில் நஸ்ருல் சேர்ந்தான் நாடகங்களில் மட்டுமின்றி பாடல் எழுதுவது அவற் றிற்கு இசை அமைப்பது என சகல துறையிலும் அவன் முத்திரை பதித்தான்.
1914ல் மீண்டும் அவனது பள்ளிப் படிப்பு தொடர்ந்தது. பல பள்ளிகள் மாறினாலும் 10ம் வகுப்பு வரை தொடர்ந்து படித்தான்.
எல்லோரும் 10ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு
தயாராகிக் கொண்டிருந்தனர். ஆனால் நஸ்ருல் தனது 18 வயதில் அத்தேர்வைப் புறக்கணித்துவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தான. அங்கு மூன்றாண்டுகள் சேவை செய்தான். ஹவில்தாராகப் பதவி உயர்வும் கிடைத்தது. ராணுவத்தில் இருந்தாலும் அவனது இலக்கிய தாகம் குறையவில்லை. சிறுகதை, நாவல்,கவிதை என அவனது எழுத்துப்பணி தொடர்ந்தது. அவனது முதலாவது கவிதைத் தொகுப்பு 'விடுதலை' வெளியானது. 'ஒரு குற்றவாளியின் கதை' என்ற சிறு கதைத் தொகுப்பும் அச்சில் ஏறியது. முதலாம் உலகப் போர் முடிந்த நேரம் அவன் பணியாற்றிய பெங்கால் ரெஜிமெண்ட் படைப்பிரிவு 1920ல் கலைக்கப்பட்டது. நஸ்ருல் கல்கத்தா திரும்பினான். அவனது முழு நேரமும் எழுத்தும் இசையுமாய் இருந்தது. அப்போது தான் "யந்தன் ஹாரா (அடிமைத்தளையிலிருந்து விடு தலை) என்ற அவனது முதல் நாவல் வெளியானது. இலக்கிய வாழ்வின் திருப்புமுனை துவங்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான முசாபர் அகமதுவுடன் நஸ்ருலுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதனால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் குறித்த பார்வையில், அணுகுமுறையில் அவரிடம் மாற்றம் ஏற்பட்டது. கல்கத்தாவில் 'பிஜ்லி (இடி முழக்கம்) என்ற இதழ் துவக்கப்பட்டது. நஸ்ருலின் கை வண்ணத்தில் வங்க மொழிக் கவிதை நவீனத்தவம் பெற்றது. அம்மொழியின் வீரியம் அவனது கவிதைகளில் பொங்கி வழிந்தது. அவரது 'வித்ரோஷி' என்ற தலைப்பிலான கவிதையைத் தாங்கிய பிஜ்லி இதழ் மட்டும் 29800 பிரதிகள் விற்பனையானது. நஸ்ருல் இஸ்லாமிய பழைமைவாதம் குறித்துக் கடுமையாகச் சாடினார். கிலாபத் இயக்கம் குறித்து அவர் குறிப்பிடுகையில் 'அர்த்தமற்ற மத அடிப்படை வாதத்தின் வெளிப்பாடு' என மிக வெளிப்படையாகச் சாடினார். அவரது கவிதைகள் மத ஒற்றுமையை வலியுறுத்தின.
மனிதநேயம் பாடின. மதவாதப் போக்குகளைச் சாடின
1921ல் ரவீந்திரநாத் தாகூரை சாந்தினிகேதன் சென்று நஸ்ருல் சந்தித்தார். அவருடன் பல விஷயங்களில் கருத்து மாறுபட்டாலும் அவரையே தன்னுடைய வழிகாட்டியாக நஸ்ருல் கருதினார்.
அலி அக்பர்கான் என்ற பத்திரிகை உரிமையாளரின் உறவுப் பெண்ணான நர்கிஸை நஸ்ருல் நேசித்தார். நேசம் காதலானது திருமணமும் நிச்சயமானது. ஆனால் திருமண நாளன்று மணம் புரிய மறுத்துவிட்டார் நஸ்ருல். திருமணத்தின் போது எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் வீட்டோடு மருமகனாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவரைப் புண்படச் செய்தது. அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்து உரிய ஆலோசனை கள் சொல்லி உற்ற நண்பராய் இருந்தது முசாபர்
அகமதுதான்.
இருந்தபோதும் இந்தக் காதல் முறிவு அவரின் அடிமனத்தில் சோகமாய் கப்பிக் கிடந்தது. காதல் குறித்து அவரது கவிதைகளில் அச்சோகம் தூக்கலாய் வெளிப்பட்டது
'தூமகேது' பத்திரிகை: 1923ல் நஸ்ருலின் படைப்புகளில், வேகமும் வீச்சும் அதிகமானது. 'ஒரு குருவின் சோகம்' என்ற சிறு கதைத் தொகுப்பு அக்னி பீலா என்ற கவிதைத் தொகுப்பு, 'யுகபாணி' என்ற தலைப்பில் அரசியல் கட்டுரை தொடர்கள், பட்டுராஷி (கலகம்) என்ற கவிதைத் தொகுப்பு அப்போது வெளியாயின. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து தேசத்தை விடுவிக்க நஸ்ருல் எழுதி தூமகேதுவில் வந்த கட்டுரைகள்
வங்க இளைஞர்களை உறுதி கொண்ட நெஞ்சம் உள்ளவர்களாய் மாற்றின.
தேசத்தின் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என தனது கொள்கையை 'தூமகேது'வில் நஸ்ருல் வெளியிட்டார். சுயராஜ்யம் என்ற குழப்பம் தேவையில்லை. பாரதத்திற்குத் தேவை பரிபூரண சுதந்திரம. பாரத மண்ணின் ஒரு அடியைக் அந்நியன் ஆளக்கூடாது. நாம்தான் நம்மை ஆளவேண்டும். நம்மை நாட்டாமை செய்ய அந்நியனுக்கு ஏது உரிமை? என தனது அரசியல் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார். தூமகேது வில் அவர் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் சட்ட விரோதமானவை என அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. செப்டம்பர் 1922ல் அவரைக் கைது செய்து ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து சிறையில் தள்ளியது. 1923ல் அலிப்பூர் சிறையிலிருந்து ஹூக்ளி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு பிரிட்டிஷ் ஜெயில் அதிகாரியின் செயலால் அவமரியாதையடைந்த
நஸ்ருல் தன்மானம் காக்க ஜெயிலில் 40 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தார். இதை அறிந்த ரவீந்திரநாத் தாகூர் "உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்.
வங்க இலக்கிய உலகிற்கு , வங்க மொழிக்கு நீங்கள் தேவை" என தந்தி அனுப்பினார். "விலாசதாரர் தெரியவில்லை " என்று எழுதி அந்த தந்தி நஸ்ருலுக்கு பட்டுவாடா ஆகாமல் தாகூருக்கே திரும்பி வந்தது .தாகூர் தனது இசை நாடகமான பசந்தாவை (வசந்த காலம்) நஸ்ருலுக்கு அர்ப்பணித்தார். நான் பெற்ற எல்லா விருதுகளையும் விட என் குருநாதர் தாகூர் தனது இசை நாடகத்தை எனக்கு அர்ப்பணித்ததைத்தான் நான் பெற்ற மாபெரும் விருதாகக் கருதுகிறேன் என நஸ்ருல் அடிக்கடி குறிப்பிடுவாராம்.
ஹூக்ளி ஜெயிலிலிருந்து விடுதலையான நஸ்ருல் ஏப்ரல் 1924ல் பிரமிளாதேவி என்ற இந்துப் பெண்ணை மணந்தார். ஹூக்ளியில் சிறிதுகாலம் வாழ்ந்த அவர் பின்னர் கிருஷ்ணா நகரில் வாழ்ந்தார். அவரது கவிதைகள் விடுதலை வேட்கை, தேசிய உணர்வு என்ற தளத்திலிருந்து விரிந்து அடித்தள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு, மதலற்றுமை என பல தளங்களில் இயங்கின
1929 டிசம்பரில் வங்க தேசத்தின் அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் அனைவரும் கல்கத்தாவில் திரண்டனர். நஸ்ருல் இஸ்லாமிற்கு பாராட்டு விழா, கல்கத்தா நகரமே விழாக்கோலம் பூண்டது. அப்போது அப்பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நஸ்ருலின் கவிதைத் திறனை வியந்து பாராட்டினார். அப்போது அவர் நினைவு கூர்ந்து பாடிக் களித்த நஸ்ருலின் பாடல் வரிகள்.
தள்ளாடுது படகு
கொந்தளிக்கும் வெள்ளம்
தவறிவிட்டது வழி
அறுந்துவிட்டது பாய்
சுக்கானைப் பிடிக்கத் துணிவுள்ளவர் வாருங்கள் இளைஞரே!முன்னே செல்லுங்கள்
சவால் விடுகிறது எதிர்காலம்
புயல் கடுமைதான்
எனிலும்போய்ச் சேர்ந்தாக வேண்டும் மறுகரை.
ஒரு நாள் நஸ்ருலுக்கு கடுமையான காய்ச்சல்.படுக்கையில் ஓய்வாக சரிந்து கிடந்தார். அவரைச் சுற்றி மருந்து மாத்திரைகள் தான். வெளியே லேசாகத் தூறிய மழை கடுமையாக மாறியது. இடியோடு கூடிய பெரும் கூச்சலில் ஊரே உறைந்து கிடந்தது. புயற்சாற்றின் பேரொலியில் ஊர் நடுங்கியது. திடீரென நஸ்ருல் படுக்கையை உதறித் தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினார். காலனே நடுங்கும் புயலையும் இடியையும் மின்னலையும் மாறிமாறி ரசித்தார். மழையில் நனைந்து ஆடினார். வலுக்கட்டாயமாக அவரை வீட்டிற்கு மனைவி இழுத்து வந்தார். உடனே பேனாவையும் பேப்பரையும் எடுத்த நஸ்ருல் ஒருமணி நேரத்திற்குள் வரைந்த கவிதை ஓவியம் 'ரூஜார்' (புயல் )மக்கள் மத்தியில் பிரபலமான நஸ்ருலின் கவிதை அது
தன்னுடைய 43 வது வயதிலேயே அழியாப் புகழ் பெற்ற நஸ்ருல் இஸ்லாம் Cerebral Palsy எனப்படும் மூளை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் பேசும் திறனை இழந்தார். கவிதைகள் பாடிய, பாடல்கள் இசைத்த ஒரு கவிக்குயிலுக்கு மௌனமே மொழியானது. வைத்தியத்தில் பணம் கரைந்தது. வறுமை அவரைத் துரத்தியது. புகழோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த போது அவருடன் இருந்தவர்கள் தங்களின் மனச்சாட்சியை மௌனமாக்கிக் கொண்டு மௌனமான கவிஞரை விலகிச் சென்றனர்.
1945ல் ராஞ்சிபிலுள்ள மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து லண்டனிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். நோயின் ஆரம்ப கட்டத்தில் தரப்பட்ட சிகிச்சை சரியில்லாததால்தான் நோய் முற்றி விட்டது என டாக்டர்கள் கை விரித்தனர். பின்னர் வியன்னாவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் இந்நோயைக் குணப்படுத்த முடியாது என இறுதியாகத் தெரிவித்துவிட்டனர். 1953ல் இந்தியா திரும்பினார்
1962ல் நஸ்ருலுக்கு பத்மபூஷன் பட்டம் தந்து கெளரவித்தது இந்திய அரசு. அதே ஆண்டில் தாகூர் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. பங்களாதேஷ் என்ற நாடு உருவானபோது அந்நாட்டின் வேண்டுகோள்படி டாக்கா சென்று அந் நாட்டு குடிமகனாக இருந்திட கவிஞருக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. 1974ல் டாக்கா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
*ஒருகரத்தில் புல்லாங்குழல்*,
*மறுகரத்தில் போர்முரசு*
என ஒருபுறம் தென்றலாக வீசும் மென்மையான கவிதைகளை எழுதிய நஸ்ருல் மறுபுறம் புயலாக மாறி கோபக்கனல் வீசும் கவிதைகளைத் தந்த புரட்சி கவிஞராவார்.